“மகிழ்ச்சிக்கு” ஒரு மாற்றுத் தேர்வு
English |
Marathi |Spanish
|Tamil
ஆசிரியர் பீடம்
“மகிழ்ச்சிக்கு” ஒரு மாற்றுத் தேர்வு
அகமுகமான உணர்வுநிலையை ஏற்படுத்தும் ஓர் எளிய பயிற்சியினால் நாம் வாழ்வின் ஆழமான ஆனந்தத்தைக் கண்டெடுக்கவும், எல்லா சூழ்நிலைகளிலும் நிறைமனதுடன் இருக்கவும் வழிபிறக்கின்றது.
“உனது வாழ்க்கை மகிழ்ச்சியை குறியாகக் இருக்கின்றதா?” என்று கேட்டால், நிறைய பேர் உடனடியாக “ஆம்” என்றே பதில் சொல்வர். “நீ அந்த மகிழ்ச்சியை கண்டுபிடித்து, அதை நிலைநிறுத்தி வைக்க உன்னால் முடிந்ததா?” என்று கேட்டால், அதே மக்கள் தம்மால் அவ்வாறு இயலவில்லை என ஒப்புக்கொள்ளும் சாத்தியம் அதிகம். மகிழ்ச்சியின் நிலையில்லாத் தன்மையை இந்துமதம் நேரடியாகவே விவரிக்கின்றது. என் குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமிகள், “உண்மையான மகிழ்ச்சியும், சுதந்திரமும் இந்த உலகத்தில் கண்டெடுக்கப்படுவது அல்ல, ஏனெனில் உலக மகிழ்ச்சி தவிர்க்கமுடியாதபடி துக்கத்துடனும், உலக சுதந்திரம் கட்டுக்களுடனும் பிண்ணப்பட்டுள்ளது” என்று சொல்லியுள்ளார்.
இந்த உண்மையை முண்டக உபநிஷத் (3.11.1-2) ஒரு கதை மூலம் வெளிப்படுத்துகின்றது.
“இரண்டு பறவைகள், எப்போதும் ஒற்றுமையுடன், ஒரே பெயர் கொண்டவையாக, ஒரே மரத்தில் தங்கியிருந்தன. அதில் ஒன்று அந்த மரத்தின் இனிப்பான பழத்தை உண்ணும், மற்றொன்று அதை உண்ணாமல் கவனித்த வண்ணம் இருக்கும்.” பழத்தை உண்ணும் பறவை ஜீவாத்மா எனப்படும் கட்டுண்ட உயிரைக் குறிக்கின்றது. கவனித்த வண்ணமே இருக்கும் பறவை பரமாத்மாவை ஒத்திருக்கின்றது, இது கடந்த நிலையில் இருக்கும் உயிர். கதை தொடர்கின்றது, “பழத்தை ருசித்து சாப்பிடுகையில், முதல் பறவை முணகிக் கொண்டே இருந்தது, தனது குறைபாடுகளினால் தடுமாற்றமடைதை நினைந்து. ஆனால், அது மற்ற பறவையாகிய, எல்லாராலும் துதிக்கப்படும் மகிமைபொருந்திய பரம்பொருளைப் பார்க்கையில், துக்கத்திலிருந்து விடுபடுகின்றது.”
இந்த வாசகங்களின் மூலம், வேதங்கள் ஒரு வழியைக் காட்டுகின்றன, மனது/அறிவு உணர்வுநிலைகளில் இருந்து கொண்டு, புறமுகமாக நாம் வாழ்கையில் எப்படி இன்பம் துன்பம் என்னும் சுழற்சியில் இருந்து விடுபடுவது என்பதை. நமது உள்ளார்ந்த தெய்வீகத்தை அறிந்து, அந்த ஆன்மீக விழிப்புநிலையில் நிலை கொள்வதே அதுவாகும். பரமகுரு யோகசுவாமி இதனை தனது நற்சிந்தனைப் பாடல் ஒன்றில் விவரிக்கின்றார்: “இன்பம் துன்பம் இரண்டும் மாயை. அன்பிலிருந்து பிரியாது நிற்கும் ஆத்மாவே, அறிவின் நிஜ சொரூபம். இப்படியிருக்குங்கால் இவையிரண்டும் உன்னை தொட மாட்டா. கானல் நீர் பூமியை அடித்துச் சென்று விட முடியுமா? கருணைநிறைந்த, உண்மையான, சர்வம் அறிந்த குருவின் திருப்பாதங்களில், உன்னால் முடிந்த அளவு உனது உள்ளம் கசிந்து உருகி இருப்பாயாக.”
நமது ஆன்மீகத் தன்மையின் ஆழத்தை நோக்கி, நாம் நம்முள் அடியெடுத்து வைப்பதாக கற்பனைச் செய்து பார்ப்போம். இந்த பயணம் நான்கு அடிகளை கொண்டுள்ளதாக எண்ணிக் கொள்வோம். எல்லா நான்கு அடிகளையும் எடுத்தப் பின்னர் நாம் ஆதியந்தமில்லாத உள்வெளியில் கலந்து, தூய அறிவுப்பொருளாகவும் (சாட்சியம்) அந்த அறிவுப்பொருளின் மூலமாகிய கடந்தநிலையாகவும் இருப்போம். இது அதி ஆழமான சமாதி நிலைகளாகும். நம்முள் மூன்று அடி எடுத்து வைக்கையில், ஜோதிப்பிரகாசமிக்க உள்நிலைகளுக்கும், ஆங்கே தேவாதி தேவர்கள் மற்றும் ரிஷிமார்களின் காட்சிக்கும் இடமுண்டு. இரண்டு அடிகள் எடுத்து வைக்கையில், எல்லா உயிர்களிடத்தும் தெய்வீக அன்பு பூண்ட நிலைக்குச் செல்கின்றோம். ஒரே ஓர் அடி உள்ளூராக எடுத்து வைக்கும்கால், நாம் மனநிறைவு, உள்நோக்கு மற்றும் படைப்பாற்றல் மிக்க உணர்வுநிலையை அடைகின்றோம்.
ஆரம்பத்தில், உள்ளூராக நான்கு, மூன்று ஏன் இரண்டு அடிகள் கூட எடுத்து வைப்பது மிகவும் விரக்தி அளிப்பதாக இருக்கும், காரணம் அத்தகைய சூட்சுமம் ஆன நிலைகளுக்குச் செல்ல நமக்கு ஆற்றல் இல்லாமல் இருக்கின்றது. சுலபமான, பயன்பாட்டுக்கு உரிய ஒரு செயல் யாதெனில், தினசரி காலைப் பொழுதில், சமய சாதனை நேரத்தில் இந்த முதல் அடியை எடுத்து வைத்து, பின்னர் அந்த படைப்பாற்றல் மிக்க சைதன்யத்தை நாள் முழுதும் நிலை நிறுத்தி வைக்க முயற்சிப்பதாகும். மற்ற அடிகள் யாவும் எப்பொழுதும் இருக்கவே செய்கின்றன, நாம் எதிர்காலத்தில் செயல்படுத்தி நிலைகொள்வதற்கு என.
சக்கரங்கள்
அகமுகமான நமது நான்கு அடிகள் நேரடியாகவே சக்கரங்களுடன் தொடர்பிக்கின்றன. இவை நரம்பு மண்டலங்கள் அல்லது உணர்வுநிலை மற்றும் சக்தியின் மைய இடங்கள் ஆகும், இவை நமது சூக்கும உடல்களில் முதுகுத் தண்டு நெடுக அமைந்துள்ளன. ஏழு அடிப்படைச் சக்கரங்கள் உள்ளன. முதல் மூன்று உணர்ச்சி மற்றும் பட்டறிவு மனதுடன் சம்பந்தப்பட்டு உள்ளன, முன்னர் கதையில் கூறப்பட்ட மரத்தின் பழங்களை சுவைத்து மகிழும் பறவையின் அனுபவம் இங்கே இருக்கின்றது. முதல் சக்கரம் (முதுகுத் தண்டின் அடிப்பாகத்தில் உள்ளது) மூலாதாரம், இது நமது ஞாபகத்தை ஆழ்கின்றது. இரண்டாவது, சுவாதிஷ்டானம் (தொப்புளுக்கு கீழே உள்ளது) செயற்காரண/வாதகாரண மண்டலத்தை ஆழ்கின்றது. மூன்றாவது மணிபூரகம், இது ஆழுமைச்சக்தி மையமாகும். நாம் உள்முகமாக திரும்பாமல், இந்த முதல் மூன்று சக்கரங்களிலேயே நமது தினசரி வாழ்க்கையை வாழ்ந்து வருவது இயற்கையானதுதான், இவற்றை விட அதிகமான எதனையும் அனுபவிப்பது அரிதாகவே இருக்கும்.
நான்காவது சக்கரம் அனாகதம் (இருதயத்திடம் உள்ளது). இது நேரடியாக அறியும் ஆற்றல் மையமாகும், இந்த மண்டலத்தில்தான் நாம் உள்முகமாக முதல் அடி எடுத்து வைக்கையில் அனுபவங்களைக் காண்போம். இது மறைநூட்களில் இதயக் கமலம் என்று குறிப்பிடப்படுகின்றது.
ஐந்தாவது சக்கரம், விசுத்தம் (தொண்டைப் பகுதியில்), தெய்வீக அன்பு மையமாகும், இது நாம் இரண்டாவது அடி எடுத்து வைக்கையில் அனுபவத்திற்கு வருகின்றது. ஆறாவது சக்கரம், ஆக்ஞை (மூன்றாவது கண்), தெய்வீக காட்சிக்கு உரியது, நாம் மூன்று அடிகள் உள்ளே எடுத்து வைக்கையில் அனுபவிக்கப்படும். ஏழாவது, சஹஸ்ராரம் (தலை உச்சியில்), ஒளிக்கும் தெய்வீக நிலைக்கும் உரிய மையம், நாம் நான்காவது அடியை உள்ளே எடுத்து வைக்கும்கால் அனுபவிக்கப்படும்.
நாம் முதல் அடியை எடுத்து வைத்து, அனாகத சக்கரத்தில் செயல்படுகையில் என்ன அனுபவம் கிட்டும் என்று பார்ப்போம். குருதேவர் இதனை கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், மற்றும் எல்லாவிதமான உருவாக்கம் செய்யும் மனிதர்களின் இடம் என விவரித்திருக்கின்றார். ஒவ்வொரு முறையும் நீ ஒரு பொருளை வடிவமைப்பு அல்லது உருவாக்கம் செய்யும்போது, உள்ளே வீற்றிருக்கும் அழகை நீ உனது நரம்பு மண்டலத்தின் மூலமாக தோற்றத்திற்கு கொண்டு வருகின்றாய். இது ஓர் அழகுநிறைந்த இடமாகும், நீ எல்லா நேரமும் இங்கே இருக்கலாம், உனது முதுகுத்தண்டின் சக்தியை உணர்ந்த வண்ணம். அந்த பொலிவு மிக்க சக்தியை நீ உணரும் அதே வேளையில், நீ உணர்ச்சி மற்றும் பட்டறிவு மனதுடன் தொடர்பை அறுத்து, உள் உணர்வு நிலைக்கு ஓங்கிச் செல்கின்றாய்.
முதுகுத்தண்டில் இருக்கும் சக்தியை உணர சில நிமிட மூச்சுப் பயிற்சி உதவும். ஓர் எளிய யுக்தி யாதெனில், 9 கணக்கு மூச்சியை உள்ளே இழுத்து, ஒரு கணக்கு நிறுத்தி, பிறகு ஒன்பது கணக்கு வெளியே விட்டு, மீண்டும் ஒரு கணக்கு நிறுத்தவும். இந்த பிரணாயமத்தை சில நிமிடங்கள் செய்து, முதுகுத்தண்டும் அதில் இருக்கும் ஆன்மீக சக்தியும் அறியப்படும். ஒரு தெளிவான குழாய் ஒன்று, முதுகுத்தண்டின் நடுவே வீற்றிருக்கின்றது, இது தலை உச்சியிலிருந்து மஞ்சள் ஒளியால் நிரப்பப் படுவதாக காணவும். பிறகு இந்த தூய உயிர்ச் சக்தி முதுகுத் தண்டு வழியாக வெளியே நரம்பு மண்டலத்திற்கு பாய்வதாகப் பார்க்கவும்.
சவால்கள்
நாம் ஒரு தினத்தை திருப்தி,படைப்பாற்றல் மற்றும் உள்நோக்கு உடைய உணர்வுநிலையில் துவங்கி இருப்பினும், இந்த பாதுகாப்பு வெகு விரைவிலேயே தொலைந்து போகும் சூழ்நிலைகளை நாம் சந்திப்போம். ஓர் அடி உள்முகமாக எடுத்து வைத்ததனால் பெறும் விழுமிய நிலையை எப்படி நாம் நிலைநிறுத்திக் கொள்வது? மிகவும் அடிப்படை தேவை எதுவென்றால் இந்து மதத்தின் இயமங்களைப் பின்பற்றுக் கொள்வது. அதர்மக் காரியங்களான பொய் சொல்வது மற்றும் மற்றவர்களைக் காயப்படுத்துவது போன்றவை, மனதையும் உணர்ச்சிகளையும் தொந்தரவுச் செய்து நம்மை புறமுகமான உணர்வுநிலைகளுக்குள் இழுத்து விடும்.
கருத்து வேறுபாடுகள் விதண்டாவதமாக மாறி விடாமல் இருப்பது முக்கியம். கருத்து வேறுபாடுகள் இயற்கையே, ஆனால் இவற்றை அறிவுப்பூர்வமாகவும் சுமூகத்துடனும் கையாள வேண்டும். நாம் எப்போதும் விட்டுக்கொடுக்கும் பாங்கினால் பேச்சுவார்த்தைகள் சண்டையாக மாறாது. குடும்பத்தில் உள்ள சச்சரவுகள்தான் மிகவும் நிலைகுலையச் செய்வதாக உள்ளன. இந்த நிலைக்கு காரணம் நாம் வீட்டில்தான் நமது உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்க முடியும், நாம் ஒரு நாள் முழுவதும் வேலையிடத்திலும் பள்ளியிலும் சேகரித்த விரக்திகளை வெளிப்படுத்தும் இடம் வீடுதான் என்ற தவறான கருத்து. சுமூகம் நிலைக்க வேண்டி, நாம் இந்த அணுகுமுறையை மாற்றி, எல்லா குடும்பத்தாருக்கும் இல்லமே ஓர் அடைக்கலம், இதில் நமது உணர்ச்சிகளினால் மற்றவர்களை
அமைதியிழக்கச் செய்யக் கூடாது. ஓர் இல்லத்தின் நெறிக்கோட்பாடு அலுவலகம், தொழிற்சாலை மற்றும் ஏனைய வேலையிட நெறிக் கோட்பாடுகளுக்கும் மேலான தரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என குருதேவர் வலியுறுத்தி உள்ளார். வீட்டில் பூசல்களும் சச்சரவுகளும் ஏற்படாமல் இருக்கும் நோக்கில் நாம் மன இறுக்கத்தை மற்ற வழிகளில் போக்கலாம்: ஒரு கடற்கரை அல்லது பூங்காவில் நடந்து செல்வது, யோகா மையத்திற்கு சென்று பயிற்சி செய்வது அல்லது வீட்டுக்குச் செல்லும் முன் ஒரு கோயிலில் நின்று வழிபட்டு விட்டுச் செல்வது.
மனநிறைவு மற்றும் நன்றியறிதல்
தாங்கள் காட்டும் பொருளை வாங்கினால் இன்னும் அதிக மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என்று, ஒவ்வொரு நாளும் நாம் ஏராளமான விளம்பரத் தாக்குதலுக்கு ஆளாகுகின்றோம். இந்த தொடர் கவர்ச்சி இழுப்பு, மனநிறைவுடைய உணர்வுநிலையை நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஒரு பெரும் சவாலாக இருக்கின்றது. கவர்ச்சியான புதிய மோட்டார்வண்டி, விரைவு கணிணிகள், அழகிய துணிமணிகள் – எல்லாம் சதாகாலமும் மயக்கி வைக்கும் மனோநிலையாகிய மகிழ்ச்சி என்பதற்கு உத்திரவாதம் தருகின்றன. இந்த உண்மையில்லா கவர்ச்சி சிக்கலுக்கு நாம் ஆளாகாமல் இருக்க, இக்காலத்தில் என்னிடம் இருக்கும் பொருள் எனக்கு போதுமானது என்ற மனநிறைவு பாங்கை கைப்பிடிக்க வேண்டும். நாம் இன்னும் அதிகமான ஒன்றை வாங்குவது நமக்கு இன்னும் அதிக மகிழ்ச்சி தரும் என்று அல்லாமல், மாறாக, நமது குடும்பத்தாருக்கு அதிக அர்த்தமுள்ள நன்மை தரும் என்பதற்காகவே.
உள்முகமான உணர்வுநிலையை நிலைபெறச் செய்வதற்கு நன்றியறிதல் முக்கிய அம்சமாகும். நன்றியறிதலின் முக்கியக் காரியம் நாம் வாழ்வில் பெற்றிருக்கும் எல்லா நல்லவற்றிற்கும் நன்றி செலுத்துவது. நமது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு நாம் நன்றி செலுத்துவது, நமது வேலை அல்லது பள்ளி வாழ்க்கைக்கு நன்றி செலுத்துவது, நாம் வாழும் வீட்டிற்கு நன்றியாய் இருப்பது, நமது சமயத்தின் ஞானத்திற்கும் பயிற்சிகளுக்கும் நன்றி செலுத்துவது.
“இக்கணத்தில் நான் நன்றாக இருக்கின்றேன்”
“இக்கணத்தில் நான் நன்றாகவே இருக்கின்றேன்” எனும் உறுதிமொழி, குருதேவரின் மறைஞான கருவி, சிவனோடு சாயுச்சியம் என்ற நூலில் வழங்கப்பட்டுள்ளது, இந்த உள்முகமான உணர்வுநிலையை நிலைக்கச் செய்வதற்கு உதவியானது. இது நிலைத்த நிகழ் காலத்தில் வாழத் தேவையானது, இக்கணத்திலும் கூட பரிபூரணமான உணர்ச்சியைப் பெற உதவியானது, இதனால் கவலைகள் நிறைந்த எதிர்காலமோ, வருத்தம் நிறைந்த கடந்த காலமோ கிடையாது. ஒரு நாள் முழுவதும் திருப்பத் திரும்ப இந்த பயிற்சியை நீ செய்யலாம். உன்னைக் கேள்வி கேட்பதன் மூலம் இதை செய், “இக்கணத்தில், இந்த நேரத்தில் நான் நன்றாக இல்லையா?” உடனே பதிலளித்துக்கொள், “நான் நன்றாகவே இருக்கின்றேன், இக்கணத்தில்.” கேள்வியைக் கேட்டு, பதிலையும் சொல்லி, நீ ஆக்கமுடன், மனத்திறனுடன், சமாதானத்துடன் அனாகத சக்கரத்தில் நிலைத்திரு.
நாம் உலகை நமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பார்க்கையில், வாழ்க்கை தொடர்ந்தாற்போல் உணர்ச்சிகளின் ஏற்ற இறக்கங்கள் உடைய ஒன்றாகின்றது. நாம் நமது மனநிறைவை உள்ளிருந்து பெறுகையில், வாழ்க்கை ஆனந்தமானதாகின்றது, நாம் அந்த ஆனந்தத்தை பிறருடன் பகிர்ந்துக் கொள்ளலாம்.