சாட்சியத்தின் பரிணாமம் பற்றிய முழு விரிவான, மிகத் தெளிவான வரைபடத்தை இந்து மதம் உருவாக்கியுள்ளது, இது நாம் முக்தியை நோக்கி பயணிக்கையில் வழிகாட்ட வல்லது.
சத்குரு போதிநாத வேலன்சுவாமிகள்
மனித இனம் செல்வம் மற்றும் அன்பைத் தேடும் தனது இயல்பான குறிக்கோளில் அவர்கள் நன்னெறியுடன் இருப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களைக் கொடுப்பதே எல்லா பெரும் மதங்களின் அடிப்படை நோக்கம் ஆகும். சில மதங்களில், நன்னெறியுடனும் கடமை தவறாது வாழ்வதுமே அதன் ஒட்டு மொத்த மதப் பயிற்சிகளாகும். ஆனால், இந்து மதத்தில் நான்காவது முக்கியத் தேடல் ஒன்றும் உண்டு: முக்தி. தர்மம், செல்வம், காமம் மற்றும் மோட்சம் என்ற இந்த நான்கும் புருஷார்த்தங்கள் எனப்படுகின்றன, இதன் பொருள் “ஆத்மாவின் குறிக்கோள்கள்.”
சதுர்வர்க்கம், “நான்கு-வகை நன்மை,” எனவும் அழைக்கப்படும் இவை, இந்து நெறியின் ஆதாரமாகின்றன. தர்மம், செல்வம் மற்றும் காமம் ஆகியன தத்தம் ரீதியில் ஏற்புடையவை மற்றும் முக்கியமானவை என்றாலும், அவற்றின் உச்ச முக்கியத்துவம் யாதெனில் உடல் பெற்ற ஆத்மா பல பிறவிக்கணக்கில் முதிர்ச்சி பெற்று ஈற்றில் மோட்சம் அடையத் தேவையான சூழ்நிலைகளையும் அனுபவங்களையும் வழங்குவதற்கே உள்ளது. வேறு மாதிரி கூற வேண்டின், தர்மம், செல்வம் மற்றும் காமம் ஆகியவற்றை விட இன்னும் உயர்ந்த நிலை குறிக்கோள் முக்தி. எனது குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமி, இந்த கருத்தை வெளிப்படுத்துகையில் கூறியது: “உன்னை அறிவதற்கே நீ பூமியில் இருக்கிறாய். பரமாத்மனை அறியும் நோக்கில் நீ பிறந்துள்ளாய். பணம் ஈட்டுவதற்கோ, உடையணிந்து மகிழ்வதற்கோ, உன்னை குஷிப்படுத்திக் கொள்வதற்கோ நீ இங்கு இல்ல. இவை தற்செயலானவை.”
நான்காவது தேடலாகிய முக்தி என்பது பூலோகத்தில் மறுபிறவி பெறுவதிலிருந்து விடுதலை அடைவதாகும், பிறப்பு இறப்பு எனும் சுழற்சியான சம்சாரத்தில் இருந்து நீங்குவதும் ஆகும். மோட்சம் அடையப்படும் வரையில், ஓர் ஆத்மா தொடர்ந்து பூமியில் பிறந்த வண்ணமே இருக்கிறது. இந்த அடைவை குருதேவர் இவ்வாறு விவரித்திருந்தார்: “தர்மம் சிறப்பாக ஆற்றப்பட்டு, நமது எல்லா கர்மங்களும் தீர்க்கப்பட்டு, கடவுள் பூரணமாக அறியப்பட்டு இருக்கையில் மோட்சம் கிட்டுகிறது.” வேறு வார்த்தைகளில் “கடவுள் முழுமையாக அறியப்பட்டு” என்பதை சொல்ல வேண்டுமாயின், அது தனிமனிதன் ஒருவன் உச்ச தெய்வீக உணர்வுநிலையில் நிரந்தரமாக நிலைபெற்றிருப்பதாகும். இது என்ன என்பதை முழுமையாக அறிய, மனிதனின் பல்வேறு உணர்வுநிலைகள் யாவை என்பதை நாம் பார்க்கலாம்.
மனித உணர்வுநிலைகளை பதினான்கு படிகளைக் கொண்ட ஓர் ஏணியாக பார்க்கவும். அடியில் உள்ள படிகள் கீழ் உணர்வுநிலைகளையும் மேல் பகுதி படிகள் உயர்ந்த உணர்வுநிலைகளையும் காட்டுகின்றன. இந்த உணர்வுநிலைகளைப் பற்றிய தலைச்சிறப்பான புரிந்துணர்வு இந்துக்களின் சக்கர அமைப்பில் காணப்படுகிறது. நமது ஹிமாலயன் அகாடமி அகராதியில், சக்கரம், சமஸ்கிருதத்தில் இதன் பொருள் “சில்லு,” மீவியற்பியல் அடிப்படையில் இது மனிதனின் உள் சரீரங்களில் இருக்கும் நாடிக் கொத்துகளை அல்லது சக்தி மற்றும் உணர்வு மையங்களைக் குறிக்கிறது. புற சரீரத்தில் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட நரம்புக் கொத்து அல்லது சுரப்பியுடம் சம்பந்தப்பட்டுள்ளது. அகக்கண் மூலமாக ஏழு ஆதார சக்கரங்களை வர்ணமிகுந்த, பல இதழ்களுடைய சில்லு அல்லது தாமரைகளாகப் பார்க்கலாம். அவை முதுகுத்தண்டில் வீற்றிருக்கின்றன, அடியிலிருந்து மேலாக கபாலம் வரை. இன்னும் ஏழு சக்கரங்கள், சுலபமாகப் பார்க்க இயலா விட்டாலும், முதுகுத்தண்டின் கீழே இருக்கின்றன. அவை மிருகவுணர்ச்சி நிலைகளின் இடமாக உள்ளன, இங்கேதான் கோபம், பொறாமை, வெறுப்பு, குறையுடைமை உணர்ச்சி, குற்றவுணர்ச்சி, சோகம் போன்றவை அமர்ந்துள்ளன. அவை கீழான, துன்பமிக்கக உலகங்கள், நரகலோகம் அல்லது பாதாளம் எனப்படுகின்றன. ஆக மொத்தம் 14 பெரும் சக்கரங்கள் இருக்கின்றன.
அவற்றின் சமஸ்கிருத பெயர்களும், மனித உடலில் அவற்றின் இருப்பிடமும் அட்டவணையில் காண்பிக்கப்பட்டுள்ளன, மேலும் ஒவ்வொன்றும் உணர்வு நிலை ஏணியின் ஒவ்வொரு படியாக எண்ணால் குறிக்கப்பட்டுள்ளன. தலை உச்சியில், சஹஸ்ரார சக்கரத்தின் மேல், அதற்கு உள்ளேயே இருக்கும் ஏழு நுட்பமான சக்கரங்கள் உட்பட மொத்தம் 21 சக்கரங்கள் இருக்கின்றன, நமது ஓவியத்தில் காட்டப்பட்டிருப்பது போல. ஒவ்வொரு சக்கரமும் ஓர் உணர்வு நிலையாகும், முந்தியதை விட இன்னும் உயர்ந்தது ஆகும், மேலானது ஆகும்.
சாட்சியம் ஒரு சக்கரம் மேலே எழும்பி செல்கையில், முரடான ஓர் உணர்வுநிலை நழுவி விழுந்து விடுகிறது, இவ்வாறே கீழான ஏழு சக்கரங்களில் நிகழ்கிறது. உதாரனத்திற்கு, ஆறாவது படியிலிருந்து ஏழாவது படிக்கு நகர்கையில், நம்மிடமிருந்து கடும் கோபம் நீங்கிவிடுகிறது.
உயர் சக்கரங்களில் இதுவே புதிய அதிஉயர் உணர்வு நிலை சித்திகளைப் பெறுவதாக தோற்றம் பெறுகிறது. எடுத்துக்காட்டிற்கு, நேரடி அறிவு நிலையிலிருந்து தெய்வீக அன்பு நிலைக்கு நாம் நகர்கையில், தெய்வீகத்தை எல்லாவற்றிலும் பார்க்கவும் அன்பு செலுத்தவும் கூடிய உணர்வுநிலை கிடைக்கிறது. பல பிறவிக்கணக்கில் மனித ஆத்மா ஒன்று, இந்த உணர்வுநிலை ஏணியில் படிப்படியாக ஏறுகிறது என்பதே இந்து பார்வைக் கோணம். எல்லா ஆத்மாக்களும் கீழான, சுயநலமிக்க நிலையில் துவங்கி, இறுதியில் இறை ஒளி மற்றும் அன்பு ததும்பிய பிரகாசமான நிலையில் இடம் பெறுகின்றன. இளம் பிராயத்திலிருந்து வயோதிகத்திற்கு முதிர்ச்சி அடையும் இயற்கையான காரியம் போலவே, ஒரு பிறவியிலிருந்து மற்றொரு பிறவி என இந்த செயல்பாடு தானாகவே நிகழ்கிறது.
எல்லாருக்கும் ஓர் ஆசிரியர் உள்ளார் என எனது குரு அடிக்கடி கூறியுள்ளார். ஏணியின் மேல் படிகளை ஒருவன் எட்டும் வரை, உலகம்தான் அந்த ஆசிரியர். குருதேவர் அந்த ஆசிரியருக்கு ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ விஷ்வகுரு மஹா-மஹாரஜ் என விளையாட்டாகப் பெயரிட்டு, இந்த விவரிப்பைக் கொடுத்துள்ளார்: “எல்லா வகையிலும் அவர் தனது பெயருக்கு ஏற்றால் போலவே செயல்படுகிறார், காரணம் விஷ்வ என்றால் ‘அனைத்தும், உலகத்திலுள்ள அனைவரும்,’ அடுத்தது குரு என்றால் கண்டிப்பாக ‘ஆசிரியர்.’ மஹாராஜ் என்றால் ‘பெரும் ஆட்சியாளர்.” நான் விஷ்வகுருஜி என அழைக்கும் அவர் மிகவும் பொறுமையாக போதிக்கிறார், எந்த விதமான சாக்குப் போக்குகளையும் ஏற்றுக் கொள்ளாமல், தனது பாடங்களைப் போதிப்பதில் விடாப்பிடியாக நிலைத்திருக்கிறார். . . சிறிது சிறிதாக, இறுதியில், ஒருகால் பல பிறவிகள் கடந்ததும், அவர் தங்களை எங்கே கொண்டு வந்திருக்கிறார் என்ற புரிந்துணர்வை அனைவரும் பெறுகின்றனர், அதாவது ஒவ்வொரு சுதந்திரத்திற்கும் விலை கொடுக்க வேண்டியுள்ளது, ஒவ்வொரு காரியத்திற்கும் பலன் உண்டு, பரிபூரணத்திற்கான பாதை மென்மேலும் மேலே எழும்புவதுதான்.”
உணர்வுநிலைகளில் மேல் நோக்கி ஏறுகையில், ஒரு சில வேளைகளில் ஒருவர் சிறிது காலத்திற்கு உணர்வுநிலை ஏணியின் பதினொன்றாவது படியில் சில காலம் தங்கியிருக்க துவங்குவார் – நேரடி அறிவுநிலையாகிய இதய சக்கரத்தில் – இதனால் மேல்நோக்கிய நகர்வு விழிப்புமிக்க ஒன்றாக ஆகிறது. வாழ்க்கை என்பது தத்தம் ஆன்மீகத்தை ஆழப்படுத்தும் ஒரு விஷயம்தான் என்பதை அவர் விழிப்புணர்வுடன் புரிந்து கொள்கிறார். இந்த காலத்தில்தான், இந்து மதம் வழங்கும், உணர்வுநிலைகளில் மேலெழும்ப உதவும் ஒழுக்கங்களான யோகங்களில், பயிற்சி கொடுக்கும் குரு ஒருவரைத் தேடுவது இயற்கையாகிறது. பலரும் அறிந்த நான்கு அணுகுமுறைகள் உள்ளன. கர்ம யோகம் என்பது செயல்கள் நிறைந்த பாதை. பக்தி யோகம் என்பது இறைப்பற்று மற்றும் இறை அன்பு பாதை. இராஜ யோகம் தியானத்தின் பாதை. ஞான யோகம் ஆன்மீக அறிவு உடைய பாதை. எந்த ஒன்று பின்பற்றப்படுகிறது, எப்படி என்பது ஒவ்வொரு குருவிடமும் வித்தியாசமாக இருக்கும். இருப்பினும் பொது நோக்கு ஒன்றுதான். விரைவில் ஒவ்வொன்றையும் பயிற்சி செய்து சிறப்பாகத் தேறும் பட்சத்தில் இன்னும் சீக்கிரமாக உணர்வுநிலையின் அடுத்த படிக்கு நீங்கள் செல்ல முடியும்.
முக்கியமாக, பயிற்சி என்பது முன்னேற்றத்துடன் எப்படி சம்பந்தப்பட்டுள்ளது என ரிஷி பதஞ்சலியின் யோக சூத்திரம் 1.14வது செய்யுளில், அவர் பயிற்சி பக்தியுடனும் தொடர்முயற்சியுடனும் நீண்ட காலத்திற்குச் செய்யப்பட வேண்டும் என உரைக்கிறார். வேறு வழியில் கூறின், ஆன்மீக முன்னேற்றம் பெறுவது மெதுவாக நிகழ்கிறது. உண்மையில், பல பிறவிக்கணக்கில்தான் அது நடக்கிறது.
தனது “யோக மார்க்கம்” என்ற பாடலில், எனது குருவின் குருவாகிய, இலங்கை யாழ்ப்பாணத்து யோகசுவாமிகள், மேல் நோக்கிய நகர்வின் கடைசி ஏழு நிலைகளை குறிக்கிறார், “ஆறு படிதாண்டு அப்பாலே வெள்ளிப்படி அதுவும் நீ தாண்டிவிட்டால் – தங்கமே ஆருனக்கு நிகராவார்.” சுவாமி குறிப்பிடும் ஆறு படிகள் மூலாதாரம் முதல் ஆக்ஞை வரையிலான ஆறு சக்கரங்கள், வெள்ளிப் படி என்பது கடைசிப் படி முக்தியை அடையும் முன்னர்: இது ஏழாவது சக்கரமான சஹஸ்ராரத்தை அடைவது.
இன்று பல மில்லியன் மெய்விரும்பிகள் தங்களை SBNR “ஆன்மீகவிரும்பிகள் ஆனால் மதம் அற்றவர்கள்,” என கருதுகின்றனர். அப்படிப்பட்ட தனிநபர்கள் உயர் உணர்வுநிலைகளை அனுபவிக்க விரும்புகின்றனர், ஆனால் மதச் சூழல் நீங்கியிருக்க வேண்டும் என்கின்றனர். சில மதங்களில் ஏற்கனவே நிறைந்திருக்கும் ஆன்மீக அறிவும் பயிற்சிகளும் அறியப்படாமல் இருப்பதுதான் இதன் காரணம். இந்து உள்நோக்கான உணர்வுநிலை ஏணியில் ஏறும் ஆன்மீகக் கருத்து பல SBNR நபர்களுடன் சிறப்பாக ஒத்துப் போகிறது.
“இந்துமதம், உலகின் உச்ச மாண்புடைய மதம்” என்ற தனது உரையில், எனது குரு கவனித்திருந்தார். “தோற்றம் பற்றிய மர்மங்களை, இந்த அளவு ஆழத்தில், நிலைத்து நிற்கும் புரிந்துணர்வை வேறு எந்த மதமும் கொண்டிருக்கவில்லை. அல்லது இவ்வளவு பரந்துவிரிந்த மீமெய்யியல் முறைகளை கொண்டிருக்கவில்லை. மேலை நாடுகளில், உள்ளார்ந்த உணர்வுநிலைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு, ஆன்மீகத்தில் விழிப்பு பெற்ற ஆத்மாக்களே இந்து மதத்தை நோக்கி வருகின்றனர், இந்து மதம் மற்ற மதங்களில் காணப்படாத பதில்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதையும் மனதின் ஆழமான பரப்புகளுக்கு சாட்சியத்தை வழிநடத்திச் செல்ல வல்லமை கொண்டுள்ளதையும் தீவிர தேடுதலுக்குப் பின்னரே கண்டுபிடிக்கின்றனர். இந்து மதத்தில் அடங்கியிருக்கும் ஆழமான, செயல்பாட்டுக்கு உகந்த, திறன்மிக்க ஆன்மீக பாரம்பரியத்தையும், அதில் சக்கர ஏணி எனும் முறைமையைக் கொண்டு ஆன்மீக மலர்ச்சி அளவிடப்படலாம் என்ற விஷயத்தை நாம் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளலாம்.
உணர்வுநிலை ஏணியில் ஏறுவதற்கும், உயர் உணர்வுநிலைகளை அனுபவிப்பதற்கும் தேடல் ஏற்படும் பொழுது, நவீன ஆசிரியர்கள் உயர் சக்கரங்களை தூண்டுவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள், ஒரு வேளை குறிப்பிட்ட சிறிது நேரத்திற்கு, வார இறுதி நிகழ்வு ஒன்றில் இது நடக்கிறது. குருதேவரின் போதனைகள் இந்த அணுகுமுறையில் வேறுபட்டு உள்ளது. மாறாக, நாம் முதலில் கீழான ஏழு சக்கரங்களை மூடி விடுவதில் கவனம் செலுத்துகிறோம். இவை பயம், கோபம், கெடுதல் செய்வது போன்றவை ஆகும்.
அவர் விளக்கியுள்ளார்: “ஆன்மீக மலர்ச்சி உயர் சக்கரங்களை தூண்டிவிடும் ஒரு காரியம் அல்ல, மாறாக மூலாதாரத்திற்கு கீழே உள்ள சக்கரங்களை மூடும் காரியம். இது நிகழும் வேளையில், மாணவனின் உணர்வுநிலை, சதாகாலமும் ஆங்கே இருந்து கொண்டிருக்கும் உயர் சக்கரங்களிடத்து விரிவடைகிறது. கீழான சக்கரங்களை மூடியிருக்கச் செய்வன யாதெனில் தொடர் ஆன்மீகச் சாதனைகள், ஜபம், வழிபாடு மற்றும் தன்னைத் தானே நெறிபடுத்துதல். மேல் சக்கரங்களுக்கு எழுப்பப்பட்ட பெரும் யோகிகளும் ரிஷிமார்களும் கூட தொடர்ந்து மேலும் மேலும் அதிக ஆன்மீகச் சாதனைகளைச் தொடர்ந்து செய்வதைப் பார்க்கையில் இவ்வுண்மை புலனாகிறது. தமது ஆற்றல் தொடர்ந்து உயர் சக்கரங்களில் பயணிக்கும் வண்ணம், கீழான சக்கரங்கள் தமது சாட்சியத்தை அபகரிக்காத வண்ணம் அவர்கள் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர்.”
ஆன்மீக ஒழுக்கங்கள், வழிபாடு, மற்றும் தம்மைத் தாமே தொடர்ந்து நெறி படுத்திக் கொள்வது ஆகியனவற்றினால் நாம் நமது நுட்பமான, மகத்தான ஆத்ம குணங்களை பலப்படுத்துகிறோம், கரடுமுரடான மிருக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறோம். குருதேவர் கவனித்திருந்தார், “உண்மை என்னவென்றால், நாம் எவ்வளவு உயரம் போகிறோமோ, அவ்வளவு கீழே நாம் விழ முடியும். நமது வாழ்க்கை முறை உள்ளேயே குணாதிசம் எனும் அடித்தளம் கண்டிப்பாக கட்டடியெழுப்பப்பட வேண்டும், இதனால் முழு மனநிறைவை நாம் நிலைநிறுத்தி, நமது மார்க்கத்தில் விடாமல் தொடர்ந்து பயணிக்க முடியும்.”