ஆம், புண்ணிய செயல்களைச் செய்யுங்கள், ஆனால் ஆத்மா பக்குவம் பெற்று மறுபிறவி விடுதலை அடையச் செய்யும் செயல்பாட்டில் இன்னும் அதிகமானவை சம்பந்தப்பட்டுள்ளன என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்

சத்குரு போதிநாத வேலன்சுவாமிகள்

இந்துமதத்தில் மனிதனின் நடத்தை இரண்டு முக்கிய வார்த்தைகளில் சுருங்கச் சொல்லப்படுகிறது – பாவம் மற்றும் புண்ணியம். நெறியில்லா செயல்களும், தவறான செயல்களினால் பெறப்படும் விளைவுகள் ஆகிய இரண்டும் பாவம் என குறிக்கப்படுகின்றன. இந்திய நூல்களில் பல்வேறு தவறான செயல்களின் பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எல்லா நெறி மீறல்களிலும், மிகக் கடுமையான தவறாகக் கருதப்படுவது, மற்றவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும், ஹிம்சை ஆகும். மாறாக, மற்றவர்களுக்குத் துன்பம் ஏற்படுத்துவதிலிருந்து விலகியிருப்பது, அஹிம்சை எனப்படுகிறது, இதுவே தலையாய நெறி. இதன் உச்ச மேன்மையை மஹாபாரதம் போற்றுகிறது: “அஹிம்சையே மிக உயர்ந்த தர்மம். அதுவே மிக உயர்ந்த புனிதம் செறிதல். அதுவே மிக உயர்ந்த உண்மை, அதிலிருந்தே எல்லா தர்மங்களும் தோன்றுகின்றன.” 

அஷ்டாங்க யோகத்தில், தவறு செய்வதை தவிர்க்கும் கருத்து இயமம் அல்லது கட்டுப்பாடு எனப்படுகிறது. பதஞ்சலி முனிவர், தனது யோக சூத்திரத்தில், பிரபலமான ஐந்து இயமங்களைப் பட்டியலிட்டுள்ளார், இவற்றுல் முதலாவதாக வருவது அஹிம்சை. அஹிம்சையின் மிகச் சிறந்த விளக்கம் சாண்டில்ய உபநிஷத்தில் காணப்படுகிறது: “எந்த ஒரு வாழும் உயிருக்கும், எந்த காலத்திலும், ஒருவனது மனம், பேச்சு மற்றும் உடலால் துன்பம் ஏற்படுத்தாமல் இருப்பதே அஹிம்சை.” இந்த ஒழுக்கமாகியது தனது உடலால் மட்டுமன்றி, ஒருவரது பேச்சு மற்றும் எண்ணங்கள் வரையும் கூட ஒருவருக்கு தீங்கிழைக்கக் கூடாது என்பதை இந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது. இந்த விதிமீறல் மிகவும் சூட்சுமமானது, காரணம் கனவிலும் கூட ஒருவரை துன்புறுத்துவது நிராகரிக்கப்பட்டுள்ளது.

வன்முறையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு வழமையான நியாயம், தனக்கு, தனது குடும்ப உறுப்பினர்கள், தனது மதம் அல்லது தேசத்திற்கு ஏற்படுத்தப்பட்ட காயங்களுக்கு கொடுக்கும் பதிலடி என்றே உள்ளது. இவ்வாறான நிலைமைகளில், பதிலடி என்பது அனுமதிக்கப்படுவது மட்டுமன்றி, ஒருவனது கடமையும் கூட ஆகும் என உலகில் நம்புகின்றனர். இந்து மதம் இவ்வாறான “கண்ணுக்கு கண்” என்ற மனோநிலையை ஆதரிக்கவில்லை. உண்மையில், நமது மிகப் பண்டைய மறைநூலாகிய ரிக் வேதம், அதற்கு எதிராகவே பேசுகிறது: “அடிக்கு அடியை பதிலாக கொடுக்க வேண்டாம், சாபத்திற்கு சாபம் கொடுக்க வேண்டாம், அல்லது அடிப்படை தவறுகளுக்கு கொடூரமான பதில் கொடுக்க வேண்டாம். பதிலாக ஆசீர்வாதங்களைப் பொழியுங்கள்.” மஹாத்மா காந்தி தைரியமாகவே சொல்லியுள்ளார், “ஒரு கண்ணுக்கு ஒரு கண்தான் தீர்வு என்றால் முழு உலகமே குருடாகி விடும்.” மிருகவுணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியதால் கோபம் மற்றும் காயம் விளைவிக்கும் தன்மைகளை குறைத்திருக்கும் தனிமனிதர்கள் இயற்கையிலேயே மற்றவர்களின் நன்மையில் பெரும் அக்கறை கொண்டிருப்பார்கள். 

இதன்வழி நாம் எதிர்மறை பதத்தை அடைகிறோம் – புண்ணியம் – நெறியான செயல்களும் சரியான சிந்தனை, வார்த்தை மற்றும் காரியங்களினால் பெறப்படும் மதிப்புகளும் அடங்கியது. புண்ணியம் ஈட்டுவதற்கான எளிய வழி, தானம் செய்வதாகும், இது ஒரு வகை கர்ம வங்கிக் கணக்கு ஆகும் – மற்றவர்களுக்கு ஈவது – இந்து கோயில்கள், ஆசிரமங்கள் மற்றும் சமூக காரியங்களுக்கு நன்கொடை வழங்குதல். 

21ஆம் நூற்றாண்டு சமுதாயம் மிகவும் பொருள்மயமானது என்பதை நாம் அறிவோம், இந்து இளைஞர்கள் உலகாதாய விருப்புகளுடன், சுயசார்பு தன்முனைப்புகளுடன் வளர்ந்து வருகிறார்கள்: செல்வம், தொழில், புகழ் மற்றும் பிரபலம். மேலான நன்மை வேண்டின், இந்த உலகாதாய நோக்கம் சமன் செய்யப்பட மற்றவர்களுக்கு உதவும் காரியம் இருந்தாக வேண்டும். 

எனது உரைகளில் நான் நகைச்சுவையாக குறிப்பிடுவது போல, ஒரு வீட்டு கார்நிறுத்துமிடத்தில் இரண்டு மெர்சடீஸ் கார்கள் இருந்தால் போதுமானது, அதாவது நாம் தரமிக்க சொத்துக்களை கொண்டிருக்க வேண்டும், ஆனால் சொகுசு பொருள்கள் நாட்டத்தில் எல்லை இல்லாமல் இருப்பதால் ஒருவர் கட்டுக்கடங்காத சுய நுகர்வு பாதையில் மாட்டி மீள முடியாமல் போய் விடும். செல்வந்தர்களில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் யாரென்றால், தமது வளத்தை மேலான நோக்கத்திற்கு பயன்படுத்துபவர்களும், சுய ஆசைகளுக்கு பெரும் செலவைத் தவிர்ப்பவர்களுமே ஆகும். அவர்களிடையே மிகவும் தயாளமானவர்கள் தமது மலைபோன்ற செல்வத்தை மனிதாபிமான காரணங்களுக்கு செலவிடுகிறார்கள். எடுத்துக்காட்டிற்கு, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், உலகம் முழுவதும் ஏழ்மையை குறைப்பதற்கும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறநிறுவனத்தை தோற்றுவித்தார். பணக்கார மக்கள் தமது செல்வத்தின் மூலம் உலகை மேலும் சிறந்த இடமாக உருவாக்குவதற்கான பொறுப்பைக் கொண்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். 

புண்ணியம் ஈட்டும் இரண்டாவது வழி, தன்னலமற்ற சேவை, இது பொதுவாக கோயில் அல்லது ஆசிரமத்தில் செய்யப்படுவது, உதாரணத்திற்கு ஒரு திருவிழாவிற்கான பல்வேறு வேலைகளில் சேர்ந்து உதவி புரிவது போன்றது. பட்டண வாழ்க்கையில் இது எப்போதும் சாத்தியமாகாமல் போகலாம், காரணம் வீட்டிலிருந்து கோயில் அல்லது ஆசிரமத்திற்குச் செல்வது மிக நீண்ட நேரம் தேவைப்படும். இதற்கு ஒரு தீர்வு உண்டு: நாம் எங்கெல்லாம் இருக்கின்றோமோ, அங்கேயே, வீடு, வேலை இடம், பள்ளிக்கூடம், அண்டை அயலார் மற்றும் சமூகத்தினர் அனைவருக்கும் உதவுவது. இதில் நமது தன்னலமற்ற சேவை மறுவியாக்யானம் செய்யப்படுகிறது. அதன் பொது அர்த்தத்தில், சேவை என்பது நாம் செய்யத் தேவையில்லாததும், நமது காரியங்களுக்கு பணம் பிரதிபலனாக கொடுக்கப்படாததுமான காரியங்கள், இதில் நாம் மற்றவர்களுக்கு செய்யும் எல்லா உதவிகளும் அடங்கும். இதற்கான நமது ஈடு யாதெனில் நல்ல நோக்கம், புண்ணியம் மற்றும் நற்கர்மம்.

புண்ணியத்தை நாடி, அதை அடைவது சமஸ்கிருதத்தில் இஷ்டபூர்த்தம் என்ற சொல் ஆகும். எ கான்சைஸ் என்சைக்லோபீடிய அஃப் இந்துஸ்ம் (A Concise Encylopaedia of Hinduism) என்ற தனது புத்தகத்தில்  சுவாமி ஹர்ஷனந்தா இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளார். “ஒரு மனிதனின் வழிபாடுமிக்க சடங்குகளும் தானதர்மங்களும் செய்ததன் காரணமாக ஏற்படும் ஒட்டுமொத்த ஆன்மீக விளைவுகளை குறிக்கிறது. இஷ்ட என்பது எல்லா வகையான சடங்குப்பூர்வ வழிபாடுகளையும், அந்த வழிபாட்டின் பொழுதில் கொடுக்கப்படுகின்ற பரிசுகளையும் உள்ளடக்கி இருக்கிறது. பூர்த்தம் என்பது பல்வேறு வகையான தானங்களையும் பொதுஜன தர்ம செயல்களையும் குறிக்கிறது. பொதுஜன நன்மைக்காக கிணறு தோண்டி அர்ப்பணித்தல், கோயில்கள் கட்டி தோட்டம் அமைப்பது, இலவச உணவு அளிப்பது, பரிசுகள் வழங்குவது, நோய்வாய்ப் பட்டவர்களை கவனித்துக் கொள்வது போன்ற புனித நூல்களால் அங்கீகரிக்கப்பட்ட பல தர்ம காரியங்களைச் செய்வது.” சுவாமி ஹர்ஷானந்தா சடங்குபூர்வ வழிபாட்டிற்கு, உலக நன்மைக்காக பல பூஜாரிகளால் செய்யப்படும் யாகங்கள் உட்பட, தானமும் வழங்கும்படி பரிந்துரைத்துள்ளார். 

இந்து மதத்தில் பிரபலமான ஒரு கொள்கை – மற்ற மதங்களிலும் கூட உண்டு – அதாவது நாம் நெறியாக வாழ்ந்தோம் என்றால், பெருமளவு புண்ணியம் பெறுகிறோம், பின்னர் நாம் பூமி வாழ்க்கையை விட்டு செல்கையில், நாம் நிரந்தரமாக சுவர்க்க லோகங்களில் வசிப்போம் என்பதாகும். முண்டக உபநிடதம் இந்த கொள்கை உண்மை அல்ல என்று உரைக்கிறது. இஷ்டம் மற்றும் பூர்த்தம் மூலமாக பெறப்படும் புண்ணியம் நமக்கு சுவர்க்க லோகங்களுக்கு நுழைவை அளித்தாலும், அந்த புண்ணியம் விரைவில் தீர்ந்து போவதால் அந்த உயிர் மீண்டும் வந்து பிறக்கிறது. வசனம் 1.2.10 விவரிக்கிறது, “நற்செயல்களும் யாகங்களுமே அதி முக்கியம் என நம்புகின்ற மனிதர்கள், மற்ற நன்மைகளை அறியவில்லை. நல்ல காரியங்களால் சுவர்க்கத்தின் உயர் இடத்தை மகிழ்ந்தவர்கள் இந்த உலகில் மீண்டும் நுழைகிறார்கள் அல்லது இன்னும் கீழான ஒன்றினுள்.” 

அப்படியானால், எந்த ஒன்று ஆத்மாவிற்கு மறுபிறவியிலிருந்து விடுதலையை பெற்றுத் தர வல்லது? பரமாத்ம தரிசனம் – ஜீவாத்மா தன்னை பரமாத்மனாக ஞான நிலையில் அனுபவிப்பதே அதுவாகும். ஆக ஞானத்தின் பலன் மோட்சம் என நாம் சொல்லலாம் – பூமியில் பிறந்து இறக்கும் சுழற்சியில் இருந்து ஒட்டுமொத்தமாக விடுதலை பெறுதல்.

எனது குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமிகள், இந்த கருத்தைப் பற்றி ரத்தினச் சுருக்கமான விளக்கத்தைக் கொடுத்தார்: நமது உள் ஆழத்தில் இந்த கணத்திலும் கூட நாம் பரிபூரணமாகவே உள்ளோம். அதனைக் கண்டுபிடித்து, அந்த  பரிபூரணமாக வாழ்வதே நாம் முழுமையடையத் தேவையானது. நாம் ஒரு ஜட உடலில் பிறவி பெற்றுள்ளது, தமது தெய்வீக நிஜத்தை அடையும் வகையில் வளரவும் பரிணாமிக்கவுமே தான். நாம் உள்ளார ஏற்கனவே கடவுளிடம் ஒன்றாகவே இருக்கிறோம். இந்த ஒருமையை எவ்வாறு அறிவது மற்றும் பயணத்தில் இடையே தேவையில்லாத அனுபவங்களை ஏற்படுத்தாமல் இருப்பது எப்படி என்ற அறிவை நமது மதம் கொண்டிடுள்ளது.”

நமது தெய்வீக நிஜத்தை நோக்கி நாம் வளரவும் பரிணாமிக்கவும் செய்வது எப்படி என்ற உரைகளில், நான் நாட்டிய உவமையை பயன்படுத்துகிறேன். கேட்பவர்களிடம் நான் எழுப்பும் வினா, “இந்திய பாரம்பரிய நாட்டியத்தில் நல்ல தேர்ச்சி பெற ஒரு இளைஞருக்கு மிகவும் தேவையானது என்ன?” நான் மனதில் வைத்திருந்த பதிலையே பலரும் கொடுத்தனர்: “பயிற்சி!” நாட்டியத்தைப் பற்றி புத்தகங்களில் படிப்பது உன்னை ஒரு நல்ல நடனக்காரராக உருவாக்காது. அல்லது வகுப்புகளுக்குச் சென்று பயின்றவற்றைப் பயிற்சி செய்யாமல் இருந்தாலும் சாத்தியமாகாது. தொடர்ந்தால்போல், ஒழுக்கமுடன் பயிற்சி செய்து வருதல் தேவையானது. அது போலவே நமது தெய்வீக நிஜத்தை நோக்கி வளர்ந்தும் பரிணாமித்தும் இருப்பதற்கு – நமது உள்ளார்ந்த பரிபூரணத்தை நமது வெளி அறிவு மற்றும் மிருகத்தன்மைகள் ஊடாக வெளிக்கொணர்வதற்கு – சாதனை எனப்படும் தொடர்பயிற்சிகள் தேவைப்படுகின்றன.

நாட்டியத்தில், உடம்பை பலமாகவும் எளிதில் வளையக் கூடியதாகவும் வைத்துக் கொள்வதில் துவங்க வேண்டும் என்பது தெளிவு. பிறகு நீங்கள் பல்வேறு வகையான அசைவுகள், உடல் நிலைகள், முத்திரைகள் மற்றும் பாவனைகளை படிப்படியாக தேர்ந்த பின்னர், அவற்றை ஒன்று சேர்த்து எளிமையான நாட்டியங்களை ஆடுவீர்கள். பின்னர், மேலும் மேலும் கடினமான நாட்டியங்களைக் கற்று தேரலாம்.

அடிப்படை பயிற்சிகளான தன்னலமற்ற சேவையும் பக்திமிகு வழிபாடுகளும் அடிப்படை நாட்டிய நிலைகளுக்குச் சமமாகும். இந்த நிலைகள் முக்கியமானவையே ஆனாலும் தேர்ச்சி பெறுவதற்கான ஒட்டுமொத்த தேவை என ஆகிவிடாது. தத்துவார்த்தமாக அவர்களின் பயிற்சிகள் அந்த தெய்வத்துடன் வேறுபட்ட, இருமை உறவைத்தான் ஏற்படுத்துகிறது, சமஸ்கிருதத்தில் துவைதம் எனப்படுகிறது. பக்தரும் நீங்கள் வழிபடும் பொருளாகிய அந்த தெய்வமும் என எப்பொழுதுமே அங்கு நீங்கள் இருவர் இருப்பீர்கள்.

தியானம், இன்னும் ஓர் அடி முன்னே உள்ளது, இது ஓர் ஆழமான பயிற்சி. அதன் மிகு ஆழமான நிலையில் இரண்டு என்ற எதுவுமே இல்லை. நீங்களும் அந்த தெய்வமும் ஒன்றுதான். ஆனால், இஷ்ட தெய்வமும் நீங்களும் ஒன்று என்பது அல்ல, மாறாக கடவுளின் அருவுருவமாகிய, சச்சிதானந்தம் அல்லது சர்வவியாபக உணர்வுநிலை. இதனையும் கடந்து இருக்கும் இன்னும் ஆழமான அனுபவம் ஒன்றும் உண்டு, அதாவது சச்சிதானந்தத்தின் மூலமாகிய கடந்த நிலையுடன் ஒன்றாகும் அனுபவம். தத்துவார்த்தமாக பார்க்கையில் இது ஒருமை அனுபவம் ஆகும், சமஸ்கிருதத்தில் அத்துவைதம் எனப்படும். இதுவே ஜீவாத்மா தன்னை பரமாத்மாவாக அனுபவிக்கும் செயல். இதுவே பரமாத்ம தரிசனம், தன்னை அறிதல். முண்டக உபநிஷத், 2.2.3-4 உரைக்கிறது, “உபநிஷத்துகளை ஓர் வில் என ஏந்தி, தியானத்தினால் கூர்மையாக்கப்பட்ட அம்பு ஒன்றை அதில் ஏற்றி, பிரம்மத்தில் ஆழமாகத் திளைத்திருக்கும் மனத்தால் அதை வளைத்து, அன்பானவரே, அழிவில்லாத அந்த பிரம்மமே குறியாகும். ஓம் எனும் அசையே வில், ஒருவன் தானே அம்பு, பிரம்மம் சென்று அடையக்கூடிய இலக்கு என சொல்லப்படுகிறது. குறி தவறாமல் அது துளைக்கப்பட வேண்டும். இவ்வாறாக, அந்த அம்பு போலவே  ஒருவன் அதனுடன் ஒன்றாகிறான். (இலக்குடன் ஒன்று ஆகுதல்).” மொழிபெயர்ப்பு செய்தவர் எஸ். இராதாகிருஸ்ணன்.

  மனதைக் கட்டுப்படுத்துவதற்கும் உணர்வு நிலைகளின் ஆழத்திற்குச் செல்லவும் நல்ல செயல்கள் தேவைப்படுகின்றன. அவை ஆன்மீகப் பாதைக்கு இன்றியமையாத படிகள் ஆகும். ஒருவர் பாவத்தை உருவாக்கிக் கொண்டிருக்கையில் அவரால் உண்மையில் தியானம் செய்ய இயலாது. கர்மங்கள் அதிகரித்துக் கொண்டே போகும். மனதையும் உணர்ச்சிகளையும் பாதிக்கும், தங்கு தடைகளை உருவாக்கும், தொடர்ந்து ஒவ்வொரு பிறவியிலும் நிகழும். மனம் தெளிவாகவும், இதயம் சுத்தமாகவும், கடந்த கால மற்றும் நிகழ்கால செயல்கள் சமன்செய்யப்பட்டும், தர்மம் நிறைவாக கடைபிடிக்கப்பட்டும் இருக்கும் பட்சத்தில்தான் ஆழ்ந்த தியானம் கிட்டும். ஆம் நல்ல செயல்களைச் செய்யுங்கள், ஆனால் முக்திக்கு இட்டுச் செல்லும், மகத்தான ஆத்ம முதிர்ச்சிக்கான செயல்முறையில் இன்னும் அதிகமானவை சம்பந்தப்பட்டு  இருப்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.