நீங்கள் அறியும் ஒரு பொருளிலிருந்து எவ்வாறு உங்களது அறியும் பொருளை பிரிப்பது மற்றும்
சதா சாந்தமாகவும் சர்வவியாபகமாகவும் இருக்கும் உங்கள் மனதின் ஒரு பகுதியினால் களிப்பு கொள்வது
சத்குரு போதிநாத வேலன்சுவாமிகள்
சர்வவியாபகம் என்பது எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் நிலைபெற்றிருக்கும் ஒரு நிலை என வரையறுக்கப்படுகிறது. மத அடிப்படையில் பார்க்கின், சர்வவியாபகம் என்பது பொதுவாக கடவுளின் ஒரு சிறப்பு அம்சமாக சொல்லப்படுகிறது. கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்; ஆனால் மனிதன் தனது உடம்பு உள்ள இடத்தில் மட்டுமே இருக்கிறான். இந்து சிந்தனை இந்த பார்வை கோணத்தில் மாறுபட்டு உள்ளது. சர்வவியாபகமாக இருப்பது கடவுள் மட்டுமல்ல, அவர் கருணையோடு இந்த தன்மையை நம்முடனும் பகிர்ந்து கொண்டுள்ளார். நமது ஆத்மாவின் ஆழத்தில் இந்த சர்வவியாபகம் காணப்படுகிறது. நாம் இதனை இணையத்துடன் ஒப்பிடலாம், அது ஐக்கிய அமெரிக்காவின் தற்காப்புத் துறையினால் அவர்களது சுய பயன்பாட்டுக்காக உருவாக்கப் பட்டது, ஆனால் இறுதியில் அனைவரின் பொது பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட்டு விட்டது. நமது ஆத்மாவின் ஆழத்தை அனுபவிக்கையில் நாம் நுழையும் சர்வவியாபக இருப்புநிலைக்கு நான் ஒரு பெயர் இட்டுள்ளேன். அதை நான் “உள் இணையம்” என அழைக்கிறேன்.
தன்னை அறிந்தவர்கள் இந்த உள் இணையத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். எனது குருவின் குரு, இலங்கை யாழ்ப்பாணத்தின் யோகசுவாமிகள், இவ்விஷயத்தை இவ்வாறு சொல்லியுள்ளார்: “ ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம்! இங்கே நான், அங்கே நான், எங்கும் நான்!”
தனது பக்தர்கள் இந்த அடைவுநிலை அவருக்கு மட்டுமே உரித்தான ஒன்று என நினைக்காமல் இருக்கும் நோக்கில், அவர் மேலும் சொல்வது, “நான் எல்லா இடத்திலும் இருக்கிறேன். நீ எல்லா இடத்திலும் இருக்கிறாய், ஆனால் அதை நீ நம்பவில்லை.” பார்ப்பதற்கு சற்றும் நிஜம் இல்லாவாறு தோன்றுபவைகளையும் அவர் சொல்லியுள்ளார். உதாரணத்திற்கு, “இப்பொழுது நான் இங்கு உட்கார்ந்திருக்கிறேன். நான் இங்கிலாந்திலும் இருக்கிறேன். நான் அமெரிக்காவிலும் இருக்கிறேன்.” உள் இணையத்தின் உள்ளே நுழைவது மட்டுமின்றி, தூரத்தில் இருக்கும் இடங்களில் வேலை செய்யவும் அதை அவர் பயன்படுத்தியுள்ளார்: “நாங்கள் இங்கிருந்தவாறே (ஶ்ரீ லங்காவில்) சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு எண்ணத்தால் தீட்சை வழங்க முடியும்.” இந்த உள்ளார்ந்த தொடர்பு முறைக்கும் நாம் இங்கிருக்கும் நமது கணிணியைக் கொண்டு பல ஆயிரக்கணக்காண மைல்கள் தூரத்தில் உள்ள மின் கருவிகளை இயக்குவதற்கும் உதவும் வெளி இணையத்திற்கும் ஒற்றுமை உண்டு! இந்து தத்துவங்களில், சர்வவியாபக இணையத்திற்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும் சமஸ்கிருத பதம் சச்சிதானந்தம் என்பதாகும். எமது இணைய அகராதி அதை இவ்வாறு வரையறுக்கிறது:
சச்சிதானந்தம்: தோற்றம்-உணர்வுநிலை-ஆனந்தம். மற்றொரு பெயர் பராசக்தி. சிவபெருமானது தெய்வீக மனம் மற்றும் அதே வேளையில் ஒவ்வொரு தனிப்பட்ட ஆத்மாக்களின் தூய அதிஉயர் மனம் ஆகும். சச்சிதானந்தம் பரிபூரண அன்பு, பேரறிவு எனும் சர்வக்ஞன், சர்வவல்லமை பூண்ட உணர்வுநிலை, அனைத்து தோற்றத்தின் ஊற்றுக்கண், இருப்பினும் அனைத்து தோற்றத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ளது, அவற்றை ஊடுருவி உள்ளது. இதுவே தூய உணர்வுநிலை, தூய உருவகம், தோற்றத்தின் ஆதாரப்பொருள் என பலவாறு அழைக்கப்படுகிறது. ஒரு யோகி அல்லது தியானிப்பவரின் குறிக்கோள் சச்சிதானந்தம் எனும் மனதின் இயல்பான நிலையை அனுபவிப்பது, யோக பயிற்சிகளின் உதவியோடு விருத்திகளை அடக்கியவாறு.”
இதை பரமகுரு யோகசுவாமிகள் இரத்தினச் சுருக்கமாக சொல்லியது: “சத் சித் ஆனந்தம். அது ஒரே பொருள் – சச்சிதானந்தம். சத் என்பது ‘நீ’. சித் என்பது ‘சர்வவியாபகம் – பிரகாசம்’ சூரியனிலிருந்து வரும் ஒளி போல, அனைத்தையும் அறிந்தது. ஆனந்தம் என்றால் பெரும் களிப்பு. இவை மூன்று; ஆனால் அவை ஒன்று. அதுவே உனது இயல்பு.”
சர்வவியாபகம் நமது ஆத்மாவின் ஆழத்தில் உண்டு என வெறுமனே சொல்லிக் கொண்டிருப்பது, இந்து மதத்தில் போதுமானதாக இல்லை. இந்த உண்மை இறுதியில் நாம் ஒவ்வொருவராலும் அனுபவத்தில் அறியப்பட வேண்டும். தொடர் முன்னேற்றம் வழங்கும் பயிற்சிகளினால் நாம் சர்வவியாபகத்தை அறிய முன்னேறலாம். முதல் படி சாட்சியம் என்னவென்று புரிந்து கொண்டு, பின்னர் நம்மை சாட்சியம் என்றும், நாம் சாட்சாத்கரிக்கும் பொருள் நாம் அல்ல என்றும் இனம் காண வேண்டும். இந்த கருத்து பதஞ்சலி மாமுனிவரின் யோக சூத்திரத்தின் முதல் நான்கு வரிகளில் காணப்படுகிறது. “இப்பொழுது யோகம் என்னவென்று தெரியப்படுத்துவோம். யோகம் என்றால் சித்த விருத்தி கட்டுப்பாடு. இதன் பயனாக சாட்சியம் தனது சுய இயல்பில் நிலைக்கிறது. மற்ற வேளைகளில் சாட்சியம் சித்தத்தின் செயல்பாடு என்றே உருபெற்று விடுகிறது. சாட்சியம் என்பது ஆத்மாவின் உணரும், பார்க்கும் அல்லது அறியும் திறன். மட்டுமல்லாது இவ்வாறான அறிவைப் பற்றி விழிப்புடன் உள்ளது. யோக சூத்திரத்தில் சாட்சியம் த்ரஷ்ட, த்ரிக், சித்து மற்றும் சித்சக்தி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலை மூன்றாவது வரியில் காணப்படுகிறது – “பின்னர் சாட்சியம் தனது சுய இயல்பில் நிலைபெறுகிறது” – சாட்சியம் தன்னை மனதின் செயல்பாடுகளில் இருந்து பிரித்து கொண்டு, தற்காலிகமாக தன்னைத் தானே உணர்ந்து நிற்கும் காரியத்தினால் ஏற்படுகிறது, மீண்டும் எண்ணங்கள் தோன்றும் வரையில்.
பயிற்சி 1: உன்னை சாட்சியப் பொருளாக இனம் காணுதல்
“நான் யார்:” என்ற கேள்வியை ஒரு நிமிடத்திற்கு மனதளவில் மீண்டும் மீண்டும் சொல்லவும், நீங்கள் இவ்வாறு திரும்பத் திரும்ப சொல்வதை சாட்சாத்கரிக்கவும். அடுத்த ஒரு நிமிடத்தில், திரும்பச் சொல்வதை நிறுத்தவும். எது அந்த திரும்பத் திரும்பச் சொல்வதை சாட்சாத்கரித்தது என்பதை கவனிக்கவும்.
ஓர் உதாரணம் உதவியாயிருக்கும். நான் ஒரு காகிதத்தை உயர பிடித்துக் கொண்டு சொல்கிறேன், “நான் இந்த காகிதத்தைப் பார்க்கிறேன்.” இது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதானே? நான் என் கையில் காகிதம் உள்ளதைப் பார்க்கிறேன்.
ஒரு வேளை “நான் இந்த காகிதம்,” என்று நான் சொன்னால் எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள்: யாருமில்லை. நாம் சிறுவயதில் இருந்து பழக்கப்பட்டு வந்திருக்கிறோம், அதாவது நாம் ஜடப் பொருள்கள் இல்லை என. நாம் அவற்றை காண்கிறோம். நாம் காகிதத்தை பார்க்கிறோம். நாம் வாசனையை நுகர்கிறோம். தண்ணீர் ஓடும் சத்தத்தைக் கேட்கிறோம். நாம் அவற்றை விட வேறுபட்டதாக இருக்கிறோம். நாம் இவ்வாறுதான் சிந்திக்கிறோம்.
இருப்பினும் நாமே இவ்வாறும் சொல்கிறோம், “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” இதைப் பற்றி சிந்தித்து பார்ப்போம்: நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சியாக நம்மை இனம் கண்டு கொள்கிறோம், ஆனால் நாம் பார்க்கும் காகிதமாக இல்லை. பதஞ்சலியின் வரிகளுக்கு திரும்பிச் செல்வோம், மகிழ்ச்சி என்பது ஒரு மனோ காரியம், இந்த தோற்றத்தை சாட்சியம் தான் என்று இனம் கண்டு விட்டது. குறிக்கோள் என்னவெனில், ஜடப் பொருள் ஒன்றை நம்மிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் நாம், அதே போல மனோ பொருளை நம்மிடமிருந்து வேறுபடுத்த வேண்டியுள்ளது. நாம் இப்படி சிந்திக்க வேண்டாம்: “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” மாறாக இப்படி சிந்திக்க வேண்டும்: “நான், சாட்சியப்பொருள், மகிழ்ச்சி எனும் உணர்ச்சியை அனுபவிக்கிறேன், ஆனால் நான் மகிழ்ச்சி அல்ல. நான் மகிழ்ச்சியை அனுபவிக்கும் பொருள். நான் மகிழ்ச்சி அல்ல, நான் பார்க்கும் காகிதம் நான் அல்ல என்பது போலவேதான் இதுவும்.”
பயிற்சி 2: உனது சாட்சியத்தை நகர்த்துதல்
நமது ஆத்மாவின் சர்வவியாபகத்தை பெற்றுக் கொள்வதற்கான இரண்டாவது சிறந்த அடி என்னவென்றால் நீங்கள், சாட்சியப் பொருளாக,அனுபவித்துக் கொண்டு இருக்கும் உணர்வுநிலையை கட்டுப்படுத்துவதாகும். சற்று மனச் சோர்வு நிலையில் இருக்கும் பட்சத்தில், சாட்சியத்தை ஒரு மகிழ்ச்சியான நிலைக்கு நகர்த்துங்கள். யாரோ ஒருவரைப் பற்றி பொறாமை உணர்வு நிலை இருப்பின், அவர் அடைந்த வெற்றியை எண்ணி நீங்கள் மகிழ்ச்சியான மனநிலைக்கு செல்லுங்கள். எனது குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமி, ஒரு மனிதனின் மனோநிலைகள் ஒரு மாநகரம் போலவும் சாட்சியம் என்பதில் அம்மாநகரில் இருக்கும் சுற்றுப்பயணி போன்றும் என உவமை சொல்லியுள்ளார். அவர் எழுதியிருந்தார்: “பொதுவாக மக்கள் பிரச்சனைகளை மிகவும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டு, அவற்றுடன் தம்மை அடையாளம் காட்டில் விடுகின்றனர். கோபத்தை அனுபவிக்கையில் அவர்கள் கோபக்காரர்கள். ஆனந்தத்தை அனுபவிக்கையில் அவர்கள் ஆனந்தபூர்வமானவர்கள். ஒரு மெய்ஞானி தன்னை அனுபவிக்கும் ஒருவராக இனம் காண்கிறார், அனுபவமாக அல்ல. அவர் தன்னை மனதில் பயணம் செய்யும் தூய சாட்சிப்பொருளாகவே பார்க்கிறார். அவர் சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் நேரத்தில் அவர் சான் பிரான்சிஸ்கோ என்று மாறி விடுவதில்லை. அது போலவே அவர் கோபத்தில் இருக்கும் நேரத்த்தில் அவர் கோபம் என ஆவதில்லை. அவர் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறார், “நான் தூய சக்தி. நான் மனம் மற்றும் உடல் முழுதுமாக பரவி நிற்கும் தூய சக்தி. நான் உடம்பல்ல, மனமல்ல, உணர்ச்சிகளும் அல்ல. நாம் நினைக்கும் எண்ணங்களும் நான் அல்ல. நான் அனுபவிக்கும் அனுபவங்களும் நான் அல்ல. ஆக அவர் தன்னைப் பற்றி புதிய ஓர் அடையாளத்தை உருவாக்குகிறார், ஒரு சுதந்திரமான வஸ்து, மனதில் எந்த இடத்திற்கும் பயணிக்க முடியும். அவ்வாறான ஒரு மனிதன் எப்பொழுதும் மலை உச்சியிலேயே இருக்கிறார்.”
சர்வவியாபக உணர்வுநிலைக்கு மேலும் பல குணாதிசயங்கள் இருக்கின்றன, நித்திய இருப்பு மற்றும் மாற்றமில்லா தன்மை. நீங்கள் ஒரு சர்வவியாபகப் பொருள் என்ற வகையில் சதா காலமும் இருந்துள்ளீர்கள், எந்தவித மாற்றமும் அடைந்திருக்கவில்லை. இலங்கைக்கான முன்னாள் கனடா நாட்டு தூதுவர் ஒரு விருப்பூட்டும் கதையை சொல்லியிருந்தார், அது இதே கருத்தை நமக்கு காட்டுகிறது. “நான் எனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை யோகசுவாமியைப் பார்க்க கொண்டு சென்றிருந்தேன். ஒவ்வொரு பிள்ளையையும் பார்த்து யோகசுவாமிகள் கேட்டார், ‘உனக்கு என்ன வயது?’ எங்கள் மகள் சொன்னாள், ‘ஒன்பது,’ அந்த பையன்கள் சொன்னார்கள், ‘பதினொன்று’ மற்றும் ‘பதின்மூன்று.’ ஒவ்வொருவரிமும் யோகசுவாமிகள் திடமாகக் கூறினார், ‘எனக்கும் உன்னைப் போன்ற வயதுதான்.’ அவர் மூன்று வித்தியாசமான வயதுகளில் ஒரே நேரத்தில் இருக்க முடியாது என அந்த பிள்ளைகள் வாதம் செய்தனர், தங்களுடைய தாத்தாவை விட அவருக்கு வயது அதிகமாக இருக்கும் என சொன்னார்கள். இதற்கு யோகசுவாமி சிரித்தார், எங்களைப் பார்த்து கண் சிமிட்டினார், எங்களுக்கு புரிகிறதா என்று பார்த்தார். அந்த நேரத்தில் அது பிள்ளைகளிடத்தில் அவர் செய்யும் ஒரு நகைச்சுவை என்று நாங்கள் எடுத்துக் கொண்டோம், ஆனால் அவர் ஆழமான ஒன்றைப் பற்றியே குறிப்பிட்டுள்ளார் என மெதுவாக, பின்னரே நாங்கள் உணர்ந்தோம், இந்த விஷயம் நாங்களே சுயமாக புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அச்சம்பவம் அவர் தனது பாணியில் மறைமுகமாக, பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான பாதையில் உடம்பு பல்வேறு வயது கொண்டிருந்தாலும், உடம்பைப் போலவே நிஜமான ஒன்று, அதற்கு உடம்பு என்பது ஒரு வாகனம் மட்டுமே, அது எப்பொழுதும் இருந்துள்ளது, எப்பொழுதும் இருக்கும். அவ்வாறு பார்க்கின், நாம் அனைவருக்கும் அடிப்படையில் ‘ஒரே வயதுதான்.’ ”
உள்ளார்ந்த சர்வவியாபகத் தன்மையுடன் தொடர்பு கொள்ள இதோ மேலும் மூன்று பயிற்சிகள். முயற்சி செய்து பாருங்கள்.
- ஒரு கோயிலில் இருந்து வீடு திரும்பியதும், நீங்கள் இன்னும் அந்த தெய்வத்தின் முன்னே நின்று கொண்டிருப்பதாகக் காணுங்கள், அந்த கோயிலின் ஆன்மீக அதிர்வலைகளை உங்களுக்குள் உணருங்கள்.
- ஒரு பாதையில் நடந்து செல்லும்போது, நீங்கள் இரண்டு இடங்களில் இருப்பதாக பாருங்கள் – ஒன்று தற்போது நின்று கொண்டிருக்கும் இடம், அடுத்தது உடம்பை விட தூரமாக, பாதையில் முடிவில் இருப்பது.
- நடந்து செல்லும் பொழுது, உங்களுக்கு உள்ளே ஆழமாகச் சென்று பார்க்கவும், அதாவது நீங்கள், சாட்சியப் பொருளாக, நின்று கொண்டுதான் இருக்கிறீர்கள், நகரவேயில்லை.
அடுத்த தடவை நீங்கள் ஓர் எதிர்மறையான உணர்வுநிலையில் இருப்பதை உணரும் நேரம், சாட்சியத்தை அதிலிருந்து வெளியேறச் செய்து, நீங்கள் ஓர் ஆன்மீகப் பொருள், உங்களின் சாராம்சம் கடவுளை ஒத்திருக்கிறது என்ற நேர்மறை உணர்வுக்கு செல்லுங்கள். உங்களை சாட்சியப் பொருளாக இனம் காண்பதாலும், சாட்சியத்தை எதிர்மறை நிலைகளிலிருந்து நேர்மறை நிலைகளுக்கு நகர்த்த கற்றுக் கொள்வதனாலும், நீங்கள் உங்களை சர்வவியாபகப் பொருளாக, சச்சிதானந்தமாக, அனுபவிக்க நெருங்கிச் செல்கிறீர்கள். தோற்றம் யாவற்றின், சாட்சாத்கரிக்கக் கூடிய, அதிநுட்பமான நிலை சச்சிதானந்தம்.