Publisher’s Desk
பயமூட்டும் தெய்வம்/அன்பான தெய்வம்
______________________
அனைத்து இந்து வழக்குப்பிரிவுகளின் வழிபாட்டுக்கும் அன்பே ஆதாரமாகின்றது, இது பக்தி யோகத்தின் மூலமாக தனது இஷ்ட தெய்வத்திடம் வெளிப்படுத்தப்படுகின்றது
______________________
சற்குரு போதிநாத வேலன்சுவாமிகள்
Read this article in:
English |
Hindi |
Tamil |
Gujarati |
Spanish |
Russian |
Marathi |
எனது சமீபகால போதனா பிரயாணத்தின் போது, நான் ரவீந்தரனைச் சந்தித்தேன். அவன் இந்தியாவில் வளர்ந்து, மேலை நாட்டில் பல வருடங்கள் வாழ்ந்துள்ளான். அவன் தான் வளர்ந்து வருகையில் தெரிந்து கொண்ட நம்பிக்கைகள் மேல் நினைவை இறுக்கப்பற்றி ஊஞ்சலாடும் கேள்விகளைக் கொண்டிருந்தான். தனது ஊர்வாழ் இந்துக்கள் தாம் தமது கிராம தெய்வங்களை முறையாகவும் வழக்கமாகவும் கவனிக்காதிருந்தால், அவை அவர்கள்தம் வாழ்க்கையில் தீமைகளை ஏற்படச் செய்யும் என்ற பயம் கொண்டிருந்தனர். ஆக அவர்கள் பரம்பரை பரம்பரையாகத் தாம் வழிபடும் கிராம தெய்வங்களை திருப்திபடுத்துவதில் முனைப்பாயிருந்தனர். இப்படியான வழிபாட்டின் ஆதாரம் பயம்தான். குறிப்பாக, சடங்குகளைச் சரியாகச் செய்யாதிருந்தால், நமக்கு தண்டனை கிட்டும் அல்லது மற்றொரு வகையில் வருந்தக்கூடும் என்பதே.
இந்து மதத்தின் பெரும் தெய்வங்கள் உளக்கொதிப்பு, தீங்கிழைத்தல், நீதி தீர்த்தல், பழி வாங்குதல் மற்றும் அற்பமான உணர்வு நிலைகளில் வாழ்வதில்லை என்று நான் உறுதியளித்தேன். அவர்கள் அன்பாலும் ஒளியாலும் ஆனவர்கள், தமது ஆசீர்வாதங்களை நம் அனைவரின் மீதும் பொழிந்து வருகின்றனர். நமது தவறுகள், பலகீனம் மற்றும் மறதிகளைப் பொருட்டாகக் கருதுவதில்லை. இந்த நம்பிக்கை அடிப்படையாயிருக்கையில், இந்து மதம் ஆனந்தத்தை கருவாகக் கொண்டது. இதில் ஒருவன் தெய்வம் மனக்குறைப் பட்டுக் கொள்ளும், அல்லது பூஜையை பூரணமாகச் செய்யாவிடில் தண்டனைக் கொடுக்கும் என பயந்து நடுங்குவதில்லை. உச்சப்பார்வையில் வழிபாடு என்பது அன்பின் தொடர் வெளிப்பாடே. கடவுள்தான் அன்பு, அன்பின்றி வேறில்லை.
எனது குருதேவர், சிவாய சுப்பிரமுனியசுவாமி, பகன்றது: “இந்து மதம் ஆனந்தமான மதம், பல்வேறு மேற்கத்திய மதங்களில் காணப்படும் மனச்சுமைகளில் இருந்து விடுபட்டுள்ளது. பழிவாங்கத் துடிக்கும் கடவுள் என்ற கருத்திலிருந்து இது விடுபட்டுள்ளது. நித்திய நரகம் என்ற கருத்திலிருந்து விடுபட்டுள்ளது. மூல பாவம் என்ற கருத்திலிருந்து விடுபட்டுள்ளது. ஓரே ஒரு, சரியான ஒற்றை ஆன்மீகப் பாதை என்றக் கருத்திலிருந்து விடுபட்டுள்ளது.”
ரவீந்திரன் தனது கிராம நம்பிக்கைகளைப் பற்றி மேலும் என்னிடம் சொன்னான். ஒரு குழந்தையின் மரணம், பெரு வெள்ளம், திடீர் வியாதி போன்ற தீயவை நடந்தால், பெரியவர்கள் ஏதேனும் கட்டாயச் சடங்குகளில் குறை ஏற்பட்டுள்ளதா எனப் பார்ப்பர், ஏனெனில் வழிபாட்டின் சிலவற்றில் அலட்சியத்தால்தான் தாம் தேவதைகளால் தண்டிக்கப்படுகின்றோம் என்ற நம்பிக்கையால்தான். தெய்வங்களின் இயற்குணத்தை இன்னும் அறிவதனால், இத்தகைய ஆதாரமற்ற நம்பிக்கையிலிருந்து மீளலாம் என அவன் நம்பினான்.
இந்து தத்துவம், நமது வாழ்வின் எல்லா நிகழ்வுகளும், நல்லதோ கெட்டதோ, நாம் கடந்த வாழ்க்கையில் செய்த காரியங்களின் பலனால்தான் நடக்கின்றன என போதிக்கின்றது. ஓர் இக்கட்டான நிலை, தானே ஏற்படுத்திய சங்கடமே அன்றி கடவுளிடம் இருந்து வரும் தண்டனை அல்ல. இருமை நிலத்தில் நடைபெறும் வாழ்க்கையானது, இயற்கைச் சக்திகளின் விளையாட்டு மைதானம், உடல் பெற்ற உயிர்கள் ஆனந்தம் கவலை, ஊக்கம் அழுத்தம், வெற்றி தோல்வி, நலம் வியாதி, நல்ல காலம் கெட்ட காலம் ஆகியவற்றை அனுபவிக்கின்றன.
உணர்வுகளின் ஆழங்களில் இருக்கும் தெய்வங்கள், உடல் பெற்றுள்ள ஆத்மாக்களின் சம்சார பயணத்தில் உதவும் பொருட்டு, ஆங்கே எப்போதும் இருக்கின்றன. பூஜை சடங்குகள் செய்யப்படுவது அவர்களை குஷிப்படுத்துவதற்கும் அவர்களின் கொடூரத்தைத் தவிர்ப்பதற்காக அல்ல, மாறாக அவர்களை ஆராதிப்பதற்கும் அவர்களின் ஆசீர்வாதங்களையும் வழிகாட்டுதலையும் எழும்பச் செய்வதற்குமே ஆகும்.
தீய சக்திகள் மற்றும் தீய முயற்சிகள் ஆவியுலக வாசிகளால் முன்னெடுக்கப் பட்டு, உடல் பெற்ற ஆத்மாக்களின் வாழ்க்கையைச் சீரழிக்க இருப்பதால், சடங்குகள் மூலமாகப் பாதுகாப்பு ஏற்படுத்தப்படுகின்றது, சடங்கிற்கான இந்நோக்கத்தை மறை நூட்களும் விவரிக்கின்றன. இவ்வாறான தீய உயிர்களிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும் பொருட்டு, உயர்ந்த, அதிக சக்திவாய்ந்த நன்மை நல்கும் இந்து மத தெய்வங்களின் ஆசீர்வாதத்தால் நலம் நிறைந்த ஆன்மீக சக்தி கேடயத்தைக் கட்டுவது, தலை சிறந்த முறை என குருதேவர் போதித்தார். சுமூகம், தூய்மை மற்றும் தெய்வங்கள் மற்றும் அவர்தம் தேவதைகளுடனும் நெருங்கியத் தொடர்பிருக்கையில், ஆவியுலகவாசிகள் பலமின்றி இருப்பர்.
அதே பயணத்தில் ஒரு பதின்ம வயது பையன், மிக ஆர்வத்துடன், கேள்வி ஒன்றைக் கேட்டான். “நான் கோயிலில் இருக்கும்போது எல்லா தெய்வங்களையும் வழிபட வேண்டுமா அல்லது கணேசப் பெருமானிடம் மட்டும் கவனம் செலுத்த வேண்டுமா? ஒற்றை நோக்கோடு இருக்கையில் நான் அவரிடம் இன்னும் நெருங்கி இருப்பதாக உணருகின்றேன். மற்ற தெய்வங்களிடம் இதுவரைக் கொண்டிராத ஒருவித தொடர்பை நான் உருவாக்கத் தொடங்கியுள்ளேன்.”
ஒரே ஒரு தெய்வத்திடம் கவனம் செய்வது நல்லதே என நான் உறுதி அளித்தேன். உண்மையில், இதுவே பெரும்பாலான இந்துக்கள் செய்யும் காரியம். இருப்பினும், ஒரு கோயிலில் இருக்கையில் அங்கிருக்கும் எல்லா தெய்வங்களுக்கும் மதிப்பும் மரியாதையும் செய்வதே பொருத்தமானது.
“வேறொரு தெய்வத்திற்குப் பூஜை நடக்கையில் உளப்பூர்வமாக வழிபடு, உனது ஆழ்ந்த மரியாதையைக் காட்டு, ஆனால் கணேசரிடம் உனக்குள்ள நெருக்கத்தைப் போன்று அங்கு உணர வேண்டிய தேவையில்லை.”
ஒருவனால் மிக்க கவனத்தோடு நாடப்படும் தெய்வம் இஷ்ட தெய்வம் என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகின்றது, பொதுவில் “போற்றப்படும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட தெய்வம்” எனப் பொருள். வைணவர்கள் பல்வேறான தெய்வ உருவங்களிலிருந்து தேர்ந்தெடுக்கின்றனர்: விஷ்ணு, பாலாஜி, கிருஷ்ணர், ராதை, இராமர், இலட்சுமி, ஹனுமான், நரசிம்மர், மற்றும் புனித கண்டகி நதியில் காணப்படும் கறுப்பு நிற புதைப் படிவ சாலிக்கிரமம். ஸ்மார்த்தர்களோ, பாரம்பரியமாக ஆறு மூர்த்தங்களில் ஒன்றை இஷ்டமாக்கிக் கொள்வர்: சிவன், சக்தி, விஷ்ணு, சூரியன், கணேசர் மற்றும் குமரன் (அல்லது இத்தெய்வங்களின் பாரம்பரிய உருவங்கள்). சாக்தர்கள் பரம்பொருளை சக்தியாக வழிபடுகையில், அவளின் ஆங்காரமான காளிதேவி முதல் சாந்தமும் மென்மையும் வழிந்தோடும் பார்வதி அல்லது அம்பிகை என்ற பல உருவங்கள் ஒன்றில் கவனம் செலுத்துவர். சைவர்கள் தமது வழிபாட்டை அடிப்படையில் சிவலிங்கம், நடராஜர் மற்றும் அர்த்தநாரீசுவரர் மூலமாகச் சிவனிடம் செலுத்துவர். பல சைவர்கள் கார்த்திகேயனைத் தமது இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ளனர். எனது குருதேவர் ஓர் உறுதியானச் சைவர், சிவனை உச்சத் தெய்வமாக வழிபடும்படி போதித்த அவர்,
“ஜட உலக உணர்வுகளுக்கு மிகவும் நெருங்கியும், மிக எளிதில் தொடர்பு கொள்ளப்பட்டு, நமது தினசரி வாழ்க்கை மற்றும் தேவைகளுக்கு மிகவும் உதவும் ஆற்றலுடன் உள்ள” கணேசப் பெருமானின் வழிபாட்டில் தொடங்கும்படியும் போதித்துள்ளார்.
நண்பர்கள் சம்பந்தமான ஓர் உவமை உதவியாயிருக்கும். சிறுவர்களுக்கு பல நண்பர்கள் இருப்பர், ஆனால் ஒரே ஒரு மிகவும் நெருக்கமான ஒருவனிடம்தான் நாம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்வது வழக்கம். இஷ்ட தேவதையும் அவ்வாறே, மற்றும் அந்த தெய்வத்திடம் நாம் கொண்டிருக்கும் உணர்வுகள், நாம் நமது மிக நெருங்கிய நண்பனிடம் கொண்டுள்ளது போன்ற உணர்வாகவே இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட ஒரு தெய்வத்தின் கருணைமிகு தன்மையை அறியும் மற்றொரு அணுகுமுறை, அந்த தெய்வத்தை நமது பெற்றோராகவும் நம்மை அதன் குழந்தையாகவும் பார்ப்பதாகும், இதன் வழி நம்மிடம் தோன்றும் பய உணர்வைக் களைய உதவியாயிருக்கும். உண்மையில் அத்தெய்வமே பரிபூரண பெற்றோர், எனெனில் நாம் என்ன செய்யினும், அவன்/அவள் எப்போதுமே நமக்கு அன்பையும் ஆசீர்வாதத்தையும் வழங்கியவாறே உளர். நாம் தவறிழைக்கும் போது, அவர் கோபமுண்டு நமக்குத் தண்டனைக் கொடுப்பது இல்லை. அத்தெய்வத்தின் அன்பு பரிபூரணமானது, எல்லா காலங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா உயிர்களுக்கும் உண்டு. அத்தெய்வத்திடம் நெருக்கத்தை வளர்க்கையில், நாம் இறுதியில் அந்த பரிபூரண அன்பைக் கண்டும் அதில் திளைத்தும் இருப்போம். திருமந்திரம் இக்கருத்தை உறுதிச் செய்கின்றது. “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலர், அன்பே சிவமாவது யாரும் அறிகிலர், அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.”
கடவுளின் அன்பைப் பற்றிப் பேசுகையில், வைணவ மற்றும் சைவ சமய கருத்துக்களின் ஒற்றுமையை நான் பகிர்வேன். எடுத்துக்காட்டுக்கு, வைணவத்தின் சைதன்ய பள்ளியில், பக்தி ஐந்து படிநிலைகளில் வளர்ச்சி அடைவதாகப் பார்க்கப்படுகின்றது: கடவுளிடம் நடுநிலை உணர்வு, கடவுளுக்குச் சேவை, கடவுளிடம் நட்பு, கடவுளிடம் தாய்-தந்தை உணர்வுகள் மற்றும் கடவுளைக் காதலனாகக் கொள்வது. சைவ மதமும் அவ்வாறே காட்டுகின்றது. முதல் படிநிலை தாச மார்க்கம், “சேவை வழி,” இதில் ஆத்மா கடவுளிடம் தொழிலாளி முதலாளியிடம் கொள்ளும் உறவு. இரண்டாவது படிநிலை, சற்புத்திர மார்க்கம், நமது உறவு ஒரு பிள்ளை பெற்றோரிடம் உறவாடுவது போன்றது. மூன்றாவது படிநிலை சகமார்க்கம், கடவுள் நமக்கு ஒரு நண்பனைப் போலிருக்கின்றார். நான்காவது முதிர்ந்த நிலையில், சன்மார்க்கம் எனப்படும் “உண்மையான பாதை,” கடவுள் நமது மிகவும் நெருக்கமான காதல் செய்யப்படும் ஒருவனாகின்றார். இரண்டு சமயங்களும் உயிர் கடவுளை மென்மேலும் நெருங்கி வருவதைக் குறிக்கின்றன, படிப்படியாக, பக்தியோகத்தின் வழி, பக்தன் ஆழமான கடவுளின் அன்புக்கு இட்டுக் செல்லப்படுகின்றான். சில வழக்கமான பக்திப் பயிற்சிகள்:
சிராவணம்: கடவுளைப் பற்றிய புனித எழுத்துப்படைப்புக்கள் மற்றும் கதைகளைச் செவிமடுப்பது.
கீர்த்தனை: பக்திப்பாடல்கள், பஜனைகளைப் பாடுதல்.
ஸ்மாரணம்: கடவுளின் இருப்பையும் அவர்தம் பெயரையும் நினைவில் வைத்திருத்தல், இதில் மந்திர உச்சாடனமும் அடங்கும்.
பாத சேவனம்: திருவடிகளுக்குச் சேவை செய்தல், இதில் மனுக்குலத்திற்குச் செவையாற்றுவதும் அடங்கும்.
அர்ச்சனை: கோயில் வழிபாட்டுச் சடங்கில் கலந்து கொள்வது மற்றும் வீட்டுப் பூஜை மாடத்தில் வழிபாடு செய்வது.
வந்தனம்: தெய்வத்திடம் விழுந்து வணங்குவது.
ஆத்ம நிவேதனம்: ஒட்டுமொத்தச் சரணாகதி.
பக்தி யோகத்தில் தொடர்புக்குத் தேவையான குணாநலன்கள் வளர்க்கப்படுகின்றன. அன்பு, தன்னலமின்மை, தூய்மை ஆகியன மூலம் ஆணவ குறைப்பு மற்றும் கடவுளிடம் சரணடைதல் நிகழ்கின்றன. இந்த ஒரு சரணாகதி விஷயத்தில் எல்லா பிரிவுகளும் ஒற்றுமையில் கலக்கின்றன. நாம் சரணாகதி அடைந்ததை அறிய, அனைத்தும் கடவுளின் அருளாளே நடக்கின்றன, நமது செயல்கள் அல்ல என்ற அறிவே அடையாளம். இவ்வாறாகிய வழிபாட்டில், சிறிதளவு கூட பயத்தின் சுவடுகள் இல்லை.
இளம் ஆடவன் ஒருவனுக்கு எழுதிய கடிதத்தில், எங்கள் பரமகுரு யோகசுவாமிகள் (1872-1964) ஐக்கியப் பார்வையை எவ்வாறு கடவுளிடம் மட்டுமின்றி, ஆனால் எல்லாவற்றிடத்தும் கொண்டிருப்பது என விளக்கியுள்ளார்.
“நான் உன்னிடம், நீ என்னிடம். நம்மிடம் தூரம் இல்லை. நான் நீ, நீ நான். பயப்படுவதற்கு என்ன உள்ளது? பார்! நான் நீயாக இருக்கின்றேன். ஆக நீ என்ன செய்ய வேண்டும். நீ அன்பு செய்ய வேண்டும். யாரிடம்? அனைவரிடமும். மேலும் தெளிவாக பேச வேண்டின், உனது சுயதன்மை அன்பு. நீ மட்டுமல்ல. எல்லாம் அன்பினால் ஊடுருவப்பட்டுள்ளது. ஆனால், அங்கே ‘எல்லாம்,’ என்ற ஒன்று இல்லை. காரணம் நீ மட்டுமே இருக்கின்றாய். எல்லாம் நீயே!”