image

ஆசிரியர் பீடம்

தீங்கிழையாமை: தலையாய ஒழுக்கம்

______________________

கர்மச் சட்டத்தில் நம்பிக்கையும் எல்லா உயிர்களின் தெய்வீகத்தை ஏற்பதும் கருணைமிகு தீங்கிழையாமையான அஹிம்சையின் இரட்டைத் தூண்கள்

______________________

சற்குரு போதிநாத வேலன்சுவாமிகள்

image

Read this article in:
English |
Italian |
Hindi |
Gujarati |
Tamil |
Spanish |

ஒவ்வொரு இந்துவின் முதல் தலையாய நெறிக் கொள்கை தீங்கிழையாமை ஆகும். சமஸ்கிருதத்தில் இந்த ஒழுக்கம் அஹிம்சை எனப்படுகின்றது. மஹாபாரதம் இதன் முக்கியத்தைப் போற்றுகின்றது, “அஹிம்சையே உச்ச தர்மம். அதுவே உச்சத் தூய்மை. இதுவே அதிஉச்ச உண்மையாகி மற்ற எல்லா தர்மங்களும் இதிலிருந்தே வருகின்றன.” தலைச் சிறப்பான ஒரு விளக்கம் சாந்தில்ய உபநிஷதத்தில் காணப்படுகின்றது: “எந்த நேரத்திலும், எந்த உயிருக்கும் ஒருவனது மனம், சொல் மற்றும் உடலால் வலியை ஏற்படுத்தாமல் இருப்பதே தர்மம்.” இந்த தீங்கிழையாமையின் மூன்று அடுக்கு தன்மையை கவனிக்கவும்: இது நமது செயல்கள் மட்டுமின்றி, நமது வார்த்தைகள் மற்றும் சிந்தனைகளுக்கும் பொருந்துகின்றது.

எல்லா சூழ்நிலைகளுக்கும் இந்த தீங்கிழையாமை தீர்க்கமாகின்றதா? எனது குருதேவர், சிவாய சுப்பிரமுனியசுவாமி, சில வருத்தத்திற்குரிய நிபந்தனை விதிவிலக்குகளைக் கொண்டு பதிலளித்துள்ளார். முதல் விதிவிலக்கு மிகக் கடுமையான சூழ்நிலைகளில் உபயோகம் ஆகின்றது, அதாவது உடனே நேரிடவிருக்கும் ஆபத்துக்களில் இருந்து தன்னையோ மற்றவரையோ காக்கும் செயலில் ஒருவன் காயம் விளைவிக்கவோ கொல்லவோ முடிவு செய்யலாம். மற்ற விதிவிலக்கு காவல்துறை அல்லது இராணுவ உறுப்பினர்களுக்கு ஆகும். இருப்பினும் இந்த நபர்கள் தீர்க்கமான தேவை இருந்தால் ஒழிய வன்முறையைப் பயன்படுத்தக் கூடாது. லாஸ் ஏஞ்சலிஸ் காவல்துறையின் மிகக்குறைந்த அளவிலான வன்முறை என்ற கொள்கை இந்த இந்துப் பார்வையுடன் இசைந்துப் போகின்றது. “சட்டவிதிகளைப் பேணுதல் அல்லது மீண்டும் ஒழுங்கை நிலைநிறுத்துவது ஆகியவற்றிற்கான பேச்சுக்கள், அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கை ஆகியன காவல்துறையின் குறிக்கோளை அடையப் போதுமாக இல்லாத பட்சத்தில், காவல்துறையினர் வன்முறையைத் தேவையான அளவு பயன்படுத்த வேண்டும்; மேலும் காவல்துறையின் குறிக்கோளை அடைய, எந்த ஒரு நிலையிலும், நியாயமான அளவு பலமே பயன்படுத்தப்பட வேண்டும்.”

உனக்கு, உன் குடும்பத்தார், உனது மதம் மற்றும் நாட்டிற்கு ஏற்பட்ட காயத்திற்கு பதிலடிக் கொடுப்பதே வன்முறையைப் பயன்படுத்துவதற்கான பொதுவான நியாயம். அத்தகைய சூழல்களில் சுயமாகவே பதிலடிக் கொடுக்க நீ கடமைப்பட்டிருக்கின்றாய் என நம்புபவர்கள் பலர் உலகில் உள்ளனர். இது பொதுவில் “ஒரு கண்ணுக்கு மறு கண்” சிந்தனை எனப்படுகின்றது. ஆனால் இந்து மதம் இக்கருத்தை ஆதரிக்கவில்லை. நமது மிகப் பழமையான மறைநூலான ரிக் வேதம் எதிராகவே பேசுகின்றது: “அடிக்கு அடி, சாபத்திற்குச் சாபம், அல்லது வஞ்சகத்திற்கு வஞ்சகம் வேண்டாம். மாறாக ஆசீர்வாதங்களைப் பொழி.”

பழி வாங்குவதற்கு பதிலாக, ஒரு தீர்வைக் காண்பதற்கு சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளைக் கையாளவே இந்துமதம் விரும்பும். ஒரு வழக்கமான படத்தின் கதை அமைப்பைப் பார்ப்போம். உன் தம்பி கொள்ளை ஒன்றின்போது சுட்டுக் கொள்ளப்படுகின்றான், படத்தின் மீதம் யாவும் நீ அந்த கொள்ளையனைத் துரத்தி துரத்தி, சுட்டுக் கொல்வதால் தண்டனை வழங்கி பழி தீர்க்கின்றாய். இதனால் அடுத்தப் பிறவியில் என்ன நடக்கும்? கொலைச் செயல் என்ற எதிர்மறைக் கர்மவினை கண்டிப்பாக உண்டு. நடக்கவிருக்கும் மற்ற ஒரு கொள்ளைச் சம்பவத்தில் நீ கொல்லப்படும் சாத்தியம் உண்டு. காவல்துறையினரே இந்தக் கொள்ளையன் விஷயத்தை கையாள விட்டு விடுவது மேலானது. சட்டத்தை நிலைநிறுத்த தான் சத்தியம் செய்திருப்பதால் கொள்ளையனைப் பிடிக்கும் முயற்சியில் காவலாளி அவனைக் காயப்படுத்தினாலும் எந்த ஒரு தீய கர்மவினையும் உருவாவது இல்லை.

வார்த்தைகளால் மற்றவர்களைக் காயப்படுத்துவது, கடுமையாகப் பேசுவது அல்லது கத்துவது அடங்கியவை தவிர்க்கப்பட வேண்டும். மேலும், மறைமுகமாக கேலி, கிண்டல், வதந்தி, புறம்கூறல் ஆகியன மூலமும் தீங்கு செய்வது உண்டு. எப்படி நாம் பேசும் விதம் தீங்கு செய்கின்றதா அல்லது உதவியாக இருக்கின்றதா எனத் தெரியும்? நாம் சொல்வது உண்மை, இரக்கம், உதவியானது மற்றும் தேவையானது என்ற நான்கு அடுக்கு விசாரணை மூலம் இதனை நாம் உறுதி செய்யலாம். இவை யாவும் இருந்தால், கண்டிப்பாக அது தீங்கை உண்டாக்காது.

புறம் சொல்வதைக் கேட்க அவர்கள்தான் இல்லையே, இது அவர்களைக் காயப்படுத்துமா என நீ யோசிக்கலாம். அவர்கள் உன் சிந்தனா அலைகளையே உணருகின்றார்கள். நாம் வெளியே சொல்லாத தீய எண்ணங்களுக்கும் இது பொருந்துகின்றது. இரண்டுமே மிக நுட்பமான தீங்குகள். என் குரு இவ்வாறு விவரித்திருந்தார்: “நீ மனத்தாலும் வார்த்தைகளாலும் புறம் மற்றும் வதந்தி பேசி மற்றவரை இழிக்கையில், நீ அவர்களைக் காயப்படுத்துவாய். நீ அவர்கள் தற்போதைய சூழலிலேயே நிலைகொள்ளவும், அவர்களது முன்னேற்றத்திற்கு கஷ்டத்தையும் ஏற்படுத்துகின்றாய். நீ அவர்களிடத்து வெளிப்படுத்தும் அவலட்சணத்தை அவர்களால் உணரமுடியும்.

சாந்தில்ய உபநிஷதம் கூறும் அஹிம்சை வரையறையை மீண்டும் பார்க்கையில், நாம் “எந்த உயிருக்கும் வலியை ஏற்படுத்தாமை” என்ற கூற்றைக் கவனிக்கின்றோம். வேறுபடியாகக் கூறின், அஹிம்சை மனிதர்களையும் விஞ்சி பரந்துள்ளது. இது மிருகங்கள், பூச்சிகள் மற்றும் தாவரங்கள் என அடங்கும். யஜுர் வேதத்தின் ஒரு வரி இந்த கருத்தை நேரடியாகவே பேசுகின்றது: “கடவுள் உனக்கு அளித்த உடலைக் கொண்டு மனிதன், மிருகம் உட்பட எதனையும் நீ கொல்லக்கூடாது.”

இந்த ஆணையை மதிக்கும் வண்ணம் பல இந்துக்கள் சைவ உணவாளியாக இருப்பர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நெறி நூலான திருக்குறளில், “புலால் மறுத்தல்” என்ற ஒரு அதிகாரம் முழுதுமே சைவ உணவுண்பதைப் பற்றியது. மாமீசம் என்பது கொல்லப்பட்ட ஒன்றின் சதை என்பதால் உள்நோக்கு மிக்கவர்கள் புலாலை மறுத்து இருப்பர், இவ்வாறான கட்டுப்பாட்டுச் செயல் ஆயிரம் நெய் யாகங்களை விட அதிக மதிப்பு கொண்டது என அது பகருகின்றது.

பூச்சிகளிடத்தும் தீங்கிழையாமை கையாளப்படுகின்றது. வீட்டிலிருக்கும் தொல்லைக் கொடுக்கும் பிராணிகளைக் கண்மூடித்தனமாகக் கொல்வதை விடுத்து, அவற்றின் நுழைவைத் தடுக்கலாம். தோட்டத்திலிருக்கும் பூச்சி/பிராணிகளைக் கொல்வதை விடுத்து இயற்கை வழிகளால் அவற்றை விரட்டலாம். விலங்குகள், கிருமிகள் மற்றும் வியாதிகள் மனித உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகையில், அவை அழிக்கப்படுவது ஒரு வருந்தத்தக்க விதிவிலக்கு ஆகின்றது.

இந்த இரண்டு தத்துவக் கொள்கைகள் அஹிம்சைக்கான ஆதாரமாகின்றன. முதலாவது கர்மச் சட்டம். நாம் மற்றவரைத் தாக்கினால், எதிர்காலத்தில் நாம் தாக்கப்படுவோம் என்பது வன்முறையைத் தவிர்ப்பதற்கான வலுவான உந்தல். திருக்குறளின் “இன்னாசெய்யாமை” என்ற அதிகாரம் இந்த உள்நோக்கை வழங்குகின்றது: “பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்.”

image

S. RAJAM

Regrettable exceptions: While nonviolence is a guiding principle for Hindus, there are instances when violence is permitted. One such exception is the legal enforcement of law and the protection of society and the nation. Here a general directs the army, whose duty may rightly include unavoidable injury.
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • • •

எல்லாருக்கு உள்ளும், எல்லா பொருள்களிடத்தும் தெய்வீகம் பிரகாசித்துக் கொண்டிருப்பதை காண்பது அஹிம்சைக்கான இரண்டாவது ஆதாரம் ஆகின்றது. ஒருவரிடத்து தெய்வீகத்தை நாம் பார்க்கையில், இயற்கையிலேயே நாம் அவர்களுக்கு தீங்குச் செய்ய மாட்டோம். சமயநெறி நிற்கும் இந்துக்கள் அசுர பாணியில் செயல்படும் பாதக குற்றவாளிகளிடத்தும் பயங்கரவாதிகளிடத்தும் கூட தெய்வீகத்தைப் பார்ப்பர். 2002இல் பாலியில் பயங்கரவாதிகள் ஒரு பான விடுதியில் குண்டு வெடித்து 200க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றனர். பாலி இந்துக்கள் தீங்கிழைத்தவர்களுக்கு மன்னிப்பு கோரி ஒரு சடங்கைச் செய்தனர். இது ஒரு அதிசயத்தக்க எடுத்துக்காட்டு ஆகும்.

சிலர் அடிப்படையிலேயே தீயவர்கள், எதிரிகள் ஆகையால் அவர்களை மனிதாபமானம் அற்ற முறையில் நடத்தலாம் என்ற மேற்கத்தியப் பார்வையை ஏந்துவதிலிருந்து நாம் உஷாராக இருக்க வேண்டும். கர்மச் சட்டம் எதிரிக்கு தீங்கா அல்லது நண்பனுக்குத் தீங்கா என வித்தியாசப்படுத்தாது. திருக்குறள் உறுதிப்படுத்துகின்றது: “காரணம் ஏதுமின்றி நமக்கு தீங்கை ஏற்படுத்திய எதிரிகளுக்கும் பாதகத்தை விளைவிப்பது, கண்டிப்பாக தடுக்கமுடியாத துக்கத்தை ஏற்படுத்தும்.”

இந்த இரண்டு தத்துவ அடிப்படைகளும் தவிர்த்து, ஏன் தீங்கிழைக்கக்கூடாது என திருக்குறள் மேலும் இரண்டு உந்துதல்களைக் கொடுக்கின்றது. முதலாவது, உயர்குடியினர் இவ்வாறே செயல்படுவர்: “தாமே வெறுப்புடன் காயப்படுத்தப்பட்டாலும், மனதால் தூய்மையானவர்களின் கொள்கை மற்றவர்களுக்கு தீங்கை ஏற்படுத்தாமல் இருப்பதே ஆகும்.” இரண்டாவது உந்தல், தீங்கிழைத்தவர் தனது செயலை திருத்திக்கொள்ளவும் வன்முறையைக் கைவிடவும் ஊக்குவிக்கும் முறையாக அமைகின்றது. இதையே திருக்குறள் சிறப்பாகச் சொல்கின்றது: “இழைக்கப்பட்ட காயங்களுக்கு நன்மையான ஒரு பதிலைச் செய்து, பின்னர் இரண்டையும் மறப்பதனால், தீங்கிழைத்தவர்கள் தமது சுய அவமானத்தாலேயே தண்டிக்கப்படுவர்.”

கருணை குறைவாக இருத்தலே நமது அஹிம்சை பயிற்சிக்குத் தடையாக விளங்கும். நாம் பெருமளவில் சுயநலமும் மற்றவர்களின் உணர்ச்சிகளைக் கண்டுக்கொள்ளாமலும் இருப்பதால், நாம் ஒருவருக்கு தீங்குச் செய்தும், நாம் செய்தது தீங்கு என்பதை அறியாமலே இருப்போம். மனிதர்களிடத்து கருணையை வளர்த்துக் கொள்ள சில ஆலோசனைகள் இருக்கின்றன. முதலாவது மிருகங்களை பராமரித்தல். சிறுவர்களுக்கு கருணையை போதிப்பதில் இது குறிப்பாக உதவி செய்யும். மிருகங்களின் தேவைகளைப் புரிந்துக் கொள்ளவும் தேவையில்லாமல் அவற்றை தொந்தரவு அல்லது காயம் செய்யாமல் வளர்க்க அவர்கள் பயில்வர்.

தோட்ட வேலைகளும் தாவரங்களை வளர்த்தலும் நமது கருணையை வளர்க்கும் மற்றொரு வழியாகும். தாவரம் வளர்வதற்கு, நாம் அதன் தன்மையை அறிந்து கொண்டு, அதனை முறையாக பராமரிக்க வேண்டும். சூரிய வெளிச்சத்தை விரும்பும் தாவரத்தை நிழலில் இட்டு, அது நன்றாக வளர எதிர்பார்க்கக் கூடாது. சிறிது தண்ணீரே தேவையான தாவரத்திற்கு, அதிக அளவு நீர் பாய்ச்சி அது வாழ வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. தாவரங்களையும் மிருகங்களையும் வளர்ப்பது நாம் மனிதர்களை பராமரிப்பதற்குத் தயார் செய்கின்றது.

மூன்றாவது ஆலோசனை கணிணி மற்றும் அதன் விளையாட்டுக்கள் சார்ந்தது. துரதிஷ்டவசமாக, இந்நாளில் பல குழந்தைகள் அளவுக்கதிகமான நேரம் கணிணி பயன்பாட்டில் மூழ்கி, வன்முறை நிறைந்த கணிணி விளையாட்டுக்களை விளையாடுகின்றனர். இது அவர்களின் உணர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சியை குன்றச் செய்யும். மற்றவர்களுக்கான ஆரோக்கிய உணர்வுகள் மங்கி, அவர்கள் கருணைக்கு அண்ணியவர்களாகின்றனர். குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் ஏனையவருடன் ஆரோக்கியமான உறவாடல் ஆகியவற்றுடன் சேர்ந்த நியாயமான அளவு கணிணி பயன்பாடு உடைய சமமான வளர்ப்பு முறை தேவைப்படுகின்றது.

வன்முறையின்மை மற்றும் கருணை ஆகியவற்றை ஒருங்கே அழகுடன் கோர்த்த எனது குருவின் வார்த்தைகள் இங்கே முடிவுரையாகின்றன. “எல்லா உயிர்களிடத்தும் கடுமையான, உணர்ச்சியற்ற, கொடூர உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, கருணையைச் செயல்படுத்துக. கடவுளை எங்கும் காண்க. மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள் மற்றும் பூமியிடம் கூட இரக்கம் கொண்டிருங்கள். மன்னிப்புக் கேட்டு, உண்மையில் திருந்தியவர்களை மன்னியுங்கள். மற்றவர்களின் தேவைகளுக்கும் வருத்தங்களுக்கும் பரிதாபம் செய்யுங்கள். வறியவர்கள், வயோதிகர்கள், வலியுண்டவர் ஆகியோரை மதித்து உதவி செய்யுங்கள். குடும்ப சித்திரவதை மற்றும் ஏனையக் கொடூரங்களை எதிருங்கள்.”