நமது உணர்வுநிலை தினசரி செயல்படும் வகைகள்

உணர்வுநிலையின் நான்கு அடிப்படை இயக்கத்தை விவரிப்பதன் மூலம் மனதின் மர்மங்களை அறிந்து கொள்வதற்கு பண்டைய நூல்கள் நமக்கு ஒரு வழியை போதிக்கின்றன.

சத்குரு போதிநாத வேலன்சுவாமிகள்

பண்டைய வேதங்கள் மற்றும் ஆகமங்களில் இருந்து எடுக்கப்பட்டு, வெவ்வேறு தேவதைகளின் மூலமாக தெய்வீகம் வெளிக்கொணரப்படும் சடங்கு முறைகளை மையமாகக் கொண்ட ஒரு மதம்தான் இந்து சமயம் என்பதே இந்து மதத்தைப் பற்றிய பிரபலமான கருத்தும் பார்வையும் ஆகிறது. இருப்பினும் இந்த விவரிப்பு இந்து சமயத்தின் ஆழமான போதனைகளை, உதாரணத்திற்கு மனதின் நான்கு வித்தியாசமான உணர்வுநிலைகள் பற்றிய பண்டைய உள்நோக்குமிக்க கண்டுபிடிப்புகளை புறக்கணித்து இருக்கிறது. மனதின் உணர்வுநிலைகளை அடக்கிய எழுத்துப்படிவம் சாண்டோக்கிய உபநிடதம் ஆகும், இது கி.பி.  8 முதல் 6 வது நூற்றாண்டு கால கட்டத்தில் தோன்றியதாக பல்வாறாக கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மனிதர்கள் அனுபவிக்கும் உணர்வுநிலைகளைப் பற்றி இந்தியாவின் ரிஷிமார்கள் தெரியப்படுத்தியிருக்கும் விஷயங்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே நிகழ்ந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. ஏறக்குறைய ஏழு நூற்றாண்டுகள் பின்னர் வந்தது என கொள்ளப்படும் மாண்டூக்ய உபநிடதத்தின் 12 நூற்பாக்களில் இதே கருத்துக்கள் இன்னும் விரிவாக காணப்படுகின்றன.

மனதின் இந்த நான்கு செயல்பாட்டு வகைகள், சமஸ்கிருதத்தில் அவஸ்தை என அழைக்கப்படுகின்றன, அவை: ஜக்ரத் (அல்லது வைஸ்வனர), சாதாரண விழிப்புநிலை; ஸ்வபணம் (அல்லது தைஜச), கனவு; சுஷுப்தி (அல்லது ப்ராக்ஞ), ஆழ்ந்த உறக்கம்; மற்றும் துரீயம் “நான்காவது,” உயர் உணர்வுநிலை அல்லது சமாதி. ஒரு விக்கிபீடியா வழங்குனர் உபநிஷத்துகளில் காணப்படும் இந்த போதனைகளைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்: “இந்து மதத்தின் செல்வாக்கு காரணத்தினால் வெவ்வேறான உணர்வுநிலைகள் பற்றிய குறிப்பிட்ட வித்தியாசங்கள் பண்டைய இந்திய சிந்தனைகளில் தென்படுகின்றன. உபநிஷத்துக்களின் ஒரு மையக் கருத்து யாதெனில் மனிதன் ஒருவனின் நிலையில்லாத, சாமானிய நிலையிலான இருப்பையும், அவனது அனாதியான, நிலைத்த ஆத்ம இருப்பையும் பற்றிய தெளிவான அறிவு. பல்வேறான இந்து கோட்பாடுகளும், புத்தமதமும் நமது இருப்பின் பல்வேறு படிநிலைகளை பற்றி சவால் கொண்டிருக்கின்றன, ஆனால் அவை யாவும் உயர் உணர்வுநிலைகளை அடைய வேண்டிய முக்கியத்தை வலியுறுத்தியுள்ளன. இந்த குறிக்கோளை அடைவதற்கு பயன்படுத்தப்படும் யுக்திகளே யோகம் எனப்படுகின்றன.”

இந்த நான்கு நிலைகளையும் ஒவ்வொன்றாக, இன்னும் விலாவாரியாக பார்ப்போம். சாமானிய விழிப்புநிலையில், ஆத்மன் தன்னைப் பற்றிய குறுகிய அளவு உணர்வே கொண்டுள்ளது, வெளிப்புற பொருள்களைப் பற்றி அறிகிறது, அவற்றை அனுபவிக்கிறது. கனவு நிலையில், அந்த ஆத்மன் அதே அளவு குறுகிய உணர்வையே கொண்டுள்ளது, இவ்வேளையில் தனது சொந்த மனோ அமைப்பையும் சூக்கும உலகையும் அறிகிறது, அனுபவிக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில், பொருள்களைப் பற்றிய உணர்வு இல்லாமல் போகிறது, குறுகிய உணர்வு ஓரளவுக்கு நீங்கி, ஓர் ஆழ்ந்த அமைதி அனுபவிக்கப் படுகிறது. நான்காவது நிலையில், அந்த ஆத்மன் தனது முழு ஆன்மீக தன்மையில் வீற்றிருக்கிறது. அப்பொழுது அந்த மனிதன் சர்வவியாபினாக, தன்னை விட வேறு ஒன்று உண்டு என்ற பேதமை நீங்கி இருக்கிறான். இவ்விஷயத்தை நாம் மூன்று அறைகள் கொண்ட ஒரு வீட்டில் வசிப்பதாக  எண்ணிப் பார்க்கலாம்: ஒன்று சாமனிய விழிப்புநிலைக்கு, ஒன்று கனவுக்கு, மூன்றாவது ஆழ்ந்த உறக்கத்திற்கு. நாம் அந்த வீட்டின் உள்ளே இருக்கும் வரையில், நமது உணர்வுநிலை குறுகியது. ஆனால், நாம் வீட்டிலிருந்து வெளியே வருகையில், அந்த குறுகிய தன்மையை நம்மால் நீக்கி விட முடியும், நாம் நம்மை சர்வவியாபக உணர்வுநிலை என அனுபவத்தில் உணர முடியும்.

மாண்டூக்ய உபநிடதத்தின் (சுவாமி நிஹிலானந்தாவின் மொழிபெயர்ப்பு) முதல் இரண்டு வசனங்கள் ஆத்மா, பிரம்மம் மற்றும் ஓம் ஆகியன எவ்வாறு ஒரே பொருளாக இருக்கின்றன என்ற கருத்தை காட்டுகின்றன.

  1. ஓம், இந்த சொல், அனைத்துமாக இருக்கிறது [அதாவது ஒட்டுமொத்த பிரபஞ்சம்]. அதன் தெளிவான விளக்கம் பின்வருகிறது: எல்லா கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலமும், கண்டிப்பாக, ஓம் என்பதுதான். மேலும், மூவகை கால பிரிவுகளுக்கு அப்பால் பட்டு எது இருப்பினும் அதுவும் கூட உண்மையிலேயே ஓம் ஆகும்.
  1. இருப்பில் இருக்கும் அனைத்துமே, நிச்சயமாக, பிரம்மம். இந்த ஆத்மன் பிரம்மமே. இதே ஆத்மன் நான்கு பாதங்களைக் கொண்டுள்ளது.

இந்த கூற்று “இந்த ஆத்மன் பிரம்மம் ஆகும்” (சமஸ்கிருதத்தில் “அயம் ஆத்ம ப்ரஹ்ம”) உபநிடதங்களின் நான்கு மஹாவாக்கியங்களில் ஒன்றாகும், இது ஆத்மனும் பிரம்மமும் ஒன்றாய் இருப்பதை பறைச் சாற்றுகிறது.

ஓம் உதவியுடன் துரியத்தை அடைவது

இந்த ஒருமை நிலையை அறிவதற்கு ஓங்காரத்தை ஒரு யுக்தியாக பயன்படுத்த முடியும் என முண்டக உபநிடதம் சொல்கிறது. “ஓம் என்பது வில், ஆத்மன் என்பது அம்பு, பிரம்மம் என்பது குறி. அது சலனமில்லாத மனதினால் எய்தப்பட வேண்டும். இதனால் ஆத்மன் பிரம்மத்துடன் ஒன்றாகி விடுகிறது, அம்பு குறியில் சேர்வது போல்.” கண்டிப்பாக ஓங்காரத்தை ஒரு வில்லாக பயன்படுத்துவது என்பது அதனை ஒரு மந்திரமாக திரும்பத் திரும்ப ஜெபிப்பதுதான், இது ஒரு ஜெப யோகப் பயிற்சி. எனது குருதேவர், சிவாய சுப்பிரமுனியசுவாமிகள், இந்த பயிற்சியை தனது சிவனோடு சாயுச்சியம் என்ற நூலின் “நேர்அறிவாற்றல்” எனும் பகுதியில் விவரித்து கூறியுள்ளார்.

“நூற்பா எழுபது: படைப்பாற்றால் மிக்க சக்திகள் தடம் மாறி போகாமல் இருப்பதற்கு உதவவும், அவற்றை பண்புமாற்றம்  செய்யவும் குறிப்பிட்ட மந்திரங்கள் செபிக்கப்படுகின்றன. இவை இயல்பாகவே மேல்மட்ட மனத்தை குவிந்திருக்கச் செய்கின்றன, அதன் ஆழ்மனத்தை சுமூகமடையச் செய்கின்றன மற்றும் மூளையை ஆற்றலுடன் இருக்கச் செய்கின்றன. இதனால் படைப்புத்திறன்மிகு சக்திகள் மிருகத்தன்மையிலிருந்து வெளியேறி புத்தி மற்றும் உயர் மனநிலைகளுக்கு செல்கின்றன.”

“நூற்பா எழுபத்து ஒன்று: ஓம் (அ-உ-ம்) ஓசை வடிவங்கள் சரியாக உச்சரிக்கப் படுமானால், மிருகத்தன்மையிலிருந்து புத்திக்கும், மிருகத்தன்மை-புத்தி இவற்றிலிருந்து உயர் உணர்வுநிலைகளுக்குமான உருமாற்றம் நிகழ்கிறது. இதனால் நேரடி அறிவுநிலை பெறப்படுகிறது.” குருதேவர் இந்த நூற்பாவிற்கு சிறு கருத்து பதிவு செய்திருந்தார்: “ஓம் என்பது பிரபஞ்ச மந்திரம் ஆகும், தீட்சை பெற்றவர்களும் சரி, பெறாதவர்களும் சரி, எந்த நிலையிலும், எந்த சூழலிலும், உடம்பு சுத்தமாக இருக்கிறதோ இல்லையோ, இதனை பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.  சரியாக ஓதப்படும் பட்சத்தில், இது உணர்வுநிலையை மேலெழுப்புகிறது, 

ஜட உடலை மனம் மற்றும் ஆன்மிகத்துடன் சுமூகமாக இருக்கும்படி உதவுகிறது,

ஓம் என்பது ஒரு பயன்மிகுந்த மந்திர உச்சாடனமாக இருக்க வேண்டின், அது சரியாக உச்சரிக்கப்பட வேண்டும். முதலாவது ஒலி வடிவம் அ காரம், “ஓ,” என்று உச்சரிக்கப்படுகிறது, ஆனால் சற்றே நீண்டிருக்கும். இரண்டாவது ஒலி வடிவம் உ காரம், சற்று நீளமாக “ஊ” என்று உச்சரிக்கப்படும். மூன்றாவது ஒலி வடிவம் ம காரம், முன் பற்கள் ஒன்றையொன்று தொட்டவாறு  “ம்” என்று நீண்டு உச்சரிக்கப்படும். ஒவ்வொரு முறையும் முழு உச்சரிப்புக்கு ஏழு வினாடிகள் தேவைப்படுகிறது, அகாரத்திற்கு இரண்டு வினாடிகள், உகாரத்திற்கு இரண்டு வினாடிகள் மற்றும் மகாரத்திற்கு மூன்று வினாடிகள். அடுத்த உச்சரிப்புக்கு முன்னர் இரண்டு வினாடிகள் மௌனம் காக்க வேண்டும். இந்த மூன்று ஒலி வடிவங்களும் சேர்த்து ஓதப்படுகின்றன: ஓஓஊஊம்ம்(மௌனம்), ஓஓஊஊம்ம்(மௌனம்), ஓஓஊஊம்ம்(மௌனம்). முதல் ஒலி வடிவம் அகாரம் ஓதும் பொழுதில் நாம் வயிறு மற்றும் நெஞ்சுப்பகுதி அதிர்வதை உணர்கிறோம். இரண்டாவது ஒலியான உகாரத்தை ஓதுகையில் கழுத்து அதிர்கிறது. மூன்றாவது ஒலி வடிவான மகாரம், தலை உச்சியை அதிரச் செய்கிறது.

மாண்டூக்ய உபநிடதம் (நூற்பா 9-12) ஓம் என்பதன் நான்கு பாகங்களுக்கும் உணர்வுநிலையின் நான்கு செயல்வகைகளுக்கும் உள்ள தெளிவான தொடர்பைக் காட்டுகிறது, குருதேவரின் ஓம் என்பதன் அங்கங்களைப் பயன்படுத்தி சூக்கும இருப்பு நிலைகளுக்கு நகர்வதற்கான போதனைகளை ஆதரிக்கிறது.

  1. வைஷ்வனர ஆத்மன், இதன் செயல்பாட்டு மண்டலம் சாமானிய  விழிப்பு நிலை ஆகும். ஓம் என்பதன் அ காரம், முதலாவது பகுதி. அவனது சர்வவியாகம் அல்லது அவன் முதலாவதாக இருப்பதனால் வருகிறது. இதை அறியும் ஒருவன் எல்லா ஆசைகளையும் அடைகிறான், முதலாவதாக வருகிறான் [மாண்புடையவர்கள் மத்தியில்].
  1. தைஜஸ ஆத்மன், இதன் செயல்பாட்டு மண்டலம் கனவு நிலை ஆகும், ஓம் என்பதன் இரண்டாவது சப்த ரூபமாகிய உகாரம், தனது மேன்மை நிலை அல்லது நடுநிலை இருப்பின் காரணமாம். இதை அறியும் ஒருவன் மேலான அறிவை பெறுகிறான், எல்லாரிடத்தும் சரிசம பராமரிப்பை பெறுகிறான், தனது குடும்பத்தில் யார் ஒருவரும் பிரம்மத்தை பற்றிய அறிவிலி இல்லை என்பதை காண்கிறான்.
  2. ப்ராக்ஞ ஆத்மன், இதன் மண்டலம் ஆழ்ந்த உறக்கம், அதாவது ம், மூன்றாவது அட்சரம் [ஓம் என்பதன்], ஏனெனில் இரண்டுமே அளவு ஆகின்றன, மேலும் அவற்றுள் எல்லாமும் ஒன்றாகி விடுகின்றன. இதை அறிந்தவன் எல்லாவற்றையும் அளக்கும் திறன் பெறுகிறான், எல்லாவற்றையும் தன்னுள்ளேயே அறிந்து கொள்கிறான்.
  1. நான்காவது [துரீயம்] தனி அங்கங்கள் இல்லாதது, எவ்வித தொடர்புகளும் இல்லாதது; இது எல்லாவித நிகழ்வுகளும் இன்றி நிற்கிறது; இது சர்வ நன்மை பொருந்தியது, இரண்டற்றது. இந்த ஓம் என்பதே ஆத்மன். இதை அறியும் ஒருவன் தன்னையும் ஆத்மனையும் கலக்கச் செய்கிறான்- ஆம், இதை அறிந்த ஒருவனே. (தனி அங்கங்கள் இல்லை என்றால் ஓசை இல்லை என்று பொருள். துரீயம் என்பது ஓசையில்லாத ஓம்.)

நேர்அறிவாற்றல் பகுதியில், மிருக உணர்ச்சியிலிருந்து பகுத்தறிவுக்கு நகர்வது என குருதேவர் குறிப்பிடும் பொழுது, அவர் நாம் மேல் உணர்வு நிலைகளுக்கு எழும்புவதைக் குறிக்கிறார். எடுத்துக் காட்டுக்கு பயம் என்பது ஓர் எதிர்மறை உணர்ச்சி, நாம் ஓம் ஜெபம் செய்வதன் மூலம் இதிலிருந்து மேலே எழும்பி விடுபடலாம். கொந்தளிப்பான மனநிலையிலிருந்து நாம் சாந்தமான ஒன்றுக்கு இவ்வாறே நகர முடியும். கோபம் என்பது மன்னிப்பு என்ற நிலைக்கு மாற்றப்பட முடியும் – எல்லாம் ஓம் என்பதன் சக்தியினால். ஒரு மனிதன் ஓர் எதிர்மறையான உணர்வுநிலையில் இருக்கையில், அவன் நேர்மறையான ஒன்றுக்கு செல்ல முடியும். இதனை அடைவதற்கு இந்து மதம் கொடுக்கும் பல பயிற்சிகளில் ஓம் மந்திர ஜெபம் என்பதும் ஒன்று. 

சிவனோடு சாயுச்சியம் என்ற நூலின் ஏனைய பகுதிகளில் குருதேவர் சுட்டிக் காட்டுகிறார்: “பொதுவாக மக்கள் பிரச்சனைகளுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, அவற்றை மிகவும் தனிமனித விஷயமாக எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் கோபத்தை அனுபவிக்கையில் அவர்கள் கோபமானவர்களாகி விடுகின்றனர். அவர்கள் ஆனந்தத்தை அனுபவிக்கையில் ஆனந்தம் என்றாகி விடுகின்றனர். ஒரு ஞானி தன்னை அனுபவத்தை சந்திக்கும் ஒரு பொருளாகப் பார்க்கிறார், அந்த அனுபவமாக அல்லாமல். அவர் தன்னை மனதில் பயணம் செய்யும் தூய சாட்சியப் பொருளாக இனம் காண்கிறார். சான் பிரன்சிஸ்கோவில் இருக்கையில், அவர் சான் பிரன்சிஸ்கோ என்று ஆவதில்லை. அது போலவே அவர் கோபத்தில் இருக்கையில், அவர் கோபம் அல்ல. அவர் தனக்கு சொல்லிக் கொள்கிறார், “நான் தூய சக்தி. மனம் மற்றும் உடம்பில் பெருக்கெடுத்து ஓடும் ஆன்மீக சக்தியே நான். எனக்கு தோன்றும் எண்ணங்கள் நான் அல்ல, அல்லது நான் அனுபவிக்கும் அனுபவங்கள் நான் அல்ல.’ ஆக, மனதின் எந்த பகுதிக்கும் பயணிக்கவல்ல ஒரு சுதந்திர பொருளாக தன்னை புது இனங்காண்கிறார். அப்படிப்பட்ட ஒரு மனிதன் எப்பொழுதும் மலையின் உச்சியிலேயே இருக்கிறார்.

“நாம் யார் என்ற நமது கருத்தை நாம் சோதிக்க வேண்டி உள்ளது. நம்மைப் பற்றி நாம் பூரண நல்லெண்ணம் கொண்டிருக்கையில், ‘நான்’ என்பதன் பொருள் மாறத் துவங்குகிறது. ‘நான்’ என்பது தொடர்ந்து நமது உடல் என்று நிலைத்திருப்பதில்லை. ‘நான்’ என்பது சக்தி, சாட்சியம் மற்றும் ஆள்வினை ஆற்றல். வெகு சீக்கிரத்திலேயே நாம் இந்த உடலில் வாழ்கிறோம், ஆனால் நாம் இந்த உடல் அல்ல என்ற முழு உண்மையை அறிகிறோம். ‘நான்’ என்ற வார்த்தையை ஆராயுங்கள், உங்களுக்கு அது என்ன பொருள் படுகிறது என்பதை நேர்மையாக கவனியுங்கள்.”

Leave a Comment

Your name, email and comment may be published in Hinduism Today's "Letters" page in print and online. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top