வீட்டில் செய்யப்படும் பூஜை குடும்பத்தை தெய்வங்களுடன் தொடர்பிக்கிறது, பாதுகாப்பு, முறையான வாழ்க்கை மற்றும் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஆன்மீகத்தைக் கொண்டு வருகிறது.

சத்குரு போதிநாத வேலன்சுவாமிகள்

ஒரு வழிபாட்டு இடத்தில், சமய சடங்கை ஏற்று நடத்துவதற்கு பூஜாரி ஒருவர் நியமனம் செய்யப்பட்டு, அம்மதத்தின் சாதாரண மக்கள் அதில் கலந்து கொள்வது என்பது உலகின் பெரும்பாலான மதங்கள் ஒருசேர கொண்டுள்ள ஒரு பழக்கமாகும். மேற்கத்திய (ஆபிரகாமிய) மதங்களில் இச்செயல் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கிறது. கிழக்கத்திய மதங்களில் வாரத்தில் ஏதோ ஒரு நாளில் அம்மதம் சார்ந்தவர்கள்  வழிபட வேண்டும் என அவர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினம் கிடையாது.

இந்து மதத்தில் தீட்சை மூலமாக பூஜாரிகள் நியமிக்கப் படுகின்றனர், பூஜை என்று அழைக்கப்படும் சடங்குபூர்வ வழிபாட்டை, கோயில் ஒன்றில் தினமும் செய்கின்றனர், சில சமயங்களில் ஒரே நாளில் பல தடவைகள் செய்கிறார்கள். நமது இந்து சொற்களஞ்சியத்தில் (Hindu Lexicon) விவரிக்கப்பட்டுள்ளது, “ஒரு தெய்வ மூர்த்தியை நீர், ஒளி, பூக்கள் கொண்டு வழிபடுவது, கோயில்கள் மற்றும் சன்னிதிகளில் நிகழ்கையில் பூஜை எனப்படுகிறது, இது வேதங்கள் கூறும், புனித அக்கினியின் மூலம் அர்ப்பணிப்பு வஸ்துக்களை செலுத்தும் யாகம் என்ற முறையின் இணை நிகர் ஆகும். இவை இரண்டும் இந்து மதத்தில் காணப்படும் இரண்டு பெரும் போற்றுதல் மற்றும் தொடர்பு கொள்ளும் வழிகளாகும், இவை இந்து மதத்தின் இரண்டு பெரும் அருளப்பட்ட மறைநூல்களில் இருந்து பெறப்பட்டுள்ளன – வேதங்கள் மற்றும் ஆகமங்கள்.”

கோயில்களில் செய்யப்படும் பூஜை, பெரும்பாலும் பல பாகங்களைக் கொண்டிருக்கும், இது பரார்த்த பூஜை என்று அழைக்கப்படும், மற்றவர்களின் நன்மைக்காக இது செய்யப்படுகிறது, கலந்து கொள்பவர்கள் மட்டுமின்றி, மற்ற உலகத்தவருக்கும், அதாவது மனுக்குலத்திற்கு உரித்ததாகும். இந்து மதத்தில் இந்த பூஜைகளில் கலந்து கொள்ள நம்பிக்கை பூண்டிருக்கும் மக்கள் தேர்ந்தெடுக்கும் நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகும். பட்டணப் புரங்களில் பல இந்துக்கள் கோயிலில் நடக்கும் பூஜையில் ஞாயிறு அன்று கலந்து கொள்கிறார்கள், அந்நாள் ஒரு விடுமுறை என்பதால் வாரநாட்களை விட அதிக வசதியாக இருக்கிறது. குறிப்பிடத்தக்க அளவு வழிபாடு வீட்டிலேயே, உத்தமமாக தினசரியும் நிகழ்வதுதான் இந்து மதத்தில் காணப்படும் ஒரு வித்தியாசம் ஆகும். கணவர் அல்லது மூத்த மகன் ஒருவர் செய்யும் இது ஆத்மார்த்த பூஜை எனப்படுகிறது, தனக்குத் தானே செய்து கொள்ளும் பூஜை என்பது இதன் பொருள் . பூஜாரிகளும் கூட தமது  சொந்த இல்லங்களில் தினமும் ஆத்மார்த்த பூஜை செய்து கொள்கின்றனர். காரண ஆகமம் விவரிக்கிறது: “தகுதி உடைய ஒரு பூஜாரி மட்டுமே ஆத்மார்த்த பூஜை அதாவது தனக்கு என்ற பூஜையும், பரார்த்த பூஜை அதாவது பிறருக்கு உரித்தான பூஜையும் செய்யலாம்.” ஆகமம் மேலும் கூறுவது, “ஒருவர் தேர்ந்தெடுத்த லிங்கத்தை அவர் தனது இல்லத்தில் வழிபடுவது, தெய்வ பாதுகாப்பு நோக்கத்திற்காக, ஆத்மார்த்த பூஜை எனப்படுகிறது.” வேறு மாதிரி கூறின், இந்து மதத்தில் ஒரு குடும்ப மனிதன் தனது சொந்த வீட்டில் தானே எளிய ஒரு பூஜாரியாக செயல்படுவது பாரம்பரிய ஒன்றாக இருக்கிறது.

இல்லத்து பூஜை பற்றிய ஒரு அருமையான சாட்சி பகர்தல் ஹிமாலயன் அகாடமி பதிப்பகத்தின் வெளியீடான சிவனுடன் வாழ்தல் என்ற புத்தகத்தின் முகவுரையில் காணப்படுகிறது. “எங்கள் கிராமத்தின் ஒவ்வொரு இந்து குடும்பமும் ஒரு வீட்டு பூஜை மாடத்தைக் கொண்டிருந்தனர். அதில் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் தெய்வங்களை வழிபட்டார்கள். பரம ஏழையும் கூட இதற்காக ஒரு இடத்தை ஒதுக்கி இருந்தார். அவ்வப்போது நிகழும் சடங்குகள் சமய மற்றும் ஆன்மீகத் தன்மை பொருந்தியவையாக இருந்தன, அவை வெளியே தோன்றுபவைகளை விட உள்ளார்ந்த உணர்ச்சிகளைக் குறிப்பவையாகவே இருந்தன.  அவ்வாறான பூஜைகளும் சடங்குகளும் தனி ஒருவருக்கு வெறும் வெளியே நடப்பவைகளை விடுத்து சற்றே நிதானித்து, உள்ளே நோக்கி, இன்னும் அதிக பொருள்மிகுந்த, அதிக ஆழமான ஒன்றில் கவனத்தைக் குவிக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்றன. வழிபாடும் கடவுளின் பெயரில் களிப்படைவதும், புனித நாள்களில் உண்ணாநோன்பு மற்றும் விரதங்கள் மக்களை தினசரி சமாச்சாரங்களை விடுத்து, இன்னும் மேலான, பரந்த இருப்பைக் கவனிக்கச் செய்கின்றன. எனக்கு தெரிந்த சிறப்பான குடும்பங்களில், அந்த தந்தை தினசரி பூஜை சடங்குகளைச் செய்கிறார், மற்றும் குடும்பத்தினர் உடன் சேர்ந்து உதவிகளைச் செய்வர். பழமொழி ஒன்று சொல்வது போலவே இது காணப்படுகிறது, “ஒன்றாக வழிபடும் குடும்பம் ஒன்றாகவே இருக்கும்.”மாபெரும் நகரங்களான மும்பை அல்லது லாஸ் ஏன்சலிஸ் போன்றவற்றில் காணப்படும் மிகு பரபரப்பு சூழலிலும் கூட குறைந்தபட்சம் ஒரு சிறிய பூஜையை செய்து வரும்  பல இந்துக்கள் இருக்கிறார்கள். அன்றாடம் ஒரு சிறிய, சில நிமிட பூஜையாக இருந்தாலும் கூட அது அவர்கள் கவனம் ஒன்றவும், ஆத்மீகமாக மேலெழும்பவும், தமது மனதை நிலையான தளத்தில் இடம் பெறச் செய்வத மூலமாக தத்தம் தொழில்களில் சிறப்பாக செயல்பட உதவுகிறது.”

வழிபாடு நடைபெரும் அறை இல்லத்தின் பூஜை மாடம் எனப்படுகிறது. அது ஒரு தனி அறையாக இருப்பது உத்தமம். அது சாத்தியம் ஆகாத பட்சத்தில், வீட்டின் மற்ற பகுதிகளை விட குறைவான நடமாட்டம் உள்ள ஓர் இடம் பயன்படுத்தப்படலாம். எனது குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமிகள், உத்தமமான ஒரு வீட்டு பூஜை மாடத்தைப் பற்றிய இந்த விவரிப்பைக் கொடுத்திருந்தார்? “ஒவ்வொரு சைவரும் ஒரு வீட்டு பூஜை மாடத்தை நடத்தி வருவார்கள். வீட்டில் மிகவும் அழகான அறை அதுவே, கோயிலின் ஒரு நீட்டிப்பு இதுவாகும், அது தெய்வங்கள் மற்றும் தேவதைகளின் பகுதியாகும், மேலும் தினசரி வழிபாடு மற்றும் தியானத்திற்கான ஒரு புனித அடைக்கலம் ஆகும். எல்லா இந்துக்களுக்கும் காவல் தேவதைகள் உண்டு, அவர்கள் உள்உலகங்களில் வாழ்கிறார்கள், அவர்களின் வாழ்க்கையில் வழிகாட்டுகிறார்கள், காவல் செய்கிறார்கள் மற்றும் பாதுகாக்கிறார்கள். “

“பக்தர்கள் அடிக்கடி செல்லும் கோயிலில் வசிக்கும் பெரும் மகாதேவர்கள் தமது தேவதைகளை தூதுவர்களாக பக்தர்களுடன் அவர்கள்தம் இல்லங்களில் வாசம் செய்ய பணித்து அனுப்பி வைக்கிறார்கள். இவ்வாறு கண்களுக்குப் புலப்படாத, நிரந்தரமான வருகையாளர்களுக்கு ஒரு தனி அறை தயார் செய்யப்பட்டு, அந்த அறையில் முழு குடும்பத்தினரும் நுழைந்து, அங்கே அமர்ந்து, பல தலைமுறைகளாக குடும்பத்தைப் பாதுகாக்க தம்மை அர்ப்பணித்திருக்கும் அவ்வாறான சூக்கும வஸ்துக்களுடன் உள்ளளவில் தொடர்பு கொள்ள இயல்கிறது. அவர்களில் சிலர் அந்த குடும்பத்தினரின் மூதாதையர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வாறான தெய்வீகங்களை கவர்வதற்கு தூங்கும் அறையில் ஒரு குட்டி மாடம் அல்லது ஒரு அலமாரி அல்லது சமையலறையில் சிறிய மேடை போன்றவை போதுமானதாக இருப்பதில்லை. தான் மதிக்கும் ஒருவரை வரவேற்று பின்னர் தனது அலமாரியில் இருக்க வைப்பதோ, அவன் / அவரை சமையலறையில் தூங்கச் சொல்வதோ என சொல்லிவிட்டு, அந்த விருந்தினர் தான் வரவேற்கப்பட்டதாகவும், பாராட்டப்பட்டதாகவும், விருப்பப்பட்டதாகவும்  உணர்கிறார் என நாம் எதிர்பார்ப்பது இல்லையே. எல்லா இந்துக்களும் சிறு வயதில் இருந்தே விருந்தாளி என்பவர் கடவுள்தான் என்றும் தமது வீடு நோக்கி வந்துள்ள எந்த விருந்தாளியும் சிறப்பாக உபசரிக்கப்பட வேண்டும் என போதிக்கப்படுகிறது. இந்துக்கள் கடவுளையும் கடவுளாகவே பாவிப்பர், தேவதைகளை தெய்வங்களாக அனுசரிப்பர் அவர்கள் தமது வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்து வருகையில்… வீட்டு பூஜை அறை மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட்டு வழிபாடு, வேண்டுதல், ஆன்மீக நூல் படிப்பு மற்றும் தியானம் ஆகியவற்றைத் தவிர மற்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவது இல்லை…. அவ்வாறன புனித சடங்குகள் மூலமாக தெய்வீக ஆற்றல்கள் வெளிக்கொணரப்பட்டு, ஒவ்வொரு குடும்பமும் தமது இல்லத்தை ஒரு புனித அடைக்கலமாக உருவாகுகிறார்கள், அது உலகாய விஷயங்களும் கவலைகளும் நீங்கிய ஒரு புகலிடமாக விளங்குகிறது. பூஜைகள் மிகவும் எளிய  செயலாகிய ஒரு விளக்கு ஏற்றி தெய்வத்தின் திருவடியில் ஒரு மலரை இடுவது போன்றதாக இருக்கலாம்; அல்லது அவரை மிகவும் நீண்ட , விளாவாரியான ஒன்றாக, பல்வேறு மந்திர ஒதல் மற்றும் நிவேதனங்களை அர்ப்பணிக்கும் ஒன்றாக இருக்கலாம். எந்த ஒரு பூஜையிலும் பக்தி என்ற ஒன்றே கண்டிப்பாக இருக்க வேண்டிய தேவையாகும்.”

வீட்டு பூஜை மாடம் கோயிலின் ஒரு விரிவாக்கம்தான் என்று குருதேவர் அடிக்கடி வலியுறுத்தினார். குடும்பத்தினர் ஒரு கோயிலுக்கு வழக்கமாக, குறைந்தது வாரத்திற்கு ஒருமுறை செல்வதாக இருந்தால் இது சாத்தியமாகிறது. இந்த வாடிக்கை நிகழ்வு அந்த கோயிலையும் வீட்டு பூஜை மாடத்தையும் உள் உலகங்களில் ஒன்றாக பிணைத்து வைக்கிறது. இந்த தொடர்பை கட்டியெழுப்ப குருதேவர் ஒரு குறிப்பிட்ட பயிற்சியை வழங்கி உள்ளார். நீங்கள் கோயிலில் இருந்து வீடு திரும்பியதும், முதலில் பூஜை மாடத்தில் உள்ள எண்ணை விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். இச்செயல், கோயிலில் இருந்த தேவதைகளை உங்களின் சொந்த பூஜை அறைக்கு கொண்டு வருகிறது, இதனால் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை ஆசீர்வதிக்கின்றனர், வீட்டின் சமய சூழலை பலப்படுத்துகின்றனர். 

“தமது வீட்டில் பூஜை செய்ய எல்லா இந்துக்களும் தகுதி பெற்று இருக்கின்றனரா?” என்பது ஒரு முக்கியமான கேள்வி. காஞ்சி பீடத்தின் மதிப்பிற்குரிய பீடாதிபதியின் பின்வரும் கருத்தைப் பார்க்கையில் அது எப்படி பட்ட பூஜை என்பதைப் பொருத்தே அமைந்திருக்கிறது. “ஒவ்வொரு குடும்பத்தினரும் கண்டிப்பாக ஈஸ்வரனுக்கு பூஜை செய்ய வேண்டும். நெடிய பூஜை செய்ய ஏதுவாக இருக்கிறது என உணருபவர்கள், அதற்கான சரியான தீட்சையைப் பெற்றுக் கொண்டு அவ்வாறு செய்யலாம். மற்றவர்கள் ஒரு சிறிய பூஜையை, பத்துநிமிட அளவில் செய்ய வேண்டும். அலுவலகத்திற்குச் செல்பவர்கள் குறைந்தபட்சமாக இந்த சிறிய வழிபாட்டைச் செய்தே ஆக வேண்டும். புனித மணி கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்தாக வேண்டும்” (ஶ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாசுவாமிகள், 1894 – 1994). சங்கராச்சாரியார் அவர்கள் இவ்வாறாக பெரிய பூஜைகள் செய்ய தீட்சை தேவை என அறிவுறுத்தி உள்ளார். ஒரு சில சிறிய பூஜைகளுக்கு தீட்சை கட்டாயம் இல்லை. 

குவாய் ஆதீனத்தில், நாங்கள் கணேசப் பெருமானுக்கு செய்யும் பொருட்டு ஓர் எளிய வீட்டு பூஜையை உருவாக்கி உள்ளோம், இதற்கு தீட்சை தேவை இல்லை. அதை இங்கே பதிவிரக்கம் செய்யலாம்: www.himalayanacademy.com/looklisten/chanting. அந்த இணையதளம் அந்த பூஜையைக் கற்றுக் கொள்ள இவ்வாறான விவரிப்பையும் பரிந்துரைகளையும் கொடுக்கிறது: “எளிய கணேச பூஜைக்கான மந்திர ஓதல் இங்கு இந்து மதத்தின் தொன்மை மறைநூல் மொழியாகிய சமஸ்கிருதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. உச்சரிப்புக்களைக் கற்றுக் கொள்ள செலவிடப்படும் நேரம் சரியாகவே செலவிடப்படுகிறது. ஒரு பூஜாரி, பண்டிதர் அல்லது சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற ஒருவரிடம் தனிப்பட்ட முறையில் பயிற்சி பெறுவதால், உங்களால் அந்த வரிகளை சரியாக ஓத முடியும். அவ்வாறான ஒரு ஆசிரியர் தேவநகரி எழுத்துக்களை போதித்து, அவற்றை வாசிக்கவும் பயிற்சி கொடுப்பார்கள், மேலும் அவற்றின் நேரடி ஒலிபெயர்ப்பும் செய்வார்கள், ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில்.  சமஸ்கிருதம் பயில்வது கட்டாயம் அல்ல, மேலும் ஆசிரியர் ஒருவர் இல்லாதவர்களுக்காக நாங்கள் ஒட்டு மொத்த பூஜையையும் ஒலிப்பதிவு செய்து வைத்துள்ளோம், மந்திரங்களை சரியாக கற்றுக் கொள்ளும் நோக்கில்.”

சுருங்கக் கூறுகையில், இந்து மதத்தில், வாரம் ஒருமுறை கோயிலுக்குச் சென்று வழிபடுவது ஒரு முக்கிய பயிற்சி ஆனால் அதுவே எல்லாம் என்று ஆகாது. சரிநிகர் முக்கியம் கொண்ட மற்றொரு பகுதி யாதெனில், வீட்டில் ஒரு பூஜை மாடத்தைக் கொண்டு, அதில் கணவர் தினசரி ஆத்மார்த்த பூஜை செய்வது ஆகும். நாளடைவில், இந்த தினசரி பூஜையானது வீட்டின் சமய அதிர்வுகளை அதிகப்படுத்தி, இதனால் குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும் பயன் அடைவதுடன், அவர்கள் மேலதிக அமைதியுடனும், மேலதிக ழுழுமையும் கொண்ட, வெற்றிகரமான வாழ்வைப் பெற உதவுகிறது.