image

ஆசிரியர் பீடம்

உயர் உணர்வுநிலைக்கான பாதை

______________________

இந்து தத்துவங்களைப் பின்பற்றுவதால் எவ்வாறு கோபம் மற்றும் பயத்தை விட்டு விலகி ஓங்கிய மனநிலைகளுக்குச் செல்லத் தேவையான உன்னத பக்குவத்தை அடையமுடியும் என ஆராய்தல்.

______________________

சற்குரு போதிநாத வேலன்சுவாமிகள்

image

Read this article in:
English |
Gujarati |
Tamil |
Spanish |

“எல்லா மதங்களும் ஏறக்குறைய ஒன்றுதானே?” என இந்துக்கள் வெற்று ஆரவாரமாகக் கேட்கும் இக்கேள்வி நமக்கு ஒன்றும் புதிது அல்ல. உண்மையில், எல்லா மதங்களைச் சார்ந்த மக்களும் இவ்வாறு கேட்பது உண்டு. “நெறியான வாழ்க்கையை வாழ்ந்தும், ஏனைய சக மனிதனுக்கு உதவுவதுதான் எல்லா மதங்களின் சாரம் அல்லவா?” என்ற இக்கூற்று சம்பந்தப்பட்ட கருத்தையே எதிரொலிக்கின்றது.

இந்த இதழின் கல்வி உள்நோக்கு அங்கத்தில், நமது ஆசிரியர்களின் உலக பெரும் மதங்களின் ஆய்வு, மதங்களிடையே இருக்கும் ஒற்றுமைகளையும் அதே வேளையில் மிக முக்கியமான வேற்றுமைகளையும் காட்டுகின்றது. சுருக்கமாகவும் அதே கணம் சுலபத்தில் புரிந்துக் கொள்ளக்கூடிய வண்ணத்தில் விஷயம் கொடுக்கப்பட்டிருப்பதால், இந்தக் கட்டுரை “எல்லா மதங்களும் ஒன்றே, அவை யாவும் அவற்றின் மக்களை ஒரே மாதிரியான வழிகளில் ஒரே உண்மைப் பொருளுக்கே இட்டுச் செல்கின்றன” என்ற கட்டுக் கதையை விரட்டும். இக்கட்டுரையை மனசாட்சியுடன் படிக்கையில் எல்லா மதங்களும் அவ்வாறு செய்வதில்லை என்பது தெரியவரும்.

எடுத்துக்காட்டுக்கு, இந்துப் பார்வையில், சொர்க்கத்தை அடைவது கஷ்டம் இல்லை. முண்டக உபநிஷதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது போல, ஆங்கே நிலைத்து இருப்பதே சவாலாகும். தினசரி சமயச் சடங்குகளையும் மனிதாபிமான காரியங்களையும் செய்தவர்கள் தாம் பெற்ற அருளினால் சொர்க்கத்தை அடைவர். ஆனால் அவர்தம் நற்காரியங்களின் புண்ணியம் தீர்ந்து போனதும் மீண்டும் பூமியில் பிறப்பர். இந்த உபநிடதம் சொர்க்கத்திலேயே எவ்வாறு நிலைத்து இருப்பது என்றும் அந்த இடத்தையும் கடந்து அனாதியாக கடவுளிடத்து ஒருமித்து இருப்பது எப்படி என்பதற்குமான இரண்டு வழிகளை வழங்குகின்றது. முதலாவது சாந்தமான மனமும், புலன் கட்டுப்பாடும் பெற்று, அதனால் பூமியில் துறவறம் அடந்து, கடவுளை அறிய வழிகாட்டுவதற்கு தகுதியான குருவை ஏற்றுக்கொள்வது ஆகும். இரண்டாவது பாதை, தனது வயோதிகத்தில் வனவாசம் மேற்கொண்டு, தனிமையில் வாழ்ந்து, கடும் தவம் இயற்றியும் தனது தெய்வத்தை வழிபட்டும் வருவதாகும். நிரந்தர சொர்க்கவாசத்திற்கு வெறும் நன்னெறியும், மனிதாபிமான காரியங்களும் போக, இன்னும் அதிகமானது தேவை என்ற ஓர் இந்துவின் சிந்தனை அறிவுக்கு புலனாகும் ஒன்றுதான்.

உள்நோக்கு அங்கம் குறிப்பிடுவது போல, “உள்ளூர இருக்கும் உண்மைப் பொருளை சுயமாகவே உணருவதற்காக பக்தனுக்கு வழிகாட்டிச் சென்று, இறுதியில் கடவுளும் மனிதனும் ஒன்றாகவே இருக்கும் உச்ச உணர்வினை அடையச் செய்யும் இந்து மதம் ஒரு மறைமெய்ம்மை மதமாகும்.” விக்கிபீடியா கீழே காணப்படுவது போல சொல்கின்றது, நானும் இதனைச் சிறிது திருத்தியுள்ளேன்:

“உயர்உணர்வு நிலை, மேன்மை உணர்வுநிலை, மற்றும் இறை உணர்வுநிலை எனப்படுவன யாவும் இந்து மதத்தில் பயன்படுத்தப்படும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள். மனிதன் ஒருவன் உண்மைப் பொருளை அது இருப்பது போலவே அறிந்து கொண்டுள்ளதுடன் அவனால் அடையப்பெற்ற மேலான உணர்வுநிலைகளைக் குறிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன… இதில் பரிணாம வளர்ச்சி என்பது பல்வேறு தலைமுறைகளாக மனிதன் இனப்பெருக்கம் செய்து, இயற்கைத் தேர்வினால் பெறுகின்ற அடைவு அல்ல. மாறாக ஆன்மீக அறிவை மனித வாழ்க்கையின் தினசரி நடத்தையில் பயன்படுத்தி, அதனால் பரிணாம வளர்ச்சி அடைந்து, ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் மனதை மென்மேலும் தீட்டி, சுத்திச் செய்வதேயாகும். சுய-வளர்ச்சிமுறை பயிற்சியில் இவ்வாறான அறிவை பயன்படுத்துவதனால், சாதாரண மனிதன் ஒருவனில் தூங்கிக் கிடக்கும் திறன்கள் எழுப்பப்பட்டு, வளர்ச்சி அடையும். இந்த திறன்கள் யாவும் குறிப்பிட்ட நெறிமுறைகளாலேயே தூண்டவும் பின்னர் வளர்க்கவும் படுகின்றன. உள்ளத் தெளிவு, பொறுமை, இரக்கம், வாய்மை, பணிவு மற்றும் பிற மனிதனை மன்னித்தல் போன்றவையே அவை. இந்த குணங்கள் இல்லையேல் உயர்உணர்வு நிலைகள் சாத்தியம் இல்லை.

உணர்வுநிலை என்ற வார்த்தையைச் சற்று உற்று கவனிப்போம். எமது ஹிமாலயன் அகாடமி சொற்களஞ்சியம் இதனை “உணரப்படுவது, அறியப்படுவது, கவனிக்கப்படுவது. உணர்வுநிலை பல படிகள் அல்லது அடுக்குகளைக் கொண்டது, சாதாரண தினசரி உடல் மற்றும் மனதின் உணர்வுநிலைகள் முதல் பேரறிவு நிலைகள் வரை இதில் அடங்கியுள்ளன. உணர்வுநிலையானது தன்னை மட்டுமே உணர்ந்து நிற்கையில் தூய உணர்வுநிலை எனப்படுகின்றது” என விவரிக்கின்றது.

இந்து மதத்தின் தத்துவங்களும் பயிற்சிமுறைகளும் நாம் மேலும் உயரமான உணர்வுநிலைகளுக்கு ஏறிச் செல்ல உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன, பயனில்லாத நிலைகளிலிருந்து பயனுள்ளதற்கும், நேர்மறை நிலைகளில் இருந்து படைப்பாற்றால் மிக்க ஒன்றுக்கும், படைப்புமிக்கதிலிருந்து மிக உச்சமாகிய தெய்வீக அறிவுக்கும் செல்வதாகும், இதுவே உயிரும் கடவுளும் ஐக்கியமித்து இருக்கும் உணர்வுநிலை ஆகும். இது பல சிறுசிறு படிநிலைகளில், பல பிறவி காலக்கணக்கில் நிகழுகின்றது.

பயம் மற்றும் கோபம் ஆகியனவே இந்துக்கள் பெரும்பாலும் வெற்றிகொள்ள முயற்சிக்கும் எதிர்மறையான உணர்வுநிலைகள். எனது குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமி, இந்த சக்திமிக்க மிருக உணர்ச்சிகளை எவ்வாறு குறைத்து, பிறகு ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்வது என்பதற்கு பல யுக்திகளை வழங்கியுள்ளார். யானை முகம் கொண்ட, தடைகளின் நாயகனாக விளங்கும் கணேசரை வழிபடும்படி அவர் வலியுறுத்தி உள்ளார்: “கணேசரின் வழிபாடு உடனடியான, காலம் தாழ்த்தாத ஒன்று ஆகும். எக்காலமும் வீற்றிருக்கும் அவருடைய மனதுடன் தொடர்பிக்க வேண்டின் ஒருவன் அவரது உருவத்தை நினைத்தாலே போதும். நமது மாண்புமிக்க கணேசப் பெருமான் மூலாதாரச் சக்கரத்தில் நிறைமகிழ்வுடன் அமர்ந்துள்ளார். ஒவ்வொரு உயிரினத்தினுள்ளும் இந்த சக்கரம் ஞாபக சக்தியை செயல் படுத்துகின்றது. இவரது வழிபாடு நமது ஞாபகத்திற்கு பலமூட்டுகின்றது, நடத்தையை செம்மையாக்கி, உள்ளிருந்து அறிவை வெளிக்கொணருகின்றது. அதுமட்டுமல்லாமல் மூலாதாரத்திற்கு அடியில், அவ்வளவாக அறியப்படாமல் இருக்கும் கீழான சக்கரங்களின் சக்திகளிடம் இருந்தும் உன்னைப் பாதுகாக்கின்றது. இத்தகைய இருளான சக்கரங்கள் பயம், கோபம், பொறாமை மற்றும் சுயநலவாதமிக்க குழப்பமான சிந்தனைகள் ஆகியவற்றை ஆளுகின்றன.”

இந்து தத்துவங்களையும் பயிற்சிகளையும் பயன்படுத்தி பல படிநிலைகளிலான உணர்வுநிலைகளில் முன்னேறிச் செல்வது நவீன யுகத்தின் சுய-மேம்பாடு கருத்துக்களுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல முக்கிய வித்தியாசங்களும் இருக்கின்றன. இது கடவுளையும் ஆத்துமனையும் நடுநாயகமாகச் சேர்த்துள்ளது. மறுபிறவிக்குத் தேவையான அகண்ட கால வரையணையும் உள்ளே இணைந்துள்ளது. நாம் இந்த மாற்றங்கள் பல பிறவி கணக்கில் நடைபெறும் என எதிர்நோக்கி, நமது குறிக்கோள்களை அடைய தேவையான காலம் நாம் எல்லாருக்கும் போதுமான அளவு உண்டு என அறிந்தும் உள்ளோம்.

சுய-மேம்பாட்டு முறைமையைப் போலவே, ஆரம்பத்தில் துவங்குவது முக்கியம். இந்து முறைமையில் இது நமது நடத்தையின் மீது கவனம் செலுத்தி, நடத்தை தர்ம நெறியுடன் ஒத்திருப்பது என பொருள்படுகின்றது. கீழ்நிலைச் சக்கரங்களின் தன்மை என கொள்ளப்படுகின்ற அடிப்படை மிருக உணர்ச்சி தன்மைகளை வெல்லுவதில் ஆரம்பிப்பதே சரியான இடமாகும். பாரம்பரிய பத்து கட்டுப்பாடுகளாகிய இயமங்கள் கீழ் உணர்வுநிலை சகவாசத்தைக் கட்டுப்படுத்த தேவையான குணங்களை வரையறுக்கின்றன: அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிரமச்சரியம், பொறுமை, விடாமுயற்சி, கருணை, நேர்மை, மிதாஹாரம், மற்றும் தூய்மை. நாம் இவற்றில் வலுவாக நிலைபெறும்போது, இன்னும் அதிகமான குண மேம்பாடுகளை வளர்த்துக் கொள்ளலாம், அவை ஊக்கம், உழைப்பு, மகிழ்ச்சி, சாட்சியமிக்க கவனிப்பு மற்றும் மரியாதை. இந்த நடத்தை வளர்ச்சியே கீழிலிருந்து மேலான உணர்வுநிலைக்கான இயற்கை நகர்வு.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தானே உரித்தான மனோநிலை மற்றும் நெறி குணங்களின் ஒட்டுமொத்தமே நடத்தை எனப்படுகின்றது. ஆன்மீகப் பாதையின் முதல் பாகம் நமது நடத்தையை வளர்த்து, சரிசெய்து, உருமாற்றம் செய்வதே ஆகும்.

நடத்தையின் முக்கியத்துவம் மத வாழ்க்கைக்கு மட்டுமே ஆதாரமாக அமைவதில்லை. நவீன மனநல பள்ளி ஒன்றான நேர்மறை மனோதத்துவம் சொல்வகின்றது: “நாங்கள் மனநோயைத் தவிர்க்கக் கூடிய, நம்பகமான, மனிதனுக்கு பலம் சேர்க்கும் குணங்களின் கூட்டு ஒன்றைக் கண்டு எடுத்து உள்ளோம்: ஊக்கம், நம்பிக்கை, மனித உறவு திறன், தொழில் நெறி, நம்பிக்கை, நேர்மை மற்றும் விடாமுயற்சி. மனித இனத்தினை பலப்படுத்த முயலும் விஞ்ஞான முயற்சியின் வேலை என்னவெனில் இந்த குணங்களை இளம் வயதினரிடையே வளர்தெடுப்பதே ஆகும்.” (பேராசிரியர் மார்தின் செலிக்மன், பென்சில்வானிய பல்கலைக்கழகம், 1998)

இந்த மனித பலத்தினை வளர்த்தெடுத்து வருகையில், சதா சுயநலமான ஆசைகளை துறக்கவும் நம்மால் முடியும் – நமது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு ஒன்றும் பலனளிக்காதமலிருந்து, சுய தேவைக்காக அதிக சுகபோகம், சொத்து பத்துக்களை சேர்ப்பது போன்றவையே அது.

நன்நடத்தை கடமையிலேயே வேரூண்றி உள்ளது. நாம் அனைவருக்கும் குறிப்பிட்டக் கடமைகள் உள்ளன. இந்து மதத்தில் குடும்பஸ்த வாழ்க்கையை பின்பற்றுபவர்களின் கடமைகள் காலத்திற்கு ஏற்ப மாறி மாறி வரும். இது ஆஸ்ரம தர்மம் எனப்படுகின்றது. எடுத்துக்காட்டுக்கு, இரண்டாவது ஆஸ்ரமம் ஆன கிரிஹஸ்த 24-48 வயது காலத்தில், ஒரு குடும்பத்தை காத்து வளர்ப்பதும் தொழிலில் நிறைவு பெறுவதுமே குறிக்கோள் ஆகும். சிலர் ஆன்மீக வாழ்க்கை நம்மை உலகிலிருந்தும் நமது கடமைகளிலிருந்தும் தூர விலக்கிவிடும் என நினைக்கின்றனர். ஆனால், உண்மையில், முறையாகச் செய்யப்பட்ட கடமையானது நமது ஆன்மீக தேடலை முதிர்ச்சியடையச் செய்வது மட்டுமின்றி, ஆன்மீகப் பயிற்சிகளினால் நமது கடமைகள் மேலும் செம்மை அடைகின்றன.

உயர் உணர்வு நிலைகளை அடைய உண்மையிலேயே முயற்சிப்பவர்கள், ஒட்டுமொத்ததில் தன்னலமற்றக் காரியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். சம்பளம், பரிசுகள், வாழ்த்து மற்றும் அந்தஸ்து ஆகியவற்றை எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உண்மையிலேயே தானம் செய்வது இதில் அடங்கும். இது நமது நடத்தையை முதிர்ச்சி அடையச் செய்கின்றது. பெரும்பாலும் இத்தகு சேவை கோயில் அல்லது ஆசிரமம் ஒன்றில் நடக்கும். ஆனால் இவ்வாறான மெய்க்காரியங்களை உனது வாழ்க்கையில் எவ்வளவு பரந்த அளவுச் செய்ய முடியுமோ, அவ்வளவு செய்வது ஞானமிக்க செயலாகும். இதில் உனது வேலை இடத்தில் தொழில் வரையறுக்கும் எதிர்பார்ப்பையும் கடந்து, மற்றவர்களுக்கு சுயவிருப்பில், குற்றங்குறை காணாமல் உதவுவதும் அடங்கும்.

தியாகத்தின் காரணத்தால் தன்னலமற்றச் சேவைக்கு மேலும் மெருகூடுகின்றது. இன்னும் அதிகமான நன்மை விளையும் எனும் பட்சத்தில் விரும்பி பாதுகாக்கப்பட்ட பணம், நேரம், அறிவு அல்லது ஜடப் பொருள் ஒன்று கைவிடப்படுவதே இதுவாகும். தியாகம் தானத்துடன் ஒத்திருந்தாலும், அதில் தன்னலமின்மை வெளிப்பட்டிருக்கும். ஒரு நாள் உபவாசம் இருந்து அதனால் சேமிக்கப்பட்ட பணத்தை ஓர் இந்து அமைப்புக்கு கொடுப்பது அல்லது ஆடம்பரமான விடுமுறையை விடுத்து எளிய விடுமுறையை மேற்கொண்டு, பின்னர் மிச்சப்படுத்தியதை தர்மகாரியங்களுக்கு வழங்குவது ஆகிய எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.

சுயநலமின்மை, கடமை வழுவாமை மற்றும் கோபம் மற்றும் பயத்தை வெல்வது ஆகியன யாவும் நமது குணத்தை உருமாற்றம் செய்யத் தேவையான மகத்தான, கடின காரியத்தின் அங்கங்களே ஆகும். இவற்றை நாம் அடையும் பட்சத்தில், நாம் இயற்கையிலேயே பக்தி முறைகளுக்கும் தியான முறைகளுக்கும் உந்தப்படுவோம். வழிபாடு, தியானம் மற்றும் யோக முறைகள் பின்னர் நமது நடத்தை மேலும் திறம்பட தேவையான வழிகளை வெளிக்கொணர்ந்து, நமது உணர்வுநிலை மேலெழும்பவும் செய்யும். தரவாரி அணுகுமுறையைக் கொண்டுள்ள இந்துமதத்தின் மறைஞான முறைமைக்கு பொறுமை தேவை. சரியாகப் புரிந்துகொண்டால், இந்த முறை நாம் கடவுளை அறிவதற்கான முயற்சியில் நாம் கண்கூடான முன்னேற்றம் அடைவதை நிறைமனதுடன் அறியும் ஆசீர்வாதங்களை வழங்கும். இதனால் நாம் இன்னமும் குறிக்கோளை அடையவில்லையே என்ற விரக்தி உணர்வுகள் நீங்கும்.