Editorial
செவிமடுத்தல் என்னும் கலை
______________________
டிஜிட்டல் சாதனங்களின் நவீன தொந்தரவு இருக்கையில், மனிதர்களுக்கு இடையேயான உரையாடல்கள் பற்றி நாம் இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டும்
______________________
சற்குரு போதிநாத வேலன்சுவாமிகள்
Read this article in:
English |
Hindi |
Gujarati |
Spanish |
Tamil |
இந்து மதத்தில் ஓசை தெய்வீகமாகக் கருதப்படுவதால் செவிமடுப்பது எப்போதுமே இந்நம்பிக்கையின் முக்கிய காரியமாக இருந்து வருவது பொருத்தமானதே. ஆதியில் கடவுளிடம் இருந்து நேரடியாக ரிஷிமார்களால் செவிமடுக்கப்பட்டதால், நமது மூல மறைநூட்களாகிய வேதங்களும் ஆகமங்களும், சுருதி, “கேட்கப்பட்டது” எனவே அழைக்கப்படுகின்றன. மனித நாகரீகத்தின் ஆரம்பத்தில், எழுத்துக்களுக்கு முன்பாகவே, சுருதி எவ்வித மாற்றமும் இன்றி (கடவுளின் வார்த்தைகள் ஆதலால் மிக்க கவனத்துடன்) குருவிடம் இருந்து சிஷ்யனுக்கு செவி வழியாக வழங்கப்பட்டது. பல்லாயிரம் ஆண்டுக் கணக்கில் ஒரு தலைமுறையிலிருந்து மற்ற ஒரு தலைமுறைக்கு இது இடம் பெற்றது. உரைமூலத்தின் அளவு பெரியது என்பதால், இது சாத்தியப்பட்டிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது, அதிலும் குறிப்பிடத்தக்கது என்னவெனில் சிஷ்யர்கள் பின்னிருந்து முன்னுக்கு தலைகீழாக படிப்பது உட்பட, ஒவ்வொரு வரியையும் பதினொரு வித்தியாசமான வழிகளில் கற்க பணிக்கப்பட்டதே ஆகும்.
நல்ல வேளையாக, வேதம் மற்றும் ஆகமங்களைச் செவி வாயிலாக கற்கும் பாரம்பரியமுறை இன்னும் வேதாகம பாடசாலைகளில் பழக்கத்தில் உள்ளது. ஒரு வழக்கமான போதனா நிகழ்வில், ஆசிரியர் பாடத்தை ஒரு முறை ஓதியதும், மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து, ஆசிரியரின் உச்சரிப்பு மற்றும் சந்தம் ஆகியன பிசகாமல் ஒப்புவிக்கும் நம்பிக்கையுடன் இரண்டு முறை ஓதுவர். இது எப்போதாவது ஒரு முறைதான் என்று இல்லை. ஒவ்வொரு நாளும் பல மணிக்கணக்கில், தினசரி பல பல ஆண்டுகளுக்கு நிகழ்ந்து வரும். மாணவர்கள், ஞாபகம் பலமாக இருக்கும் ஐந்து வயது வாக்கில் இதனைச் செய்யத் தொடங்குவர்.
சிறப்பான ஓர் ஆவணப்படம் ஒன்றை பார்த்திருக்கும் ஒருவன், ஏட்டுப் படிப்பைக் காட்டிலும், மனிதனின் குரலானது தொடர்புக்கும் அறிவைப் பகிர்ந்துக் கொள்வதற்கும் எந்த அளவு சக்திவாய்ந்த கருவி என்பதை அறிந்து இருப்பான். ப்ரவாச்சம் எனப்படும் தாம் அறிந்த உண்மைகளை விளக்கிக் கூறும் பிரபலமான உரைகளைச் சற்று பார்ப்போம். இவ்வாறான உயிரோட்டமுள்ள உரைகளில் அந்த ஆசிரியர் வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் ஏனைய மறைநூட்களின் சாரத்தை எடுத்து உரைக்கையில், கேட்கும் எல்லாரும் தமது எல்லா புலன்களின் வாயிலாகவும் அந்த ஆழமான போதனைகளை அறிந்த அவரிடம் இருந்து உறிஞ்சிக் கொள்கின்றனர். இத்தகு பேச்சு மற்றும் செவிமடுத்தல் காரியமாகிய இந்தப் பகிர்வில், நுட்பமான அறிவு, அறிந்தவனிடம் இருந்து கேட்பவனிடத்து கடத்தப்படுகின்றது, இதை வாசித்தல் நிகர் செய்ய முடியாது. பேச்சின் மூலம் பல்வேறு நிலைகளிலான தகவல்களும் சேர்த்தே கடத்தப்படுகின்றன – சொல் கோர்ப்பு, உணர்ச்சி, முக்கியத்துவம், ஒப்புதல், மற்றும் மறைமுக குறிப்புக்கள் ஆகியன.
“ஒலி முதலாவது படைப்பு என்பதால், அறிவு சகல விதமான ஒலிகளாலும் கடத்தப்படுகின்றது. ஒருவன் சம்பிரதாயம் ஒன்றின் உச்ச உண்மைகளை அனுபூதியில் உணர்ந்த ஒருவரிடம் இருந்து கேட்டமைதல் முக்கியமாகின்றது. வார்த்தைகள் கண்டிப்பாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். பக்தர்கள் அவற்றைப் பல நூறு முறை படித்திருக்கலாம். ஆனால் அவற்றை ஞானஒளி பொருந்திய ரிஷி ஒருவரின் வாயால் கேட்பது, அவரது சொல்லொண்ணா அனுபூதியை உறிஞ்சி ஏற்பது போன்றதாகும். ஏனெனில் அவர் வாசிக்கும்போதும் பேசும்போதும் தனது அனுபவத்தை மீண்டும் அனுபவிக்கின்றார்.” என இக்கருத்தை ஒட்டி எனது குருதேவர் எழுதியிருந்தார்.
நான் செவிமடுப்பதை ஒரு கலை என்றே நினைக்க விரும்புகின்றேன். படைக்கப்படும் ஒரு விஷயத்தை முழுமையாகக் கைப்பற்றிக் கொள்ள, பேசுபவரிடம் கவனம் செலுத்தப்பட்டு, சொல்லப்படும் விஷயத்தின் அர்த்தத்தில் கவனம் குவிக்கப்பட வேண்டும். ஆழமான மறைஞான விஷயங்களில், பேசும் பேச்சாளரின் அர்த்தம் என்ன என்பதை ஆழமாக புரிந்துக் கொள்ள உள்ளுணர்வும் தேவைப்படுகின்றது. இவற்றில் அர்த்தம் அவருடைய வார்த்தைகளையும் கடந்து நிற்கும். கவனிப்பு, கவனக்குவிப்பு, மற்றும் உள்ளுணர்வு ஆகிய எல்லாம் ஒருங்கே இருக்கையில், செவிமடுப்பது ஒரு கலை ஆகின்றது.
இச்செய்தி 2,200 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கிராமிய நெசவாளி திருக்குறளை எழுதிய போது எவ்வளவு உண்மையாயிருந்ததோ அந்த அளவு இன்றும் உள்ளது. “கேள்வி” என்பதற்கு அவர் பத்து குறள்கள் கொண்ட ஒரு முழு அதிகாரத்தையே அர்ப்பணித்தார். திருவள்ளுவரின் குறள்களில் மூன்று இங்கே:
செவிக்கு உணவாகிய கேள்வியை உடையவர் பூமியில் வாழ்ந்திருப்பினும் அவியை
உணவாக உடைய தேவருக்கு நிகரானவர்.
செவியால் வரும் செல்வமே ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது, இது மற்ற எல்லாச் செல்வங்களினும் தலையானது.
கேள்வி எனும் திறன் இல்லாத காதுகள், ஓசையை சிறப்பாக உணரக்கூடியவையாக இருப்பினும் செவிடு என்றே ஆகும்.
நமக்குத் தெரிந்தது போலவே, நமது நவீன யுகத்தில் செவிக்கலை டிஜிட்டல் (digital) தொந்தரவு என்ற புதிய சவாலை எதிர்நோக்குகின்றது. கணிணிகள், கைத்தொலைப்பேசிகள் மற்றும் அவற்றின் இடைவிடாத ஈர்ப்பு, எல்லாருடைய கவனித்து, கேட்டு, கற்றுக்கொள்ளும் திறனுக்கு பெருத்த சவாலாக ஆகிவிட்டது. “டிஜிட்டலில் வளர்ச்சி, தொந்தரவுக்குள்ளான கவனம்” என்ற ஒரு நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிக்கையின் கட்டுரை இந்த விஷயத்தைப் பற்றியது:
“இந்த தொழில்நுட்பங்களின் கவர்ச்சி, பெரியவர்களைப் பாதித்தாலும், இளையவர்களிடத்தே தாக்கம் மிகவும் வலுவாகக் காணப்படுகின்றது. வளரும் மனிதமூளை, அடிக்கடி காரியங்களை மாற்றிக் கொண்டே இருக்கும் செயலுக்கு மிகச் சுலபத்தில் பழக்கமாகிவிடும் அபாயத்தால், கவனம் செலுத்தும் திறன் குன்றிப்போகின்றது. ‘ஒரு காரியத்தில் நிலைத்து இருப்பதற்கு அல்லாமல், இவர்களது மூளை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவும் செயலுக்கே பாராட்டி பரிசளிக்கப்படுகின்றது’ என ஹார்வார்ட் மருத்துவப் பள்ளியின் இணைப் பேராசிரியரும், பாஸ்டன் நகரின் மீடியா மற்றும் சிறார் சுகாதார மையத்தின் நிர்வாக இயக்குனரான மைக்கல் ரிச் சொல்கின்றார். மேலும் இதன் விளைவுகள் நிலைத்திருக்கும் வாய்ப்புண்டு: ‘ஸ்க்ரீன்(screen) திரை முன்பு உருவாகி வருபவர்களின் மூளை வேறு வகையில் பிண்ணப்படுகின்றது, இத்தகைய தலைமுறை குழந்தைகளை நாம் வளர்த்து வருவதே கலக்கமடையச் செய்கின்றது.’”
அக்கட்டுரை 2010 இல் எழுதப்பட்டது. அன்றிலிருந்து அமெரிக்காவில் மட்டும் ஸ்மார்ட்(smart) கைப்பேசி எண்ணிக்கை மும்மடங்கு அதிகமாகி விட்டது. எந்த ஒரு பொது இடத்திலும், கிட்டத்தட்ட எல்லாரும் ஒரு கைப்பேசியுடனும் அதனை பயன்படுத்துவதிலுமே உள்ளனர். இதை நாம் கருவிகளுக்கு அடிமை ஆகுதல் எனச் சொல்லலாம்.
அதே டைம்ஸ் கட்டுரையில் மாணவர்கள் மத்தியில் தொழில்நுட்ப பயன்பாடு ஒரே சீராக இல்லை என ஆய்வாளர்களால் காணப்பட்டுள்ளது. அவர்களின் தேர்வு தத்தம் குணாதிசயங்களைக் காட்டுவதாக உள்ளது. பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்தாகிரம் பயனாளிகள் சமூகக் கலப்பு மிக்கவர்கள். சமூக நாட்டம் குறைந்தவர்கள் விடியோ விளையாட்டுகளையும், காலத்தை தாழ்த்தும் நபர்கள் இணையத்தளம் மற்றும் விடியோ படங்களை நாடுகின்றனர்.
டிஜிட்டல் தொந்தரவு இந்து குடும்பங்களை முக்கியமான தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. தாத்தா பாட்டிமார்கள் முக்கியமான இந்து போதனைகள், அதன் தத்துவங்கள், கதைகள் மற்றும் நெறிக்கோட்பாடுகள் ஆகியவற்றைப் பாரம்பரியமாக இளம் சிறுவர்களுக்கு சொல்லி வந்துள்ளனர்.
பெற்றோர்கள் பிள்ளைகள் வளர்ந்து வருகையில், அவர்களுக்கான பொறுப்புகளையும் எடுத்தியம்பி வந்துள்ளனர். வீட்டில் நடக்கும் தற்போதைய விஷயங்களையும் எதிர்கால திட்டங்களையும் பெற்றோர்களே அடிக்கடி பகிர்ந்துக் கொள்வர். குடும்ப உறுப்பினர்கள் எப்போதும் டிஜிட்டல் உலகத்திலேயே கதியாய் இருந்து, ஒவ்வொருவருக்கும் இடையே பயனுள்ள பேச்சுக்களை நிறுத்திக் கொள்கையில், தனிமனிதர்களுக்கு இடையே ஆன தொடர்பு தடைபடுகின்றது. குடும்ப உறுப்பினர்கள் பலர் ஒன்றாக அமர்ந்தவாறு, ஒவ்வொருவரும் தனது கைப்பேசி அல்லது டேப்லட்(tablet) கருவியை தட்டிகொண்டு, அங்கே எவ்விதமான உரையாடல் அல்லது செவிமடுக்கும் காரியம் நிகழாமல் இருப்பது ஒரு வழக்கமான காட்சிதான். அவர்கள் யாவரும் ஒரே அறையில் இருப்பினும், அவர்களின் மனமோ வெவ்வேறு இடங்களில் இருக்கின்றன.
நவீன கால வசதிகள் நம்மை ஏற்கனவே மூழ்கடித்து விட்டதால், அதை விடவும் இன்னும் அதிகமாக டிஜிட்டல் தகவல்கள் நம்மை பாதிக்க அனுமதிப்பது ஞானமிக்க காரியம் அல்ல. அமெரிக்காவில் காணப்படும் யெமிஷ் எனப்படும் ஒரு சிறிய மதச் சமூகம், நவீனமயமாக்கத்திற்கு எதிராக ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தமது கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், மதத்தை நீட்டிக்கவும் ஆன முயற்சியாக, அவர்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்ததைப் போல் இருந்து வருகின்றனர். ஒரு யெமிஷ் குடும்பம், டிஜிட்டல் உட்பட, நவீன யுகத்தின் அலைக்கழிப்பு எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக நீக்கும் முயற்சியாக, வீட்டில் மின்சாரம் இல்லாமல் செய்து விட்டதை ஆவணப்படம் ஒன்று காட்டியிருந்தது. பெரும்பாலான நமக்கு அது மிகத் தீவிரமான ஒன்றாகத் தோன்றும். இந்துக் குடும்பங்களுக்கு மிதமான தீர்வு ஒன்று உண்டு. டிஜிட்டல் பயன்பாடு, மகிழ்ச்சியூட்டும் நிகழ்வு, குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் ஆக்கப்பூர்வமான நேரடி பேச்சு (டிஜிட்டல் கருவிகளை மூடியவாறு) போன்றவற்றுக்கு குறிப்பிட்ட நேர வரையறையை ஒதுக்குவதே ஆகும்.
சமீபத்தில் ஓர் இளம் இந்து தம்பதி, தாம் டிஜிட்டல் கருவிகளை தமது வீட்டு உணவுமேசையில் பயன்படுத்த தடை விதித்து விட்டதாகவும், இந்த எளிய விதிமுறையால் அவர்களது தொடர்புமுறைகள் வளமாகவும், அவர்களது உறவுகள் பலப்பட்டும் உள்ளது என பெருமையாகக் கூறினர். டிஜிட்டல் தொந்தரவைக் கட்டுப்படுத்திய பல குடும்பங்கள், பிள்ளைகளின் கணிணிகள் வீட்டு வரவேற்பு அறையில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இதனால் குடும்ப உறுப்பினர்கள் கண்காணிக்க எளிதாக இருக்கும். இன்னும் சிலர் தமது பிள்ளைகள் இணையத்தில் எங்கு உலாவுகின்றனர் என்பதைக் கட்டுப்படுத்த தேவையான கருவிகளையும் கொண்டுள்ளனர்.
தன்னுடைய பக்தர்களுக்கு, குருதேவர் திங்கட்கிழமை சாயுங்காலத்தை குடும்பமாலைப் பொழுது என ஒதுக்கி, குடும்பத்தினருடன் அளவுளாவச் செய்தார். “சிவபெருமானின் நாளாகிய திங்கள் கிழமை மாலை நேரத்தில், குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து, சிறப்பான உணவுகளைச் சமைத்து, கூடி விளையாடி, வாயார ஒருவர் மற்றவரது நற்குணங்களைச் சொல்லி நன்றி பாராட்டிக் கொள்வர். அவர்கள் எந்த பிரச்சனைகளையும் அந்நாளில் தீர்க்க வேண்டியதில்லை. அவர்கள் ஒருவர் மற்றொருவரை அன்புடன் நோக்கி, மிகச் சிறிய சிறுவன் முதல் முதிர்ந்த முதியவர் வரை பேச வாய்ப்பளிக்கப்படும்.” தொலைக்காட்சி மற்றும் எல்லா டிஜிட்டல் கருவிகளும் மூடப்பட்டிருக்கும். இது நன்றாக செவிமடுப்பதற்கான நேரம், உண்மையான செவிமடுத்தலுக்கே உரித்தானது. நல்ல செவிமடுப்பவனாயிருப்பதால், நன்கு உரையாடுபவனாக இருக்க வழிகோலும் – இதுவும் டிஜிட்டல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மற்றொரு நுண் கலையே.
ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருடன் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஆதரிப்புமிக்க உரையாடல் என்னும் எளிய ஒழுக்கம் ஒன்றினை நான் ஏற்படுத்தினேன். இதோ அது.
ஒருவன் உன்னை அணுகுகையில் நீ செய்து கொண்டிருப்பதை நிறுத்தி விடு: புன்னகையுடன் அவனைப் பார், கனிவான வார்த்தையுடன் உனது கவனத்தை அவன்/அவளிடத்து செலுத்து. உனது கைத்தொலைப்பேசியை கீழே வைத்து விடு அல்லது அடைத்து விடு.
கவனமுடன் கேள். இடைமறிக்க வேண்டாம். என்ன சொல்லப்படுகின்றது என்பதில் கவனத்தை குவிக்கவும். உனக்கு அது தர்மசங்கடமாக இருப்பின், “முதலில் புரிந்துக்கொள் பின்னர் புரிந்துக் கொள்ளப் படுவாய்.” என்ற வாசகத்தை நினைவில் இருத்து. இருவழி உரையாடலை துவங்கி, உண்மையுடனும் ஆக்கப்பூர்வமாகவும் பதிலளிக்கவும், இதனால் ஆதரவு வெளிப்படட்டும்.
ஒருவன் குறிப்பாக உணர்ச்சிமிக்க ஒன்றை பகிர்ந்துக் கொண்டிருப்பின், அந்த நிகழ்வை மீண்டும் விவரமுடன் சொல்லக் கேள். பொறுமையுடன் உனது எல்லா புலன்களையும் கொண்டு கேட்கவும். மிக நீண்ட நேரம் ஆகின்றதே என்று உணர்ந்தால், உனக்கு எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவும் உண்டு என மனதளவில் உறுதி செய்துக் கொள்.
பச்சாத்தாபத்தை நடைமுறைப் படுத்து; மற்றவரின் நிலையில் உன்னை வைத்துப் பார். நீ பேசுகையில் மற்றவர்கள் முழுமையாக கேட்க வேண்டும் என்றுதான் நீ நினைப்பாய். பிரச்சனைகளுக்குத் தீர்வு ஒன்றை நீ கொடுக்க வேண்டியதில்லை, செவிமடுக்கும் காது மட்டுமே வேண்டும். நீ அந்த கதையைக் கேட்பது மட்டுமே போதுமானது.
செவிமடுக்கும் திறன் இல்லாததால் நாம் இழப்பதைப் பற்றிய செய்தி டிஜிட்டல் ஊடகங்கள் உதவியுடன் பரவுகையில், இக்கலை மீண்டும் மறுபிரவேசம் பெறும். நாம் இயற்கையாகவே கற்பது பெரும்பாலும் செவி வழிதான். தலைமுறை தலைமுறையாக இந்த திறன் தொடரப்படவும், தீட்டவும் படவேண்டும். டிஜிட்டல் தொந்தரவுகளைத் தவிர்ப்பது, செவிமடுக்கும் திறனை வளர்ப்பது போன்றவற்றில் தமது பிள்ளைகளின் வளர்ச்சியை பெற்றோர் கவனமுடன் வழிகாட்ட வேண்டும். எல்லாம் சரியாக நடக்கும்பட்சத்தில் உள்ளுணர்வும் கருணையும் எழும்பலாம். பெரியோர்களும் தாமே அளவுக்கு அதிகமாக டிஜிட்டல் உலகத்தில் ஈடுபடாமல் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும். இதனால் இந்து மதத்தின் அறிவும் பயிற்சிகளும் இந்த டிஜிட்டல் காலத்திலும் தொடர்ந்து செழித்திருப்பது உறுதி செய்யப்படும்.