விரும்பத்தகாத நிகழ்வுகளைக் கையாளுதல்

விரும்பத்தகாத நிகழ்வுகளைக் கையாளுதல்

எவ்வாறு கெட்ட சம்பவங்கள் நல்லவர்களின் வாழ்வில் நிகழலாம் என்பதை சிந்திக்கவும், வாழ்வின் கஷ்டங்களை எவ்வாறு ஊக்கத்துடன் சந்திப்பது என்ற உள்நோக்கும்

சத்குரு போதிநாத வேலன்சுவாமிகள்

 
English |
Tamil |
Marathi |
Kannada |
Spanish |
Hindi |

பல ஆண்டுகளாக நான், தங்கள் வாழ்வில் நடந்து முடிந்த சில தீய வாழ்க்கைச் சம்பவங்களை, நடக்க வேண்டிய ஒன்றுதான் என கொள்ள இயலாத பல இந்துக்களைச் சந்தித்து உள்ளேன். அவர்கள் புலம்புகின்றனர், “எங்கள் குடும்பம் ஒரு நெறியான, கடமை மிக்க, வாழ்க்கை வாழ்கிறது, இப்படியிருக்கையில் எங்களிடமிருந்து எல்லா தீய சம்பவங்களும் விலகி இருந்திருக்க வேண்டும். இது எங்களுக்கு கண்டிப்பாக ஏற்பட்டிருக்கக் கூடாது.” சில தீவிரமான உதாரணங்களில், அவர்களின் இறைநம்பிக்கை ஆட்டம் கண்டுள்ளது, “எவ்வாறு கடவுள் இது நடக்க அனுமதித்தார்?” என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாத காரணத்தினால். ஒரு முக்கிய இந்து கருத்தாகிய – கர்மம், இதனை ஒட்டி நான் கொடுத்த பதில் அவர்களின் குழப்பத்தை விவரிக்கிறது. எங்கள் இணைய அகராதியில் கர்மம் இவ்வாறாக விளக்கப்பட்டுள்ளது.

கர்மம்: ‘செயல்,” “காரியம்.” இந்து சிந்தனையில் காணப்படும் மிகவும் முக்கியமான தத்துவங்களில் ஒன்று, கர்மம் குறிப்பிடுவது 1) எந்த ஒரு காரியம் அல்லது செயல்; 2) காரணம் மற்றும் அதன் விளைவு; 3) ஒரு பின்விளைவு அல்லது “ ஒரு காரியத்தின் பலன்” (கர்மபலன்) அல்லது “ பின் தோன்றல் (உத்தரபலன்), இது செய்பவரிடமே திரும்பி வருகிறது. நாம் எதனை விதைக்கிறோமோ, அதையே நாம் இந்த அல்லது எதிர்கால வாழ்வில் பெறுவோம். சுயநலம், வெறுப்புமிக்க காரியங்கள் (பாவகர்மம் அல்லது குகர்மம்) வேதனையை கொண்டு வரும். நன்மைமிகு செயல்கள் (புண்ணிய கர்மம் அல்லது சுகர்மம்) அன்பான விளைவுகளைக் கொண்டு வரும். கர்மம் ஒரு நடுநிலைமையான, தானே-சுயமாக-செயல்படும் உள்பிரபஞ்சத்தின் சட்டமாகும், புவியீர்ப்பு எவ்வாறு வெளிபிரபஞ்சத்தின் பொதுமுறை சட்டமாக உள்ளதோ அவ்வாறுதான்.

சில மதங்கள் கடவுளே ஒருவனது செயல்களுக்கான பரிசுகளையும் தண்டனைகளையும் கொடுத்து வருவதாக போதிக்கின்றன. இந்து மதமோ, எல்லா காரியங்களும் கர்மவினைச் சட்டத்தினால் கையாளப்படுவதாக விளக்குகிறது. கர்மத்தை ஒரு கணிணி மென்பொருள் அல்லது கணிணி விளையாட்டுடன் ஒப்பிட நான் விரும்புகிறேன். கடவுள் ஒரு மென்பொருளை உருவாக்கி அதனை பிரபஞ்சத்தில் நிறுவி உள்ளார். இந்த மென்பொருளில் சர்வ மனித செயல்களும், அச்செயல்களுக்கான பலாபலன்களும் அடங்கியுள்ளன.

நாம் கடந்த பிறவிகளில் செய்த காரியங்கள், கர்ம பலன்களைத் தோற்றுவித்துள்ளன, அவற்றில் சில இப்பிறவியில் அனுபவிக்கப்பட வேண்டியுள்ளது. நம்முள்ளே ஒரு பெரிய காந்தம் இருந்து கொண்டு, நேர்மறை மற்றும் எதிர்மறை அனுபவங்களை நம்மிடம் இழுப்பது போன்று இருக்கிறது. ஒரு நல்ல, தார்மீக வாழ்க்கையை தற்போது வாழ்வது மட்டுமே நாம் கடந்த பிறவிகளில் ஏற்படுத்திய தீய கர்ம பலன்களை முற்றிலுமாக ஒழிக்க போதுமானதாக இல்லை. ஆனால், தன்னலமற்ற சேவை மூலமாக இன்னும் அனுபவிக்கப் படாத, வரவிருக்கும் கர்மங்களின் தாக்கத்தை குறைக்க முடியும்.

ஓர் துயரமூட்டும் காரியத்தின் நியாயத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாத பொழுது, நாம் தொந்தரவு மற்றும் அலைக்கழிப்புக்கு ஆளாகிறோம். இதனால் மனம் நிறையவே இழக்கிறது. அந்த நிகழ்வை தானே உருவாகிய ஒன்றாக ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், தொந்தரவும் அலைக்கழிப்பும் மெல்ல மறைந்து போகின்றன.

ஒரு விரும்பத்தகாத நிகழ்வுக்கு நாம் துலங்கும்போது, அதில் பங்கு கொண்ட மனிதர்களை குறியாகக் கொள்வதே வழக்கமாகிறது. அவர்களிடத்து மனவருத்தம் கொண்டு, திட்டம் தீட்டி, சில வகை பதிலடி கொடுக்க முயல்வது மனிதனின் இயல்புதான். இவ்வாறான துலங்குதல் இன்னும் அதிகப்படியான மன வலிகளை ஏற்படுத்த போவது வெட்ட வெளிச்சம், அதே வேளையில் முக்கிய கருத்தையும் தவறவிடுகிறது – நீயே உருவாக்கிய கர்மத்தின் பலனை அனுபவிக்கும் நோக்கிலேயே இந்த நிகழ்வு நடந்தது. இந்த மனிதர்கள் உன்னை, இவ்வாறு தவறாக நடத்தவில்லை எனில், எதிர்காலத்தில் யாரேனும் மற்றவர்கள் கண்டிப்பாக செய்தே தீர்வார்கள். புவியீர்ப்பு சக்தி போலவே, கர்மம் என்றுமே தவறாத ஒரு தத்துவம், இதை நாம் ஒட்டு மொத்தமாக தவிர்ப்பது என்பது இயலாது.

 
எனது குரு, சிவாய சுப்பிரமுனிய-சுவாமி, அடுத்தவர் மீது குற்றம் சுமத்துவதற்கு எதிராக உறுதியாகப் பேசியிருந்தார்: “உனக்கு நடந்த ஒன்றுக்காக அடுத்தவர் மீது பழியைப் போடும் ஒவ்வொரு நேரமும், அல்லது எப்பொழுதாவதும் குற்றம் சுமத்துவதற்கு முன்னர், உனக்கே நீ சொல்லிக் கொள். ‘இது எனது கர்மம் இதை சந்திப்பதற்கே நான் பிறந்திருக்கிறேன். ஜட உடல் பிறவி கொண்டிருப்பது, எனக்கு நடப்பவற்றை மற்றவர்கள் மீது பழி சுமத்துவதற்காக அல்ல. எனது கர்மங்களை எதிர்கொள்ளும் திறமையில்லாத, அறியாமையான மனநிலையில் வாழ நான் பிறக்கவில்லை. நான் இங்கு வந்தது ஆன்மீகத்தில் மலர்ச்சி பெறுவதற்கு, இந்த மற்றும் பல பிந்திய பிறவிகளின் கர்மங்களை ஏற்றுக் கொண்டு, அவற்றைச் சந்தித்தும், சரியான, சிறந்த வழியில் கையாளுவதற்கும்தான்.’”

மற்றவர்களிடத்து பழி சுமத்தாமல் இருப்பது முதல் அடி. இரண்டாவது அடி – உன்னை தவறாக நடத்தியவர்களிடத்து தோன்றும் கடும் உணர்ச்சிகளை துடைத்து நீக்க – நீ திருக்குறள் காட்டும் அறிவுரையைப் பின்பற்றலாம்: “நீ பெற்ற காயங்களுக்கு கருணையை திரும்பச் செலுத்தி, இரண்டையும் மறந்தால், உனக்கு தீங்கிழைத்தவர்கள் தமது சொந்த வெட்கத்தாலேயே தண்டிக்கப்படுவர்.”

ஒரு விரும்பத்தகாத கர்ம பலனை திரும்பப் பெறுனராக இருப்பது, அந்த அனுபவத்திலிருந்து பாடம் பயிலும் வாய்ப்பை நமக்கு கொடுக்கிறது. நாம் தற்போது நடத்தப்படுவது நாம் எவ்வாறு மற்றவரை கடந்த காலத்தில் நடத்தினோம் என்பதைப் போன்றதுதான். ஒரு வியாபார நண்பனிடம் இருந்து நாம் பணத்தை கடந்த காலத்தில் திருடி இருப்பின், அதே அனுபவம் நமக்கு ஏற்படும் – உடனடியாக இல்லாது இருப்பினும், கால ஓட்டத்தில் நிகழும். கர்மபலன், இளையோர் சொல்லும் ‘அனுபவித்துதான் ஆகனும்’ என்பது, நமது தவறான செயல்களின் பொழுது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்திய உணர்ச்சிகளை நாமே அனுபவிக்கச் செய்கிறது. இவ்வாறு அறிதல் பெருமளவில் நமக்கு வேதனைகளையும் வலியையும் ஏற்படுத்தி, நாம் மீண்டும் ஒருவரை வஞ்சிக்காமல் இருக்கச் செய்யும். இவ்வாறாக கர்மம் ஓர் ஆசிரியர் ஆகிறது. நமது செயல்களின் பின்விளைவுகளைப் பற்றி நாம் இன்னும் சிறப்பாக அறிந்து கொள்ள இது நமக்கு போதிக்கிறது. மட்டுமல்லாது நாம் விழிப்புடன் இருக்கையில், நாம் நம் நடத்தையை இன்னும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

நமது அனுபவங்களில் இருந்து பாடம் கற்பதன் முக்கியத்தைப் பற்றி குருதேவர் பேசியிருந்தார்: “வாழ்க்கையின் அடிப்படை சட்டங்கள் மிக எளிமையானவை, அதனாலே பலர் அவற்றைக் கருதுவதில்லை. ஏன்? பொதுவில் நாம் இத்தகைய சோதனைகளில் தோல்வி காணும்படி கொடுக்கப்படும் வாய்ப்புகள் பலப் பல, ஆகையால் நாம் நமது பாடங்களில் கவனம் செலுத்தாமைக்கு மிகச் சிறப்பான காரணங்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். இத்தகைய சோதனைகள் சிலவற்றில் தோல்வி காண்பது இயற்கைதான் என்று நாம் சொல்லலாமா? ஆம், இதுவும் ஒரு தேர்வில் தோல்வி கண்டு , மதிப்பீட்டுத் தாளில் தேர்ச்சி இல்லை என்பதால் மீண்டும் அதே வகுப்பில் அமர வேண்டுயுள்ளது போலத்தான்? நாம் கண்டிப்பாக நமது அனுபவங்களில் இருந்து பாடம் பயில வேண்டும், இல்லையேல் நாம் அவற்றை மீண்டும் திரும்பத் திரும்பச் செய்கிறோம்.

இந்துக்கள் என்னை வழக்கமாக கேட்கும் மற்றொரு விஷயம், ஏன் இன்றைய உலகில் இவ்வளவு அதிக வன்முறை நிலவுகிறது? சவால் மிக்க இந்த கேள்வியின் அதி தீவிர தோற்றம், “உலகில் இவ்வளவு வன்முறை இருக்கையில், எவ்வாறு கடவுள் இருக்கிறார் என்பது?”

“தொடரும் ஆயுதமேந்திய போராட்டங்களின் பட்டியல் ” என்ற விக்கிபீடியா பக்கம் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவு போராட்டங்களை கொண்டுள்ளது. இந்த ஆயுதமேந்திய போராட்டளுக்கான காரணத்திற்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க மனித இனம் சம்பந்தமானது. துரதிஷ்டவசமாக, இந்த புவியில் இன்னும் குறிப்பிடத்தக்க அளவு “குலமரபு” உயிரோடுள்ளது. குலமரபு என்பது “குலம் சார்ந்த உணர்ச்சி மற்றும் விசுவாசம், குறிப்பாக மற்றவற்றைவிட தான் சார்ந்த குலம் மேலானது என்று போற்றுதல்” வேறு வகையில் சொல்லப் போனால், ஒரு பூசலில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் தனது கூட்டத்தின் நம்பிக்கைகள், கலாச்சாரம், மொழி போன்றவை பல மற்றவர்களாலும் பின்பற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். வெவ்வேறான வாழ்க்கை முறைகளை ஏற்பமைவு செய்வது குறைவாக உள்ளது.

இதற்கு மாறாக, இன்று பல நாடுகள் தமது பன்மைவாதத்தினால் அறியப்பட்டுள்ளன, இது “பல்வகையான இனம், மதம் மற்றும் சமூக கூட்டங்கள் தத்தம் சுய பாரம்பரிய கலாச்சாரம் அல்லது குறிப்பிட்ட விருப்புகளை ஒரு பொது நாகரீகத்தின் வரையறைக்குள்ளாக நிலைநிறுவியும் மேம்படுத்தியும் வரும் சமூகநிலை” என்று பொருள் கொள்ளப்படுகிறது.
 

வன்முறைகளும், போரிடும் முரண்பாடுகளும் எவ்வகையிலும் கடவுளுடன் சம்பந்தப்படவில்லை என்ற பார்வைக் கோணத்தை ஏற்கலாம் என்பதே எனது அறிவுரை; இவை குலமரபு நம்பிக்கையை கெட்டிப்பிடித்திருக்கும் நபர்களிடமிருந்தே தோன்றுகின்றன. இந்த பார்வையைக் கொண்டிருப்பதனால், நாம் தினமும் காணும் பெருமளவு வலிகளினால் ஏற்படும் மன தொந்தரவுகளை போக்கலாம். எனது குரு போதித்து இருந்தார்: “முதலில், இது ஒரு மகத்தான உலகம், உலகில் தவறானது என்ற ஒன்று இல்லவே இல்லை என்ற பார்வைக் கோணத்தைப் பெற வேண்டும்.”

வாழ்க்கையின் கஷ்டங்களை நாம் சந்திக்க உதவும் மேலும் இரண்டு இந்து பார்வைக் கோணங்கள்: 1) சிலர் தீயவர்கள்/ பாவிகள் என்றும் சிலர் நல்லவர்கள் என்றும் பார்க்கும் கருத்தை இந்துக்கள் ஏற்பதில்லை. ஒவ்வொரு தனிநபரும் ஓர் ஆத்மா, ஒரு தெய்வீகப் பொருள், அது இயல்பிலேயே நன்மை பொருந்தியது. 2) ஒட்டுமொத்த உலகம் யாவும் ஒரே குடும்பம், “வாசுதைவ குடும்பகம்.”
 

கிட்டத்தட்ட உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் குடும்பம் சார்ந்தே இருக்கின்றனர். நமது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாக்குவதே பெரும்பாலான மனித முயற்சிகளின் குறிக்கோள் ஆகும். குடும்பத்தார் மகிழ்ச்சியாக, வெற்றிகரமாக, ஆன்மீகத்தில் நிறைவு அடைய வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். ஒட்டு மொத்த உலகமும் ஒரே குடும்பம் என நாம் வரையறுக்கையில், உலகில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாகவும், நிறைவு பெற்றும் இருக்க நாம் விரும்புவோம்.

சுருங்கக் கூறின், என்றும் தவறாத கர்மநீதியின் ஆற்றலின் காரணமாக, நாம் தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் செய்த காரியங்களின் பலன்கள் நம்மிடமே காந்தம்போல் இழுக்கப்படுதனால் தீய நிகழ்வுகள் நமது வாழ்வில் நிகழவே செய்யும், ஆனால் இந்த நிகழ்வுகள் ஒரு தொந்தரவு, அலைக்கழிப்பு, கடவுளிடத்து அவநம்பிக்கை மற்றும் மற்றவரிடத்து பழி சுமத்துதல் போன்றவைக்கான மூலமாகக் கூடாது. மாறாக, நாம் உருவாக்கிய சுய கர்மமாக அவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும், வாழ்க்கை கஷ்டங்களில் இருந்து பாடம் பயின்று அதே சுழலை மீண்டும் உருவாக்காமல் இருக்க வேண்டும். உலக அளவில், நடக்கும் நிகழ்வுகள் ஒட்டிக் கொண்டிருக்கும் குலமரபு பற்றின் காரணத்தினால்தான் என ஏற்றுக்கொள்ள வேண்டும். பொது ஜன உணர்வுநிலை மெதுவாக உலகாய பன்மைவாதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. எல்லா மக்களும் தெய்வீகம் பொருந்தியவர்கள், சர்வ உலகமும் ஒரே குடும்பம் என்ற பார்வைக் கோணம் ஆகிய நமது இந்து நம்பிக்கையை பகிர்ந்து கொள்வதில் நாமும் முன்னோடியாக இருக்க வேண்டும்.

अयं बन्धुरयं नेति गणना लघुचेतसां उदारचरितानां तु वसुधैव कुटुम्बकं 

“சிறிய மனிதனே பாகுபாடு செய்து, செல்கிறான்: ‘ஒருவன் எனது உறவினன்; அடுத்தவன் அன்னியன்.’ மகத்தான வாழ்வு வாழ்பவர்களுக்கு, சர்வ உலகமும் ஒரே குடும்பம்.” மஹா உபநிடதம், அதிகாரம் 6, வாசகம் 72.

Leave a Comment

Your name, email and comment may be published in Hinduism Today's "Letters" page in print and online. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top