இந்து மதத்தின் பெரும்பான்மையோர் பூண்டுள்ள கோயில் வழிபாட்டு முறையில் அடங்கியிருக்கும் மறைமெய் கூறுகளையும் ஞானத்தையும் ஆழ்ந்து சிந்திக்கிறோம்.

English |
Tamil |
Kannada |
Hindi |
Portuguese |
Marathi |
Spanish |

கோயிலில் வீற்றிருக்கும் தெய்வ மூர்த்தத்தின் வழிபாட்டை காய்கறி குழம்பு ஒன்றை தயாரிப்பதுடன் ஒப்பிட்டு பார்ப்போம். குழம்பை தயாரிக்கும் நோக்கில் நீங்கள் காய்கறிகளை கழுவுகிறீர்கள், தோல் அல்லது சாப்பிட ஆகாத பகுதிகளை நீக்குகிறீர்கள், எல்லாவற்றையும் சரியான அளவில் வெட்டி வைக்கிறீர்கள். ஒரு பானையில் சிறிது எண்ணையை ஊற்றி சூடாக்குகிறீர்கள், முழு மசாலா பொருள்கள், காய்ந்த மிளகு, தானியங்கள் மற்றும் தேவையான பருப்பு ஆகியவற்றை சேர்க்கிறீர்கள். தானியங்கள் சரியாக வெந்து மணம் கமழும் நேரத்தில், கறிவேப்பிலையும் வெங்காயமும் சேர்க்கப்படுகின்றன. சற்று பொன்னிறம் ஆனதும் தக்காளி சேர்க்கப்பட்டு மேலும் சிறிது நேரம் அனலில் வேக வைக்கப்படுகிறன. அடுத்ததாக உப்பு, மஞ்சள் மற்றும் குழம்பு தூள் போன்ற மாசாலா தூள்கள் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சற்று நேரம் சூட்டிலேயே இருக்கிறது. இறுதியாக பச்சையான அல்லது அவித்த, அல்லது பொரித்த காய்கறிகள் சேர்க்கப்பட்டு, பூரணம் அடையும் வரை வேக வைக்கப்படுகின்றன. எந்த ஒரு சிறந்த சமையல்காரரும் ஒப்புக் கொள்வது போல, சாதாரண பல காய்கறிகளில் இருந்து சுவைமிகுந்த ஒரு குழம்பு உருவாகுவதற்கு நிறைய பொருள்கள் தேவைப்படுகின்றன. அவ்வாறான உணவு பண்டம் நமது உடம்பிற்கு நன்மை கொடுக்கிறது, அது போலவே கோயிலில் நடக்கும் பூஜையினால் நமது ஆத்மாவிற்கு சத்து கிடைக்கிறது.

ஒரு பூஜை சக்திமிக்கதாக இருக்க வேண்டுமாயின், தெளிவான செயல்முறை ஒன்று பின்பற்றப்பட்டு, முக்கியமான மூலப்பொருள்கள் ஆங்கே இருக்க வேண்டும்.

1. முதலாவது அந்த கோயிலின் உள்உலகங்களுடனான தொடர்பின் தன்மையாகும், இது கோயில்களுக்கு இடையே வித்தியாசப்படுகிறது. இது பலம் மிகுந்த ஒன்றாக இருக்க வேண்டும். கணிணி நெட்வொர்க் ஒன்றை இணையத்துடன் சேர்க்கும் செயலுடன் இதை நாம் ஒப்பிடலாம். மிக வேகமான ஆப்டிகல் தொடர்புடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், ஒரு T1 இணைப்பில் சிறிய அளவிலான தகவலை மட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும். ஒரு கோயிலின் உள்உலகத் தொடர்பின் பலம் மூன்று கூறுகளை ஒட்டி உள்ளது: அந்த தெய்வத்தின் ஞானக் காட்சியை ஒட்டி நிறுவப்பட்டமை, பக்திமிக்க பூஜைகள் எவ்வித முறிவும் இன்றி தொடர்ந்துள்ள காலம், ஒவ்வொரு வருடத்திலும் பலமாக செய்யப்பட்ட பூஜைகளின் எண்ணிக்கை.

சக்திமிக்க ஒரு பூஜைக்குத் தேவையான இரண்டாவது மூலப்பொருள் பூஜைக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் நேரம் அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு உகந்ததாக இருக்க வேண்டும், உதாரணம் ஒவ்வொரு வருடமும் நிகழும் உற்சவ நாளாகிய கணேச பெருமானுக்கான கணேசர் சதுர்த்தி, வழிபாட்டிற்கு மிகவும் உரித்தானது. மாதம் ஒருமுறை வரும் மாதாந்திர சதுர்த்தி திதியும் மற்றைய நாள்களைக் காட்டிலும் அதிக சிறப்பாகக் காணப்படுகின்றன. இந்த இரண்டு உதாரணத்திலும் குறிப்பிட்ட ஒரு திதி அல்லது நட்சத்திரம் சக்திமிக்கதாக இருக்கும் காலகட்டம்தான் உகந்த நேரம் எனப்படுகிறது. உதாரணத்திற்கு, 2020இல் ஹவாயி தீவில் கணேசர் சதுர்த்தியின் நேரம் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி காலை மணி 7 முதல் 22 ஆம் தேதி காலை மணி 5 வரை நீடித்திருந்தது. பக்தர்களின் வசதிற்காக சில கோயில்கள் வருடாந்திர உற்சவங்களை வார இறுதிகளில் செய்கின்றனர், சில சமயங்களில் அதற்குரிய உகந்த காலம் சில நாட்களுக்கு முன்னரே கழிந்து இருக்கும். இது உத்தமம் அல்ல.

மூன்றாவது மூலப்பொருள் பூஜையை நடத்தும் பூஜாரி அல்லது பூஜாரிகளின் திறமை, அறிவு, தூய்மை மற்றும் மறைமெய் புரிந்துணர்வு ஆகியனவற்றுடன் அவர்களது சுய பக்தியின் ஆழமும் ஆகும். பூஜையின் பொழுது, மந்திரங்கள், முத்திரைகள் மற்றும் மறைமெய் சடங்குகள் மூலமாக, பூஜாரிகள் குறிப்பிட்ட தெய்வத்தை பிரசன்னம் ஆகச் செய்கின்றனர். அந்த தெய்வத்தை விக்கிரகத்தில் எழுந்தருளும் படியும், பக்தர்களின் வேண்டுதல்களை ஏற்றுக் கொள்ளும்படியும், அனைவரின் மீதும் ஆசீர்வாதங்களையும் அன்பையும் பொழியும் படியும் அவர்கள் தெய்வத்தை கோருகின்றனர். எனது குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமி, இந்த செயல்முறை பற்றி மேலதிக உள்நோக்குகளை வழங்குகிறார்: “நீங்கள் அந்த தெய்வத்தை கோயிலில் வழிபடும் பொழுது, பூஜை மற்றும் சடங்குகள் மூலமாக, நீங்கள் அந்த தெய்வீகத்தை உள்உலகத்திலிருந்து வெளிஉலகத்திற்கு கொண்டு வருகிறீர்கள். நீங்கள் உங்களது வழிபாடு மற்றும் பக்தி, உங்களது சிந்தனா ரூபங்கள், மேலும் உங்களது ஜட உடம்பின் சக்தி வெளிப்பாடு ஆகியன மூலமாக ஆற்றலைச் செலுத்துகிறீர்கள். பூஜாரி அந்த கல் மூர்த்தத்தைத் தூய்மை செய்வதும் ஈர்ப்பைத் தோற்றுவிப்பதும் இந்த நோக்கில்தான். தெய்வங்களும் தேவதைகளும் கூட தங்களது சக்தியினால் அந்த விக்கிரத்தின் ஈர்ப்பை அதிகமாக்குகின்றனர், சரியான தருணம் வந்ததும் அவர்கள் உள்உலகத்திலிருந்து வெளிஉலகத்திற்கு வந்து மக்களை ஆசீர்வதிக்கின்றனர். அவர்கள் நொடிப்பொழுது நேரமே இங்கு தங்கியிருந்ததாக நீங்கள் கண்டாலும், அவர்களுக்கு அது நீண்ட காலம் ஆகும். உல்உலகங்களில் கால உணர்வு வித்தியாசமாக உள்ளது.”

சமஸ்கிருதம் அல்லாத மொழிகளில் பூஜை செய்வது நவீன காலத்து இந்து மதத்தில் காணப்படும் ஒரு போக்கு ஆகும். பக்தர்கள் என்ன ஓதப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள இயலும் என்பது இதற்கு சொல்லப்படும் ஒரு நியாயம். கண்டிப்பாக, இந்த கருத்து மந்திரங்களுக்கு மூலமாக இருக்கும் மறைகளான வேதங்களாலும் ஆகமங்களாலும் ஆதரிக்கப்படவில்லை. பாரம்பரியமாக மந்திரங்கள் சமஸ்கிருத மொழியில் மட்டுமே ஓதப்படும். சமஸ்கிருதத்தில் ஓதுகையில் தோன்றும் சக்தியானது பிராந்திய மொழி பயன்பாட்டின் பொழுது ஏற்படுவதில்லை என்பதை நான் அனுபவத்தில் கண்டுள்ளேன். பூஜா மந்திரம் ஓதுதல் சமஸ்கிருதத்தில் நன்றாகச் செயல்படுகின்றன, அதனால் குறிப்பிட்ட தெய்வத்தின் பிரசன்னம் மிகச் சிறப்பாக வெளிக் கொணரப்படுகிறது என குருதேவர் உறுதியுடன் கூறியுள்ளார். பிராந்திய மொழிகளில் காணப்படும் எண்ணிலடங்காத பக்தி பாடல்களை, அம்மொழிகளிலேயே பாடுவது மனதைக் கடவுளின் அன்பில் உருகச் செய்யும் ஆற்றல் கொண்டுள்ளன. பிராந்திய மொழிகள் விளக்கம் அளிக்கும் காரியங்களில் தலைச்சிறப்பாக செயல்படுகின்றன எனவும் அவர் கண்டுள்ளார்.

4. நான்காவது மூலப்பொருள் நமது வாசகர்களுக்கு வியப்பூட்டும் ஒன்றாக இருக்கலாம் – வழிபாட்டில் கலந்து கொண்டிருப்பவர்களின் பக்திமிக்க செயல்கள் பூஜையின் சக்தியில் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. சன்னியாசிகள் குவாய் ஆதீனத்தில் செய்யும் பூஜையைக் கவனித்ததால் இது பல ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு தெரிய வந்தது. சன்னியாசிகள் நடு இரவு, பின்னிரவு மற்றும் அதிகாலை பூஜை என பல பூஜைகளை செய்கிறார்கள், அக்காலங்களில் வெளியிலிருந்து பக்தர்கள் கலந்து கொள்வதில்லை. பக்தர்கள் மரியாதைமிக்க மனோநிலையோடு கலந்து கொள்வது பூஜையில் சக்தியை கூட்டும் முக்கிய மூலப் பொருளாகிறது. ஏன்? காரணம் பக்தர்கள் தங்களது வழிபாடு, தங்களது இறை ஆசீர்வாதத்திற்கான ஏக்கமிக்க தேடல், தங்களது சிந்தனா ரூபங்கள், தங்கள் ஜடவுடல் இருப்பு ஆகியவற்றினால் சக்தியைச் சேர்க்கின்றனர்.

5.ஐந்தாவது மூலப்பொருள் வெட்டிய பழம், சமைத்த உணவு, நீர், மணமிகுந்த மலர்கள் மற்றும் பால் ஆகியவற்றைப் படையல் செய்வது ஆகும். பூஜையின் உள்ளார்ந்த செயல்பாடுகளில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த தெய்வம் படைக்கப்படும் ஜடப் பொருளை பயன்படுத்துவதில்லை, மாறாக பூஜாரி தன்னிடம் படைக்கும் அந்த பொருள்களில் நிறைந்திருக்கும் உயிர்ச் சக்தி அல்லது பிராணனை பயன்படுத்துகிறது.

இதே கொள்கைகள் ஹோமம் எனப்படும் அக்னி சடங்கிலும் காணப்படுகின்றன. பெங்களூருவில் உள்ள கைலாச ஆசிரமத்தின் பீடாதிபதியான ஜெயேந்திரபுரி மஹாசுவாமிகள், ஹவாயியில் இருக்கும் எங்கள் ஆசிரமத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்திருந்தார். அவரது மூன்று பூஜாரிகள் நமது கடவுள் கோயிலில், தாங்கள் கொண்டு வந்திருந்த வகைவகையான தானியங்களும் விறகு வகைகளும் கொண்டு பெரும் யாகம் ஒன்றைச் செய்தனர். அக்னி தேவன் அந்த யாகப் பொருள்களை தூயமான வடிவில் தெய்வத்திடம் கொண்டு சேர்க்கிறார், தெய்வம் அதனை அங்கு வந்திருப்போரை ஆசீர்வதிக்க உபயோகிக்கும் நோக்கில் என சுவாமிகள் விளக்கியிருந்தார்.

ஒரு பூஜையில் மேல்கூறப்பட்ட ஐந்து மூலப்பொருள்கள் யாவும் ஒரு சேர இருக்கையில், அந்த சடங்கு கண்டிப்பாக ஒரு சக்திவாய்ந்த நிகழ்வாக அமையும், ஆங்கே உள்உலகங்களில் இருந்து குறிப்பிடத்தக்க ஆசீர்வாதங்கள் வெளிக்கொணரப்படும். ஒரு நடுத்தர அளவு பூஜையில், அந்த தெய்வத்திடமிருந்து வரும் ஆசீர்வாதங்கள் இறுதி ஆரத்தியின் காலத்தில் நிகழ்கிறது. இன்னும் விளாவாரியான பூஜையில் அலங்கரிக்கப்பட்ட தெய்வத்தை காண்பிக்கும் நோக்கில் திரை விளக்கப்படும் நேரத்திலும் ஆசீர்வாதங்கள் வழிந்தோடுகின்றன. இந்த இரண்டு வேளைகளிலும் அந்த தெய்வமும் அதன் உதவி தேவதைகளும் தாங்கள் முன்னர் பெற்றுக் கொண்ட பிராணனை ஒவ்வொரு பக்தரின் ப்ரபா மண்டலத்திலும் செலுத்துகின்றனர், ஆழ்மன நெரிசல்களை தூய்மையாக்குகின்றனர். இவ்வாறாக ஆசீர்வதிக்கப்பட்ட பக்தர்கள் உற்சாகமூட்டப்பட்டதாக உணர்கின்றனர், பாரமான மனச்சுமைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுகின்றனர். சிலர் மேலும் அமைதி மிக்க வாழ்க்கை வாழவும், இல்லத்தில் மேலான சாந்தம் நிகழவும், சமுதாயத்தில் அதிக ஏற்புடைமை கொண்டிருக்கவும் தூண்டப்படுகின்றனர். மற்றவர்கள் புனித இசை, ஓவியம் மற்றும் நாட்டியம் போன்றவை மூலமாக பாரம்பரிய இந்து கலாச்சாரத்தை முன்னெடுக்கவும், தொடர்ந்து நிலைப்படுத்தவும் உற்சாகம் பெருகின்றனர்.

வேறு சிலருக்கு அந்த தெய்வத்திடருந்து வாழ்க்கையைத் திருப்புமுனை செய்யும் செய்தி ஒன்றும் வரலாம். குருதேவர் இந்த மறைமெய் செயல்பாட்டை விவரிக்கிறார்: “தரிசனம் என்பதை புரிந்து கொள்ள, தினசரி ஆனால் நுட்பமாக நிகழும் மொழி ஊடான தொடர்பைக் கவனியுங்கள். எனது குரலின் பல தொனிகளை ஒரு நுட்பமான உறுப்பான உங்கள் காதினால் கேட்கிறீர்கள். அர்த்தம் உங்கள் மனதில் பெறப்படுகிறது, காரணம் இந்த அதிர்வுகளை அர்த்தங்களாக பெயர்ப்பு செய்யும் நோக்கில் நான் பேசும் பாஷையை நீங்கள் கற்று இருக்கிறீர்கள். தரிசனம் என்பதும் ஓர் அதிர்வலைதான். முதலில் அது மூலஸ்தானத்திலிருக்கும் தெய்வத்தின் உருவத்தை பார்க்கும் எளிய முறையில் நிகழ்கிறது. பிறகு அந்த ஜடப் பார்வை புலன் கடந்த பார்வைக்கு வழிவிடுகிறது அல்லது உங்கள் நரம்பு மண்டலத்திலிருக்கும் அதியுணர்வுமிக்க நாடிக் கொத்துக்களாகிய சக்கரங்களின் மூலமாக பெறப்படும் நுட்பமான அறிவுநிலையாக இருக்கலாம். இந்த செய்தி வந்தடையும் ஏற்பிகள் மூலமாக, பெரும்பாலும் நாம் வெளிப்படையாக அறியாத வகையில் ஒரு நுட்பமான செய்தி பெறப்படுகிறது. ஒரு வேளை உடனடியாக இல்லாவிட்டாலும், அந்த மஹாதேவனிடமிருந்து நேரடியாக அந்த தரிசனம் கொணரும் செய்தியானது – நேரடியாக கணேச பெருமான், முருகப் பெருமான் அல்லது நேரடியாக சிவபெருமான் அவரிடமிருந்து – உங்கள் வாழ்க்கையில் உருவாக்கம் பெருகிறது.”

“இவ்வாறுதான் தெய்வங்கள் பேசுகின்றன. இந்த தொடர்பு நீங்கள் மொழி மூலமாக தினசரி அனுபவிப்பதை விட இன்னும் நிஜமானது. அந்த தொடர்பை உடனடியாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற தேவை இல்லை. ஒருவேளை பக்தர் எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை அல்லது அல்லது கிடைத்த தரிசனத்தின் பொருள் என்ன என்பதை தெளிவாக தனது பகுத்தறிவினால் அறியாமல் கோயிலை விட்டு புறப்படலாம். இப்பொழுது நீங்கள் படிக்கும் வார்த்தைகள் ஒரு வேளை பல நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்களுக்கு கூட முழுமையாக அறியப்படாமல் இருக்கலாம். ஓர்ந்து பார்க்கையில்தான் அர்த்தத்தின் ஆழம் வெளிப்படுகிறது.”

அடுத்த முறை நீங்கள் ஒரு கோயில் பூஜை அல்லது ஹோமத்தில் கலந்து கொள்ளும் பொழுதில், அதனை கடவுள் மற்றும் தெய்வங்களுடன் நாம் கொள்ளும் ஆழமான ஒரு புனித தொடர்பாக உருமாற்றும் பல அம்சங்களை ஓர்ந்து பாருங்கள்.