வீட்டிலிருந்தே வேலை செய்வதுதான் எதிர்கால உலகமா?

ஒரு சிறிய கிருமி புதிய வாழ்க்கை முறையை உலகத்தில் கொண்டு வந்துள்ளது. இதற்கு நாம் எவ்வாறு துலங்குகிறோம் என்பது நமது குடும்பங்களையும் இல்லங்களையும் மறுவரையறை செய்யும்.

சத்குரு போதிநாத வேலன்சுவாமிகள்

English |
Tamil |
Kannada |
Hindi |
Portuguese |
Marathi |

உலகின் பல பகுதிகளில் கோவிட்-19 உலகாய நோய் தொற்று காரணமாக அரசாங்கள் வீட்டு-முடக்கம் ஊரடங்கு நிலைகளை ஏற்படுத்தியுள்ளன. வேலையாட்களும் மாணவர்களும் உற்பத்தி திறன்மிக்கவாறு வீட்டிலிருந்து வேலை செய்யும் வண்ணம் பல முதலாளிகளும் போதனையாளர்களும் தமது வியாபாரத்தை மறுநிர்மாணம் செய்துள்ளனர். இதனால் எதிர்பார்க்காத பின்விளைவுகளும் உருவாகி உள்ளன என்பது மெல்ல நமக்கு தெளிவாகிறது, தற்காலிக வீட்டு-முடக்கம் உலகம் என்பது நிரந்தரமான வீட்டிலிந்து-வேலை உலகம் எனும் பரிமாண சாத்தியம் ஒரு வேளை உண்மையாகிக் கொண்டிருக்கலாம். இந்த மாற்றத்தை சித்தரிக்கும் இரண்டு உதாரணங்கள் இங்கே.

தனது 13 மே 2020 கட்டுரையில் போர்பெஸ் சஞ்சிகை இதை வெளியிட்டிருந்தது:
“டுவிட்டர் தலைமை நிர்வாகி ஜேக் டார்செய், ஓர் அடிப்படை-கட்டமைப்பு மாற்றமாக, கோவிட்-19 ஏற்படுத்திய நகர்வாக, தனது வேலையாட்கள் வீட்டிலிருந்தவாறே ‘எல்லா காலமும்’ வேலை செய்யலாம் என்ற அறிவிப்பைச் செய்தார். எல்லாருக்கும் இந்த தேர்வு ஏற்புடையதல்ல என்பதை புரிந்து கொண்டிருந்த அவர், வழக்கமான அலுவலக சூழலில் வேலை செய்ய விரும்புவர்களுக்கு அந்த தேர்வையும் அனுமதித்து இருக்கிறார். வீட்டிலிருந்து வேலை செய்வதா அல்லது அலுவலகத்திற்குச் சென்று பணியாற்றுவதா என்ற முடிவை வேலையாட்களிடமே அவர் விட்டுள்ளார். ஊரடங்கு நீக்க நேர நிர்ணயமும் வீட்டிலிருந்தவாறே பணியாற்ற கிடைத்த வாய்ப்பும் சேர்ந்து உருவான இந்த புதிய திட்டத்தினால், டுவிட்டரின் பெரும்பான்மையான பணியாளர்கள் நீண்ட எதிர்காலம் வரை வீட்டிலிருந்தே வேலை செய்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கலாம் – அல்லது எதிர்கால முழுமைக்குமே வீட்டிலிருப்பார்கள்.”

21 மே 2020 இல், நியூ யார்க் டைம்ஸ் எழுதியிருந்தது: “மார்க் சக்கர்பர்க், முகநூல் எனும் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியின் தனது பணியாளர்களுடனான சந்திப்பு கூட்டம் அவருடைய முகநூல் பக்கத்திலேயே நேரடியாக ஒளிபரப்பப் பட்டது, அதில் அவர் கூறியது ஒரு பத்தாண்டு காலத்தில் அந்த நிறுவனத்தின் 48,000 பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வீட்டிலிருந்தே வேலை செய்யக் கூடும் என்று. ‘கோவிட் நமது வாழ்க்கையை நிறையவே மாற்றி விட்டது, கண்டிப்பாக நாம் வேலை செய்யும் விதமும் இதில் அடங்கியுள்ளது,’ சக்க்ர்பக் கூறினார். இந்த கால கட்டத்திலிருந்து விடுபடும் நேரத்தில், தூரத்திலிருந்து வேலை செய்வது ஒரு பிரபலமான, விரும்பப்படும் தேர்வாகவும் இருக்கும்.’”

கோவிட்-19 துரிதப்படுத்தியுள்ள மற்றொன்று தொலைமருத்துவம் ஆகும். கோவிட்-19 நெருக்கடி காலத்தில் நோயாளிகளுக்கு வைத்தியம் செய்வதற்கு மருத்துவர்கள் தேவைக்கு ஏற்ப தொலைமருத்துவ பயன்பாட்டை பெருமளவு அதிகரித்துள்ளனர். தொலைமருத்துவ பயன்பாடு தொடர்ந்து வேகமாக வளரும் என பலர் கணித்துள்ளனர். 19 மே 2020 இல் டெக் ரெபப்லிக்கில் வெளியான ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது: “நாங்கள் பல வருடங்களாக மருத்துவர்களுக்கு சொல்லி வந்துள்ளோம், அதாவது 2024 காலத்தில் நோயாளி நேரடி சிகிச்சை பெருவதைக் காட்டிலும் தொலைமருத்துவ வருகைகள் அதிகமாக இருக்கும் என்ற செய்தியை. கோவிட் அந்த காலத்தை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் முன்னே இழுத்து வந்து விட்டது.” தமது வீடுகளில் இருந்தே தொலைமருத்துவத்தை மேற்கொள்ளும் சில மருத்துவர்களை நாம் அறிந்துள்ளோம்.

வீட்டிலிருதே வேலை செய்யும் பாணியை நாம் இந்து பார்வைக்கோணத்திலிருந்து இப்போது பார்ப்போம். தூரத்திலிருந்து பணியாற்றுவது அதிக நேரத்தை நமக்கு காப்பாற்றிக் கொடுக்கிறது, காரணம் பயணம் செய்ய தேவையில்லை. பலர் தமது அலுவலகம் அல்லது பள்ளியிலிருந்து தூரமாக வாழ்கின்றனர், இந்த இடங்களுக்குச் சென்று வர தினமும் குறிப்பிடத்தக்க அதிக மணி நேரம் செலவிடுகின்றனர். ஒரு நாளில் சேமிக்கப்படும் இவ்வாறான அதிகளவு மணிகளைக் கொண்டு நமது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள கிடைக்கும் நான்கு வாய்ப்புக்களை நாம் இங்கே பார்க்கிறோம்.

இல்லத்தின் பூஜை மாடத்திற்கு செழிப்பூட்டுவது

முதலாவது: கிடைக்கும் மேலதிக நேரத்தை வீட்டு பூஜை மாடத்தை பலப்படுத்துவதற்கு செலவிடுவதை விட வேறு எது சிறந்ததாக இருக்க முடியும். இந்து குடும்பங்களில் ஒரு குறிப்பிட்ட அறையை தேர்ந்தெடுத்து, அதனை கோயில் போன்ற ஒரு சூழலில் நிலைப்படுத்தி, அங்கு பூஜை செய்வது, மறைநூல் கற்பது, தியானம் செய்வது, ஆன்மீக சாதனைகள் செய்வது, பஜனை பாடுவது மற்றும் ஜெபம் செய்வது போன்ற காரியங்கள் செய்வது பாரம்பரியமாகும். எனது குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமிகள், பூஜை மாடத்தின் முக்கியத்துவத்தை தனது பல சொற்பொழிவுகளில் வலியுறுத்தியுள்ளார். அவர் எழுதியுள்ளவற்றிலிருந்து ஒரு பகுதி: எல்லா இந்துக்களுக்கும், சூக்கும உலகிலில் வசிக்கும் காவல் தேவதைகள் வழிகாட்டியும், காவல் செய்தும், அவர்களது வாழ்க்கையை பாதுகாத்தும் வருகின்றன. பக்தர்கள் தாம் அடிக்கடி செல்லும் கோயிலின் பெரும் மஹாதேவர்கள்
அந்த பக்தர்களுடனே தூதுவ தேவர்களை அனுப்பி வைப்பது உண்டு, பக்தர்களுடனே வாழும் பொருட்டு.

இவ்வாறான பார்வைக்கு புலப்படாத நிரந்தர விருந்தாளிகளுக்கு என ஓர் அறை விஷேசமாக ஒதுக்கப்படுகிறது, இங்கே ஒட்டு மொத்த குடும்பமும் அமர்ந்து, உள்ளூராக இந்த நுட்ப வஸ்துக்களுடன் தொடர்பு கொள்ள முடியும். இந்த வஸ்துக்கள் அக்குடும்பத்தை பல தலைமுறைகளாக பாதுகாக்க கடமை பூண்டுள்ளனர். அவர்களில் சிலர் அக்குடும்பத்தின் மூதாதையர் ஆவர். இந்த தெய்வீக வஸ்துக்களை கவர்வதற்கு படுக்கை அறையில் ஒரு சிறிய மாடம் அல்லது சமையல் அறையில் ஓர் அலமாரியோ சிறு சுவர் தடுப்போ போதுமானது அல்ல. தனது மதிப்புமிக்க விருந்தாளியை தம் அலமாரியில் தங்க வைப்பது இல்லை, அல்லது அவரை சமயலறையில் தூங்க வைத்து பின்னர் அவர் மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு செலுத்தப்பட்டதாக உணர்கிறார் என எதிர்பார்ப்பதும் இல்லை. விருந்தாளி என்பவர் தெய்வம் என எல்லா இந்துக்களுக்கும் சிறுவயதிலிருந்தே போதிக்கப்படுகிறது, எந்த விருந்தாளியாக இருப்பினும் ராஜ உபசரிப்பு கொடுக்கப்படுகிறது. இதனால் இந்துக்கள் கடவுளையும் கடவுளாகவே உபசரிக்கிறார்கள், தேவதைகளை தெய்வமாக பாவிக்கிறார்கள், அவர்கள் நமது இல்லத்தில் நிரந்தரமாக வாழ வருகையில். தாய்மார்கள், பெண் பிள்ளைகள், அத்தைகள், தந்தைமார்கள், ஆண் பிள்ளைகள், மாமாக்கள் என யாவரும் தம் சொந்த இல்லத்தில் பூஜை செய்கின்றனர், காரணம் வீட்டு பூஜை மாடம் என்பது அருகிலிருக்கும் தமது கோயிலின் நீட்டிப்பு செய்யப்பட்ட ஒரு பகுதியே ஆகும்.

அருகிலிருக்கும் கோயிலுக்கு அடிக்கடி சென்று வழிபடுவதன் மூலம் நமது வீட்டு பூஜை மாடத்தின் அதிர்வலைகளை நம்மால் பலப்படுத்த முடியும். பிறகு கோயிலில் இருந்து திரும்பியதும், ஓர் எண்ணை விளக்கை பூஜை மாடத்தில் ஏற்ற வேண்டும். இந்த காரியத்தால் கோயிலின் சமய ஆன்மீகச் சூழல் உங்கள் இல்லத்தில் பிரவேசிக்கும், கோயிலில் இருந்த தேவதைகள் உங்கள் வீட்டிற்குள்ளே கொண்டு வரப்படுப்படுகின்றனர். உள்உலகத்தில் இருந்தவாறே அவர்களால் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்கவும், குடும்ப உறுப்பினர்களுக்கு வழிகாட்டவும், இல்லத்தின் ஆன்மீக மண்டலத்தை பலப்படுத்தவும் இயலும்.

குடும்ப பிணைப்பு

வாகன பிரயாணம் இல்லாமல் போவதால், நேரத்தை பயனுள்ளவாறு பிள்ளைகளுடன் செலவிடுவது இரண்டாவது வாய்ப்பு ஆகும். வீட்டிலிருந்து வேலை செய்வதால், பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் இருக்கும் நேரத்தில் நீங்கள் உங்களது தொழிலில் கவனம் செலுத்தலாம், அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் உங்களால் அவர்களிடத்தில் கவனம் செலுத்தலாம். குடும்ப சந்திப்புகளுக்கு குருதேவர் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருந்தார், வாரம் ஒரு முறை “திங்கள் குடும்ப மாலைப் பொழுது” ஏற்படுத்த பரிந்துரைத்துள்ளார். இதோ அவரது விவரிப்பு: “திங்கள் குடும்ப மாலைப் பொழுது” இந்துக்கள் உட்பட பல மதத்தினராலும் பின்பற்றப்படுகிறது.

திங்கள் கிழமை, சிவனது நாளாகும், குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடுகின்றனர், அருமையான உணவு தயார் செய்கின்றனர், ஒன்றாக சேர்ந்து விளையாடுகின்றனர், ஒருவர் மற்றவரது நற்குணங்களை பாராட்டி பேசுகின்றனர். இந்த மாலைப் பொழுதில் தொலைக் காட்சி மூடப்பட்டிருக்கும் [தற்காலத்தில் சமூக ஊடகங்கள் பயன்பாடு இல்லாமலிருப்பது]. அந்நாளில் அவர்கள் எந்த பிரச்சனைகளையும் தீர்க்க முனைய மாட்டார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் அன்புடன் நோக்கியிருப்பார்கள், சிறு பிள்ளை முதல் முதிர்ந்த பெரியவர் வரையில், எல்லாருக்கும் குரல் எழுப்ப வாய்ப்புள்ளது. இது ஒரு குடும்ப ஒன்று கூடல், வாரத்தில் ஒரு நாள் மட்டும், எல்லாரும் தாயும் தந்தையும் வீட்டில் இருப்பதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதே வேளையில் திங்கள் கிழமையைத் தவற விட்டால், செவ்வாய் அல்லது மற்ற நாளில் செய்து கொள்ளலாம் என்று கிடையாது. திங்கள் குடும்ப மாலைப் பொழுது எப்பொழுதும் திங்கள் கிழமைதான், எல்லாரது வாழ்க்கையும் அதற்கு ஒத்துப் போக வேண்டும். 

இவ்வாறான நடவடிக்கையை குருதேவர் உண்மையான செல்வம் என விவரித்துள்ளார். “பல குடும்பங்கள் தமது தொழில் காரணமாக இது சாத்தியமில்லை என கண்டுள்ளனர். இந்நாளில் மக்கள் தமக்கு இரண்டு வருமானம், மூன்று வருமானம் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் சுகமாக வாழ முடியும் என நினைக்கின்றனர். பணம் கிடைக்கிறது, காணாமல் போகிறது, சில சமயங்களில் மிக சீக்கிரத்தில். சீக்கிரமாக கிடைத்தது பெரும்பாலும் சீக்கிரமாக போய் விடுகிறது. ஆனால் செல்வம் என்றால் என்ன? செல்வம் என்பது பல முகப்புகளைக் கொண்ட ஒரு வைரக் கல். ஒரு முகப்புதான் பணம், ஆனால் அது மட்டும்தான் அல்ல. ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தில் ஒருவர் மீது மற்றொருவர் களிப்பு கொள்கின்றனர் – இது ஒரு பெரும் செல்வம். வேலைகளைச் சேர்ந்து செய்வதும், சேர்ந்து வேலை செய்வதனால் களிப்புறுவதும் மற்றொரு பெரும் செல்வம்.”

வாழ்க்கையில் சமச்சீரை ஏற்படுத்துவது

தனது வாழ்க்கையில் அதிக செழிப்பையும் சமச்சீரையும் கண்டெடுப்பது மூன்றாவது வாய்ப்பு ஆகிறது. பயணம் செய்வதற்காக செலவு செய்யப்படும் காலம் ஒரு நாளுக்கான உடல் பயிற்சியின் அரை மணி நேரத்தை இல்லாமல் செய்து விடலாம். நவீன வாழ்க்கயின் அழுத்தங்கள் உடல் பயிற்சி செய்வதாலும், தினசரி ஹட யோக ஆசனங்களை வீட்டில் செய்வதாலும் குறைக்கப்படுகிறது. இது பெரும்பாலான அலுவலகங்களில் சாத்தியம் இல்லை. அழுத்தங்கள் எளிய தியான யுக்திகளினாலும் குறைக்கப்படலாம். கிடைக்கும் கூடுதல் நேரம் ஆரோக்கியமிக்க உணவு தயாரிக்கவும், வாழ்க்கையை செழிப்பூட்டும் நடவடிக்கைகளான கலாச்சார நிகழ்வுகள், சுற்றுலாக்கள் மற்றும் கற்றல் முயற்சிகளில் செலவிடப்படலாம்.
 

சமுதாயத்திற்கு சேவை செய்தல்

நேரம் எனும் இந்த பரிசை சமுதாயத்திடம் திரும்பக் கொடுப்பது நான்காவது வாய்ப்பு. எல்லா குடும்ப உறுப்பினர்களும் பங்கு பெறும் வகையில் சேவை காரியங்கள் உருவாக்கப்படலாம். சேவையின் முக்கியத்துவம் அதாவது தன்னலமற்ற தொண்டு, அதை செய்வதன் மூலமே இளையோரின் மனதில் பதிய வைக்கப்படுகிறது. தனது சொந்த குடும்பத்தினருக்காக மட்டுமே செல்வம் சேர்க்கும் வேட்கையினால் ஆன்மீகம் குன்றிப்போவதை தடுத்தல் சேவையினால் கிடைக்கிறது. நீங்கள் வசிக்கும் இடத்தில் இந்து சேவை வாய்ப்பு இல்லை என்றால், சுற்றுச் சூழல் மேம்பாடு, பேரிடர் நிவாரணம் அல்லது தேவைப்படுவோர்களுக்கு உணவு, உடை, பராமரிப்பு வழங்குதல் போன்றவற்றை பொது சமூகத்தில் தேடிப் பெறலாம். 2001 குஜராத் மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் பின், BAPSஇன் ப்ரமுக் ஸ்வாமி மஹாராஜ் தன் தொண்டர்களுக்கு கூறினார்: “மக்கள் கஷ்டங்களையும் துயரங்களையும் சந்திக்கையில், அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது நமது இந்திய பாரம்பரியம் ஆகும். மனிதர்களுக்கு சேவை செய்வதால் இறைவனுக்கே சேவை செய்யும் உணர்ச்சி நமக்கு ஏற்படுகிறது.”
 

வீட்டிலிருந்து வேலை செய்வதால் இன்னும் பல சாத்தியமான நிகழ்வுகள் தோன்றவே செய்யும். இங்குள்ள நான்கு கருக்களினால் உங்களது ஆக்ககரமான சிந்தனையைத் தூண்டப்பட்டு, அதனால் இல்லத்தில் ஆன்மீகம் அதிகரிக்கவும், உங்களது நலம் மேம்படவும், குடும்ப உறவுகள் பலம் பெறவும், பொது சமூக சேவை புரியவும் நீங்களே புதுப்புது வழிகளை காண்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம்.

Leave a Comment

Your name, email and comment may be published in Hinduism Today's "Letters" page in print and online. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top